என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பிராணிகள் வதை தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் தலைமையிலான போலீசார் லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு

    இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவி உள்பட 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட கோர்ட்டு 8 டிரைவர்களையும் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு விஸ்வ நாதன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

    அபராதம்

    இருதரப்பு வாதங்க ளையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவிக்கு ரூ.5 ஆயிரம், ஓலப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமிக்கு ரூ.4.800, ஈரோடு மணிகண்டனுக்கு ரூ.4,200, சத்தியமங்கலம் முருகேசனுக்கு ரூ.6 ஆயிரம், குணசேகரனுக்கு ரூ.6,600, ஈரோடு ஜெபருல்லா என்பவருக்கு ரூ.2 ஆயிரம், நீலகிரியை சேர்ந்த கலிமுல்லாவுக்கு ரூ.3 ஆயிரம், கேரளாவை சேர்ந்த ரகிம்மோன்ட் என்பவருக்கு ரூ.3,200 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மொத்தமாக 8 டிரைவர்களுக்கும் ரூ.34 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

    • தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மஞ்சகண்ணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயன் (18) என்பவர் தங்கி பயின்று வந்தார்.
    • இவர் கடந்த 18-ந் தேதி கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாணவர் தற்கொலை

    வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எர்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மஞ்சகண்ணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயன் (18) என்பவர் தங்கி பயின்று வந்தார்.

    இவர் கடந்த 18-ந் தேதி கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்மந்தமாக விஜயனின் தந்தை செல்வராசு வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விஜயனின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு (வீடியோ பதிவுடன்) செய்யப்பட்டு 19-ந் தேதி அவரது தந்தை செல்வராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நடவடிக்கை

    இந்த வழக்கு சம்மந்தமாக இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முறையாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மாணவர் இறப்பு சம்பந்தமாக தவறான வதந்திகள் பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

    வதந்திகள் பரப்புவோர் பற்றிய விவரங்கள் சமூக ஊடக பிரிவினர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    குமாரபாளையம்:

    சேலம் மாவட்டம் கருப்பூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மனைவி செல்வியுடன் (36) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலாங்காட்டுவலசுவில் தங்கி அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று செல்வி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பம்பு ஸ்டவ் வெடித்தது. இதில் அருகில் இருந்த செல்வி மீது தீப்பற்றியது. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் செல்வி கதறி துடித்தார். பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் செல்வி இறந்து போனார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
    • பஸ் நிலையம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பஸ் நிலையம் நகரின் நடுவில் அமைந்துள்ளது.

    பகல் மற்றும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. மேலும் வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டமும் இருந்து வருகிறது.

    எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோர் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பஸ் நிலையம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு கருதி விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்க கட்டிடப்பணி தொடங்கும் எனவும், மேலும் பஸ் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்து கம்ப்யூட்டர் மூலம் புறக்காவல் நிலையத்தில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி தொடங்கும் என இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.

    • இரவு சுமார் 10 மணி அளவில் பாண்டமங்கலம் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு கொளக்காட்டுப்புதூர் திரும்பி கொண்டிருந்தார்.
    • கோழிக்கடை அருகே வந்த போது திடீரென நாய்கள் சாலையின் குறுக்கே ஓடியது. இதில் ஒரு நாய் செந்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (42). இவர் மரம் ஏறும் கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த 15-ந் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் பாண்டமங்கலம் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு கொளக்காட்டுப்புதூர் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அ.தி.மு.க. ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள கோழிக்கடை அருகே வந்த போது திடீரென நாய்கள் சாலையின் குறுக்கே ஓடியது. இதில் ஒரு நாய் செந்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
    • இதையடுத்து 550 காசுக்கு விற்ற முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து 550 காசுக்கு விற்ற முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அய்யப்பன் சீசன் தொடங்கி உள்ளதால் முட்டை நுகர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 79 ரூபாயாகவும், முட்டைக்கோழி ஒரு கிலோ 88 ரூபாயாகவும் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களின் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை-610, பர்வாலா-536, பெங்களூரு-595, டில்லி-558, ஐதராபாத்-520, மும்பை-600, மைசூரு-595, விஜயவாடா-535, ஹொஸ்பேட், கோல்கட்டா-597 ஆக உள்ளது.

    • சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது.
    • இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடந்தது.

    நாமக்கல்:

    சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது. இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடந்தது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். அனைத்து மாவட்டங்களையும் விட மிகுந்த எழுச்சியோடு நாமக்கல் மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதன் மூலம் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டை மிகப்பெரிய வெற்றி மாநாடாக மாற்றி காட்டுவீர்கள் என நம்புகிறேன்.

    இந்தியாவிலேயே ஒரு இயக்கத்தில் முதன் முதலில் இளைஞர் அணி தொடங்கப்பட்டது தி.மு.க.வில் தான். அதை தொடங்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழக அரசு என்ன செய்தது என்று கேட்பவர்களிடம் 4 திட்டங்களை எடுத்து கூறினால் போதும்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால், ஒவ்வொரு பெண்களும் மாதம் ரூ.1,000 சேமிக்கிறார்கள். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவை தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களாகும். காலை உணவு திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிர் இதுவரை பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டங்கள் குறித்து பேசுங்கள்.

    சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தோல்வி பயம்

    பிரதமர் மோடி எங்கே போனாலும் தோல்வி பயத்தால் முதல்-அமைச்சர் பற்றியும், என்னை பற்றியுமே பேசுகிறார். மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் ரெய்டு நடத்தி வருகிறது. நீங்கள் எத்தனை `ரெய்டு' நடத்தினாலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பா.ஜனதாவுக்கு ரெய்டு விடப்போவது நிச்சயம்.

    நான் பேசாததை பேசியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதில் நான் ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது. எனவே நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ரூ.10 லட்சம் நிதி

    முன்னதாக இறந்துபோன இளைஞர் அணி நிர்வாகிகளின் குடும்பத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதிஉதவியை வழங்கினார். தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அவர் புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கினார்.

    பங்கேற்றவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்தகுமார், திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, அயலக அணி மாநில துணை செயலாளர் முத்துவேல் ராமசுவாமி, நாமக்கல் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, பூக்கடை சுந்தர், நவலடி ராஜா, கதிரவன், மல்லை ெஜகதீஷ், கார்த்திகேயன், முரளி, நாமகிரிபேட்டை ஒன்றிய செயலாளர் ராமசுவாமி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, பாண்டமங்கலம் பேரூர் செயலாளர் பெருமாள் என்கிற முருகவேல், பேரூராட்சி தலைவர் சோமசேகர், கட்சி பிரமுகர்கள் இளம்பரிதி, பிரபாகரன், கார்த்திக், ரமேஷ்குமார், கலைவாணன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இனியவன் இளங்கோவன், துணை தலைவர் குணாளன், அமைப்பாளர் விஜயபாஸ்கரன், துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், நல்லி சரவண குமார், சசிகுமார், முகேஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தர்மராஜன், துணை தலைவர் சோழா பிரகாஷ், அமைப்பாளர் சாதிக்பாட்ஷா, துணை அமைப்பாளர்கள் குமார், காமராஜ், கண்ணன், ஜி.கண்ணன், தயாநிதி, முரளி, சுடலை ராஜ், லோக விஜயன், அசோக்குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத் நன்றி கூறினார்.

    • அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 5 நபர்களுக்கு புறநோயாளிக்கான உள்நுழைவுச் சீட்டினை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலையில் வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 5 நபர்களுக்கு புறநோயாளிக்கான உள்நுழைவுச் சீட்டினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலையில் வழங்கினார்.

    700 படுக்கை

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் ரூ.159.452 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 488 சதுர அடி பரப்பளவில் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.

    நலத்திட்ட உதவிகள்

    இந்த விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.16.51 கோடி மதிப்பில் 186 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2450 உறுப்பினர்களுக்கு வங்கி பெருங்கடன், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,07,000 மதிப்பில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, 2 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பற்று அட்டைகள், 2 திருநங்கைகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட வாழ்த்து மடல், சுகாதார துறையின் சார்பில் ரூ.4,000 மதிப்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம், 2 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விளையாட்டு விழா-2023 போட்டியில் வெற்றி பெற்ற 1 நபருக்கு கோப்பை, ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவும் "விருட்சம்" அமைப்பின் மூலம் 3 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18,400 மதிப்பில் உதவித்தொகை என மொத்தம் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.92.30 லட்சம் மதிப்பில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உபகரணங்கள் பெறுவதற்காக காசோலையினை வழங்கினார்.

    மகிழ்ச்சி

    நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி மருத்துவ சேவையை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மருத்துவ சேவையை விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிற என்னை அழைத்து எதற்காக நமது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கச் சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்.

    பணிச்சுமை

    எல்லோரும் தினந்தோறும் நன்றாக விளையாடினால் தான், உடற்பயிற்சி செய்தால் தான் எதிர்காலத்தில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ முடியும். அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான பணிச்சுமையை குறைக்க முடியும் என்பதை உணர்த்த தான் நமது அண்ணன் மா.சு. என்னை அழைத்து இந்த மருத்துவச் சேவையை தொடங்கி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    நாமக்கல் மாவட்டம் பொதுவாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிற மாவட்டம். தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் பல மருத்துவர்களை உருவாக்கியது

    நாமக்கல் மாவட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் தான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் இன்னும் அதிகமான ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களால் மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கி தான் நம் அரசு செயல்பட்டு வருகிறது.

    நவீன வசதிகள்

    நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கின்றனர். ஆனால், இந்த மாவட்டத்துக்கென்று ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இல்லாமல் இருந்தது. இன்றைக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தக் குறை நீக்கப்படுகிறது என்பதில் நான் பெருமை அடைகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. இது தி.மு.க. அரசு முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 1967-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை தொடர்கிறது.

    கடந்த 2006-ம் ஆண்டிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று கலைஞர் கனவு கண்டார். அதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகள், கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டடங்கள் தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டன.

    நதி நெருக்கடி

    இன்றைக்கு கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தான் இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதியை ஒதுக்கி தந்துக் கொண்டிருக்கிறது. நகரப் பகுதிகளில் வாழுகிற மக்களுக்கு இருக்கிற மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் வாழுகிற மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அடுத்து, மருத்துவச் சேவையைத் தேடி மக்கள் வருவதைக் காட்டிலும் மக்களைத் தேடி மருத்துவச் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது.

    தமிழ்நாட்டின் பல நகரப் பகுதிகளில் இருக்கிற அரசு மருத்துவமனைகளை மட்டுமல்ல கிராமப் பகுதிகளில் இன்றைக்கு இருக்கக் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் பலவற்றை தி.மு.க. அரசு தான் ஏற்படுத்தியது.

    இப்போது நமது முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 8 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 4 கோடியே 95 லட்சம் கோடி ரூபாய் செலவில் 11 ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 80 லட்சம் ரூபாய் செலவில் கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

    அதோடு மட்டுமல்ல 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் குமாரபாளையம் மற்றும் கொல்லிமலை அரசு மருத்துவமனைகளில் ஆய்வகத்துடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ரத்த வங்கி போன்ற மருத்துவ சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இப்போது 2023 -– 2024-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நாமக்கல் மாவட்ட மக்கள் நல்வாழ்வுப் பணிகளுக்காக 42 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 29 அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தி.மு.க. அரசை பொறுத்தவரை சமுதாயத்தை பாதிக்கிற நோய்களுக்கும், அதேபோல் மக்களை பாதிக்கிற நோய்களுக்கும் தேவையான சிகிச்சைகளை அளித்து குணப்படுத்த வேண்டிய 2 பணிகளிலும் எந்த தொய்வும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    திராவிட மாடல்

    நமது சமுதாயம் ஆரோக்கியமாக வாழவும், மக்கள் ஆரோக்கியமாக வாழவும் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் இந்த அரசு எடுக்கும் என்ற உறுதியினை உங்களுக்கு அளிக்கிறேன். சமீபத்தில், தமிழ்நாட்டில் இருக்கிற சுகாதார வசதிகளைப் பார்த்து குஜராத்தில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் ஆச்சரியத்தோடு பாராட்டிய செய்திகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது தான் திராவிட மாடல்.

    மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோல் மாடல் துறையாக விளங்கி வருகிறது. அது மேலும் மேலும் தொடர மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற துறை பணியாளர்களும் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கை களையும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29.08 1/2 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 459 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.70ஆயிரத்து 488-க்கு விற்பனையானது.

    அதேபோல் 223.72 1/2 குவிண்டால் எடை கொண்ட 437 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.60-க்கும், சராசரி விலையாக ரூ.85.99-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.10-க்கும், சராசரி விலையாக ரூ.79.39-க்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.

    11.75 குவிண்டால் எடை கொண்ட 16 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.78-க்கும், சராசரி விலையாக ரூ.155.99-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்து 135-க்கு விற்பனையானது.

    இதன்மூலம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.19 லட்சத்து 34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    • அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    • பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கபிலர் மலை வட்டார வளமைய பயிற்றுநர் வினோதா, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பு ஆசிரியைகள் ஜீவா, மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி இந்தியன் வங்கி, மின்சார வாரிய சேமிப்புக் கிடங்கு, சரளைமேடு, அரசுப் பொது மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் சுற்று சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முன்னதாக சுற்றுச்சூழல் மன்ற மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத் தூய்மை. தேவையற்ற மரக் கிளைகளை வெட்டி அகற்றுதல், கட்டிட மேல் தளங்களில் உள்ள ஈரக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் தேங்கும் இடங்களை அறிந்து சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஆசிரியர் வழிகாட்டுதலில் பேரில் பாதுகாப்பான முறையில் மேற்கொண்டனர். முடிவில் சாரண ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.
    • இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

      நாமக்கல்:

    சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது.

    பிரமாண்ட பந்தல்

    இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.

    இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    பந்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இளைஞர் அணியினர் பங்கேற்கும் வகையில் தனித்தனியாக இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பந்தல் முன்பு வாழை மரங்கள், மலர்கள் உள்ளிட்டவற்றால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    உற்சாக வரவேற்பு

    இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சீருடையில் பங்கேற்க உள்ளனர். ஈரோட்டில் இருந்து கார் மூலம் வரும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கி மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதேபோல் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போதமலைக்கு, சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை சாலை வசதி செய்யப்படவில்லை. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடும் செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில், வெண்ணந்தூர் அருகே தேங்கல்பாளையம் பிரிவு சாலையில் மலைவாழ் மக்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பலத்த பாதுகாப்பு

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி பொம்மைக்குட்டை மேடு மற்றும் அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ×