என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வேளாங்கண்ணி பேரூராட்சியில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
    • எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கூட்டு உள்ளுர் திட்டக்குழும பகுதிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சியில் அண்ணா பல்கலைகழக தொழிற்நுட்ப வல்லுனர்களுடன், நாகப்பட்டினம் நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குநர் முன்னிலையில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

    கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா மற்றும் துணைத்தலைவர் தாமல் ஆல்வா எடிசன் தலைமையில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் நிர்வாக தந்தையர்கள், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக சங்க பிரநிதிநிதிகள், தங்கும் விடுதி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் எதிர்வரும் ஆண்டுகளில் நில வகைப்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் அலுவல பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • புதிதாக கட்டப்பட்ட நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம்‌ நடந்தது.
    • 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் 60 அடி நீளமுடைய நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

    தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த மண்டல பூஜை நிறைவு பூர்த்தியை முன்னிட்டு பட்டாணி கோவிலில் இருந்து பழங்கள், வஸ்திரங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 51 வரிசை தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.

    பின்னர், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி கோலிலை சுற்றி வலம் வந்து புனிதநீர் கொண்டு மகா மாரியம்மன், நாக விநாயகர், நாகம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்நது, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ரூ. 30 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
    • சட்டமன்றத்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் நாகூர் நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது.

    நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.

    இப்போது நாகப்பட்டி னத்திற்கு ஒரு புறநகர் பேருந்து நிலையம் அவசியமாகிறது. ஏற்கெனவே முதலமைச்சரிடம் 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்திருக்கிறோம்.

    30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    தஞ்சாவூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் நான் வலியுறுத்தி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.

    எனவே மிக மிக அவசியமான ஒரு கோரிக்கை.

    நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் போன்ற திருத்தலங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    அதை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதி களும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்ப டையில் தான் சட்டமன்ற த்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி, துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

    முதலமைச்சர் கேட்ட 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை நீங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள்.

    எனவே நிச்சயமாக இது முதல் - அமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இது நடக்கும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    • ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
    • திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்ட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாகப்பட்டிணம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஸ்ரீதேவி மூதேவி சமேத சௌந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஆலய முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பினர் அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தலரோட்டை சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது.

    இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
    • வேளாக்குறிச்சி ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கலில் ஆமோதள நாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ மற்றும் லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, 24-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாஹுதி, தீபாராதனையும், 25-ம் தேதி 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், இரவு பரிவார முகூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம், பூர்ணாஹுதியும், 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று (27-ந்தேதி) காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அடுத்தாக கடம் புறப்பாடு நடைபெற்று விமானங்கள் மற்றும் ராஜ கோபுரங்கள் கும்பாபிஷேகம் மற்றும் மூலமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குரு மகா சன்னிதானம் திருப்புகலூர் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை மகாபிஷேகம், தீபாராதனையும், இரவு ஆமோதள நாயகி ரத்தினகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பூரணா புஷ்கலா சமேத அன்னப்ப சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 7-ம் ஆண்டை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் குடங்கள் வைத்து சிறப்பு பூஜை யாகம் நடைபெற்றது.

    பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது.

    இதில் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் சேலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு சீர் பலகாரம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை சென்னை சேர்ந்த குருமூர்த்தி, லட்சுமி நாராயணன், குமார் மற்றும் பலர் செய்து இருந்தனர்.

    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு கடை தெருவில் காங்கிரஸ் கட்சியினர் மபநில பொதுச் செயலாளர் விவசாய பிரிவு சுர்ஜித் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வழக்கறிஞர் அருண்சோரி முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா சிறப்புரை ஆற்றினார். தி.மு.க ஒன்றிள செயலாளர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூஸ்ட் கட்சி முன்னாள்மாவட்ட செயலாளர் சம்பந்தம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தை தொகுதி அமைப்பாளர் இளையராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா ,வட்டார தலைவர் கனகராஜ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் நன்றி கூறினார் .

    • வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயற்குழு கூட்டம் மற்றும் சமுதாய திறன் பள்ளி மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடை பெற்றது.

    இதில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து சமுதாய திறன் பள்ளி மூலம் கட்டுமான பயிற்சி, பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் சான்றிதழ் வழங்கி பேசினார்.

    அப்போது அவர், பயிற்சி பெற்றவர்கள் வீட்டிலேயே இருந்துவிடாமல் சுயமாகவோ அல்லது வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமாக நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.
    • மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டு கடந்துள்ளன.

    இதை முன்னிட்டு நடை பெற்ற நூற்றாண்டு விழாவில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள கடமை, பிள்ளைகளின் கல்வியை மெருகேற்ற செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவது மிக, மிக முக்கியமானது, எனவே மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார்.

    பின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நீலா வடக்கு வீதியில் இயங்கி வரும் ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியில் கடந்த பிப்ரவரி 25 ம் தேதி அறிவியல் கண்காட்சி மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டிய மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்களையும், கேடயங்களையும், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஆர்த்தி சந்தோஷ், பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

    • சுமார் ரூ. 1 கோடி 50 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
    • நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.

    இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செண்பகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 1, கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1, டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 30 பெட்டிகளில் இருந்த சுமார்1000 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அக்கரைப்பேட்டையை சேர்ந்த செண்பகம் மகன் சபரிநாதன், செல்லூரை சேர்ந்த சுரேஷ், அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    ×