என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.
    • வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.

    அதன்படி, கீழ்வேளூர் தாலுகாவில் காரப்பிடாகை வடக்கு கிராமத்திலும், நாகை தாலுகாவில் கொத்தமங்கலம் (கோதண்டராஜபுரம்) கிராமத்திலும், திருக்குவளை தாலுகாவில் வாழக்கரை கிராமத்திலும், வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் மேற்படி முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பொது விநியோக திட்டம் சார்ந்த அனைத்து கோரிக்கைகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது.
    • தேர்பவனி 15-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயமானது வங்கக் கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி பவனி நடந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து புறப்பட்ட பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக ஆலயத்தை அடைந்தது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றிவைக்கபட்டது.

    இதில் பங்குதந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ், அருள் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் திரளானோர் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    • சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் ஸ்வநிதி திட்டம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து, சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டியினை வழங்கினார்.

    சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதனடிப்படையில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தலா ஒரு வண்டியின் விலை ரூ 1,06,000 மதிப்பீட்டில்,9 உணவு மற்றும் பழ விற்பனை வண்டிகளை ரூ. 9.54,000 மதிப்பீட்டில் மற்றும் ஒரு பூ விற்பனை வண்டி ரூ.60,000 மதிப்பீட்டில் என ரூ. 10,14,000 மதிப்பீட்டில் விற்பனை வண்டிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டிக்கான ஆணையை மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    அருகில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    • தோப்புத்துறை ஊராட்சிபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது.

    முன்னதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, கூட்ட பொருள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, துணை தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜுலு, கல்வியாளர் ஆர்த்தி, உறுப்பினர்கள் ரபியத்துல் பஜ்ரியா, மீனா, முருகானந்தம், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரி கல்வி பெற வழிகாட்டுவது மற்றும் உதவி செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் வரவு, செலவு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் இணைய தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் செயலாளர் செந்தில், பொருளாளர் தென்னரசு, உப்பு உற்பத்தியாளர்கள் கேடிலியப்பன், சுப்பிரமணியன், அம்பிகாதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டு வரவு, செலவு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மேலும், பொது நிதி கணக்கில் வருவாய் குறைந்த காரணத்தினாலும், விலைவாசி ஏற்றத்தினாலும் உப்பள பகுதிகளில் உப்பு ஏற்றும் லாரி ஒன்றுக்கு கட்டணமாக வசூல் தொகை ரூ.40-ல் இருந்து ரூ.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • திருமருகல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருமருகல் வட்டார தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி, கணபதிபுரம்,திட்டச்சேரி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர் உடன் செயல்பட வேண்டும், திருமருகல் ஒன்றிய பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • கலெக்டர் விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.
    • நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தின் முதுகெலும்பாக மீன்பிடி தொழில் உள்ளது. இந்த மாவட்ட புதிய கலெக்டராக சமீபத்தில் ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்றார்.

    மீன்பிடி தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் கலெக்டருக்கு இருந்து வந்தது.

    இதனையடுத்து மீனவர்களின் தொழில் முறை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தெரிந்து கொள்ள மீனவர்களுடன் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்.

    அதன்படி, நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.

    நடுக்கடலில் வைத்து சூடம் ஏற்றி வழிபட்ட பின்னர் மீனவர்களை போன்று கடலில் வலைவீசி மீன் பிடித்தார்.

    தொடர்ந்து, அவர் வீசிய வலையில் சிக்கிய மீன்களின் ரகங்கள் என்ன என்பது குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

    அவ்வப்போது விசைப்படகையும் ஓட்டி மகிழ்ந்தார். மேலும், நடுக்கடலில் படகில் இருந்தவாறு தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நாகை மாவட்ட கலெக்டர் மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்று மீன்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வயலில் பருத்தி எடுக்கும் பணியில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார்.
    • பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.

    இவரது மனைவி ஜெயா (வயது 42).விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவரை பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயாவை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜெயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவாச்சாரியர் ராஜா, அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் மற்றும் சிவச்சாரியார்கள் அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    பின், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து, வண்ண மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

    • கண்தானம் வழங்கியவர்களின் குடும்பங்களை பாராட்டி கவுரவித்தார்.
    • பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணை ஆளுநர் சவரிராஜ் தலைமை தாங்கினார்.

    மண்டல தலைவர் ராமஜெயம், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கடந்த ஆண்டு 103 ஜோடி கண்களை தானமாக வழங்கியவர்களின் குடும்பங்களை பாராட்டி கவுரவித்தார்.

    மேலும், 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக 2023-24-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை துணை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    தலைவராக செந்தில்குமார், செயலாளராக செந்தில் நாதன், பொருளாளராக திருமுருகன் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வானிலை ஆய்வு மையம் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி கடல் சீற்றமாக காணப்பட்டது.

    மேலும், வானிலை ஆய்வு மையமும் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் இன்று 2-து நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஒரு சில மீனவர்கள் கரையோரம் பைபர் படகு மூலம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பினர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.

    இதனால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அதன்படி கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    சிக்கல் ராமநாத சிவாச்சாரியார், கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது.

    குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 30-ந் தேதியில் இருந்து கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதில் பக்தி பாடல்கள், நாதஸ்வரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×