என் மலர்
நாகப்பட்டினம்
- வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும்.
- மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
வேதாரண்யம்:
கோவில் நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், கோவில் உரிமை கோரும் கிராம நத்தம், இனாம் நத்தம், இனாம் நிலம், குடிக்காணி, பட்டின மனை போன்ற இடங்களின் உண்மை நிலையை உயர்மட்ட குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் குடிக்காணி குத்தகை சாகுபடிதாரா்கள் சங்கம் சார்பில் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், குடிக்காணி சங்க தலைவா் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
மேலும், ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கோவில் செயல் அதிகாரி அறிவழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முடிவில் விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் தனியரசு நன்றி கூறினார்.
- படகில் டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்தவர்கள் கரை திரும்பினர்.
- பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் வேதையன் (வயது 58) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (65), கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த பன்னீர் (57) ஆகிய 3 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று காலை கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் 3 பேரும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், ஆறுகாட்டுதுறை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மீன் பிடிக்க சென்றவர்கள் திசை மாறி சென்றார்களா? அல்லது படகு எஞ்சின் பழுதாகி கடலில் தத்தளித்து கொண்டு உள்ளார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மாயமான 3 மீனவர்களை தேடி சென்ற சக மீனவர்கள் நடுக்கடலில் படகில் டீசல் இன்றி தத்தளித்து கொண்டிருந்தவர்களை பார்த்தனர். மேலும், அவர்களை தனது படகில் ஏற்றி ஆறுகாட்டுத்துறை கரைக்கு இன்று காலை கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் சென்ற படகும் மீட்கப்பட்டது.
காணாமல் போன 3 மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்ததை கண்ட உறவினர்கள் மற்றும் மீனவ கிராமமக்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்.
- 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், கோவில்பத்து ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் தியாகராஜன், தர கட்டுப்பாடு மேலாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அசோகன், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- தேர் ராஜ வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தரகுசாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இவ்வாலயத்தில் பங்குனி பெருவிழா கடந்த 4-ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன்அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோயிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
மேளதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பேர் சொல்லும் சாலைகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
- பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.
வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.
- திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது சாமியார் வாழைப்பழங்களை வீசினார்.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் வாழைப்பழத்தை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந்தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, தகட்டூர் பைரவர் கோவில் இருந்து ராதாகிருஷ்ண சாமியார் 3 கி.மீட்டர் ஊர்வலமாக வந்து மாப்பிள்ளை வீரன் கோவிலை அடைந்தனர். பின்பு, கோவிலில் திருமேனி அம்மன் புறப்பாடு செய்யப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது சாமியார் வாழைப்பழங்களை வீசினார். இந்த வாழைப்பழத்தை பிடித்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் வாழைப்பழத்தை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.
தொடர்ந்து, கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு போட்டு, பொங்கல் வைத்து உருவச்சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.
மேலும், மண் குதிரைகளை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து குதிரை விடும் நிகழ்ச்சியும் இரவு தேரோட்டம், வாணவேடிக்கையும் நடந்தது.
- 96 வகையான ஹோம திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள் கொண்டு மகா யாகம்.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் செல்லூர் சாலையில் அமைந்துள்ள செல்லகுட்டி அய்யனார் கோவிலில் சம்வஸ்ரா யாகம் நடைபெற்றது.
21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோம திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அய்யனாருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
- என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக நீலமேகம் மற்றும் அவரது மனைவி கவிதா அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகின்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாநில மாவட்ட கருத்தாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்து எண்ணும் எழுத்தும் பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் தம்பதியினரை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில், இப்பள்ளி யில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோடியக்காடு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் ஆசிரியர்கள் குணசுந்தரி, சாந்தி, கவிதா, மணிமாலா, புஷ்பா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீனாம்பாள், தாமரைச்செ ல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களால் என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும், 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி பரிசு வழங்கினார்.
முடிவில் ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.
- வாட்டர் ஆப்பிள் இங்கிருந்து அண்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதாகவும் கூறினார்.
- 1 கிலோ ரூ.100 லிருந்து 200 வரை விலை போவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.
நாகப்பட்டினம்:
கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் அளவில் வளரக்கூடிய ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது 'வாட்டர் ஆப்பிள்'.
ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியாவாகும்.
இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது.
குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் செடியை நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்திரபோஸ் என்பவர் சோதனை முறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது நர்சரியிலிருந்து கன்றுகள் வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தார்.
தற்பொழுது கொத்து கொத்தாக காய்க்க தொடங்கி உள்ளது.
ஆண்டுக்கு மூன்று முறை காய்க்கும் வாட்டர் ஆப்பில் ஒரு செடியில் வாரத்திற்கு 100 கிலோவிற்கும் மேலாக அறுவடை செய்து வருவதாகவும் அருகிலுள்ள பரவை சந்தையில் கொண்டு விற்பனை செய்யப்படும் வாட்டர் ஆப்பில் இங்கிருந்து திருச்சி, திருவாரூர், மன்னார்குடி, காரைக்கால் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதாகவும் கூறினார்.
1 கிலோ ரூ.100 லிருந்து 200 வரை விலை போவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.
மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய செடிகளை மானிய விலையில் வழங்கினால் மேலும் இப்பகுதியில் மாற்று சாகுபடியில் அதிக வருவாய் ஈட்ட முடியும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.
அப்போது மகாகா ளியம்மன் மணிமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்புகட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.
செண்டை மேளம் முழங்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பூக்குழி இறங்கும் வைபவத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றன்பின் ஒருவராக பூக்குழி இறங்கி பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்.
அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
தீமிதி திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 64 கிராம மீனவ மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
- அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த அகரகடம்பனூர் கிராமத்தில் உள்ள கண்ணா கூத்த அய்யனார் பத்திரகாளி அம்மன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து, கணபதி ஹோமம், அம்மன் வீதிஉலா மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது.
விரதமிருந்த பக்தர்கள் அகரகடம்பனூர் பெரியகுளத்தில் இருந்து அலகு காவடி, மயில் இறகு காவடி, ரத காவடி மற்றும் பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், பக்தர்கள் எடுத்து வந்த பாலினால் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், வேதாரண்யம் நகரில் உள்ள கற்பக விநாயகர், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞான விநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுகாட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.






