என் மலர்
நாகப்பட்டினம்
- சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்கப்படும்.
- கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதும், நாகூர் கீழப் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கைகள்.
சட்டமன்றத்தில் இது குறித்து நான் பலமுறை பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன். முதலமைச்சரிடமும் கோரிக்கை கடிதம் அளித்தேன்.
நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 05-04-2023 அன்று நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி - கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.
இதற்காக நாகை தொகுதி மக்களின் சார்பில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
- 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- கடல் அட்டை மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான
போலீசார் நாகை சின்ன தும்பூர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது அதில் 10 பெட்டிகளில்சுமார் 30 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் நாகை பாப்பா கோவிலை சேர்ந்த சகோதரர்கள் சிங்காரவேல், கேசவன் ஆகியோர் அக்கரைப்பேட்டையில் இருந்து சரக்கு வாகனத்தில் ராமேஸ்வரத்திற்கு கடல் அட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசார் சிங்காரவேல், கேசவனை கைது செய்து, கடல் அட்டையையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய சில நபர்களை தேடி வருகின்றனர் , தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- வண்ண மலர்களை ஊர்வலமாக மேல தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜலாம்பிகை உடனுறைஅட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பங்குனித்திருவிழா பூச்சொரிதல் விழா தொடங்கியது முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை ஊர்வலமாக ஆலய உட்பிரகாரத்தை மேல தாளங்கள் முழங்க எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பலிபீடம் மற்றும் உற்சவருக்கு மஞ்சள் பொடி பால் பன்னீர் இளநீர் தேன் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம்வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.
- மகசூல் குறைந்துள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை.
- கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான, புதுப்பள்ளி, காமேஸ்வரம், தாண்டவமூர்த்திகாடு, பூவைத் தேடி, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் வேர்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 105 நாட்கள் பயிரான இது, வருடத்திற்கு 3 முறை பயிர் செய்யப்படுகின்றது. தற்போது, பயிர் செய்யப்பட்ட வேர்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் பருவம் தவறிய கனமழை பெய்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக கடலையின் வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கி அழுகி கடலையின் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு செடிக்கு 15 முதல் 20 கடலை பருப்புகள் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது 4 அல்லது 3 என்ற அளவில் உள்ளது. மேலும் ஒரு ஏக்கருக்கு 10000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து உள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் நிலக்கடலையை கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் நிலக்கடலைக்கு உரிய விலை இல்லை எனவும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.
- போலீசார் நெய்விளக்கு மன்னப்பயன்கட்டளை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- 2 பேர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நெய்விளக்கு மன்னப்பயன்கட்டளை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ராமராஜன் (வயது31), சுப்பிரமணியன் (62) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்
- மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஆனைமங்கலம் அருகே ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
Liquor smuggler on motorcycle arrestedஇதில் அவர் திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த முரளி ராஜன் மகன் சித்திரவேல் (வயது21) என்பதும், மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் கிராமத்தில் உள்ள மேலமறை க்காடர் கோவிலில் முதலாம் ஆண்டு சம்வஸ்தராபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
விழாவையொட்டி கோபூஜை, கும்ப பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதியுடன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பிள்ளையார், முருகன், காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜையில் செவ்வந்திநாத பண்டாரசன்னதி கயிலைமணி வேதரத்னம் உள்பட பிரமுகர்களும், கோவில் திருப்பணி குழுவினரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
- நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
- வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. மழையால் வேதாரண்யம் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது. இந்த கோடை மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்கிறோம். 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு அதிகளவில் பக்தர்கள், கூற்றுலுா பயணிகள் வருவர். இவர்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக வேளாங்கண்ணியில் அதிகளவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன்தலைமையில் நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் செல்வகுமார் மற்றும் சிவசேனா கட்சி, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் தன்னார்வளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+2
- தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
- மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.
இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
அப்போது மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.
இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று நடைபெறும் குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு டிரைவர், வழிக்காட்டுனருடன் 49 பேர் பஸ்சில் திருச்சூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். மொத்தம் 51 பேர் பஸ்சில் இருந்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை ஒவ்வொருவறாக பஸ்சில் இருந்து வெளியே மீட்டனர்.
இந்த விபத்தில் திருச்சூரை சேர்ந்த வர்க்கீஸ் மனைவி லில்லி (வயது 63), ஜோசப் மகன் ராயன் (9) ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் சிலருக்கு கை, கால் துண்டானது. விபத்துக்குள்ளான பஸ்சும் சேதமடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா மற்றும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






