என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்ல குஞ்சு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரது மகன் ரகு (வயது 30), சேவாபாரதியை சேர்ந்த சக்திவேல் (45), மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவமேடு வடக்கு தெருவை சேர்ந்த விக்கி (18) ஆகிய 3 பேர் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதில் கடலில் படகு கவிழ்ந்தது.

    இதில் ரகு உள்பட 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    சிறிது நேரத்தில் ரகு மூழ்கி மாயமானார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மற்றொரு பைபர் படகில் சக்திவேல், விக்கி ஆகியோரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ரகுவை கீச்சாங்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரகு கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

    • தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
    • பைரவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி ஆனந்த் சிவச்சாரியர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின், கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து பைரவருக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் வரவில்லை.
    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா பகுதியில் பல ஊராட்சிகளில் கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் வராததை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் தகட்டூர் கடைத்தெருவில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். தென்னடார் ஊராட்சி தலைவர் தேவி செந்தில், தகட்டூர் ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, தாணிக்கோட்டகம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், கடினல்வயல் ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோஷ ங்கள் எழுப்பி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.
    • பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.

    இந்த ஆலயமானது வங்கக்கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும் சிறப்பம்சமாகும்.

    இங்கு உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வேளாங்க ண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.

    வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.

    மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    அதேபோல வேண்டுதல் நிறைவேற வேண்டி 6 அடி உயர மெழுகுவர்த்தியையும் கடைகளில் வாங்கி அதனை ஆலயத்தில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் குறைந்து இருந்ததால் பகல் முழுவதும் வேளாங்கண்ணியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை கடலில் ஆனந்த குளியல் நீராடி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் 102 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. தொடர்ந்து,

    நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கோவிலை சுற்றி சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து ரவிச்சந்திரன் தவறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்க ண்ணபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 40) கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த 7-ம் தேதி திருக்கண்ணபுரத்தில் இருந்து தென்னமரக்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து ரவிச்சந்திரன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திருக்கண்ணபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது.
    • சில்லடி கடற்கரையை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் அறிவிக்க ப்பட்டுள்ள திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

    நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாகையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு, சில்லடி கற்கரையை மேம்படுத்துவது, தமிழ்நாடு ஹோட்டல் புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் சாம ந்தான் பேட்டை தனியார் பள்ளியில் வன மகோத்சவ விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக வனச்சரகர் க. ஆதிலிங்கம், கலந்து கொண்டு வனங்க ளின் அவசியம் குறித்து பேசினார்.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நெகிழிப்பைகள் பயன்பா ட்டை குறைப்பது எப்படி என்று மாணவர்க ளுக்கு எடுத்துரை த்தார்.

    ரமேஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முடிவில் பள்ளி வளாகத்தில் வன வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.
    • நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.

    அவருக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    அவரின் ஆன்மா சாந்தியடைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ்சிங் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து டிஜஜி விஜயகுமார் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் விஜயகுமார் திரு உருவ படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.
    • ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.

    இந்நிலையில் காவிரி நீரை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்கு இதுவரை காவிரி நீர் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.

    வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து வாசன வசதி பெறும் இக் கால்வாய் தூர்வாரி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது.

    இதனால் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் தேங்கியும், தேவையற்ற செடிகள் வளர்ந்தும் நீர் பாய்வதற்கு ஒரு தடையாகவே இருந்து வருகிறது.

    இதனால் இப்பாசனத்தை நம்பி சுமார் 1000 ஏக்கருக்கும் வயலில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விதை நெல்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது.

    இதனால் ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

    பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விவசாயிகளே சொந்தமாக வாய்க்காலை தூர்வாரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சுமார் 7கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்காலை விவசாயிகளே தங்களது நிதி பங்களிப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    • இரும்பு தகடுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மரக்கான்சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வழிமறித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அனந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித் (வயது 34), தேவதாஸ் மகன் சந்தோஷ் குமார் (24), துரைராஜ் மகன் விஜய் (19) ஆகியோர் என்பதும், நாகை- விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியையொட்டி அனந்தநல்லூர் பெரிய வாய்க்காலில் கட்டப்பட்டு வரும் பால பணிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த இரும்பு தகடுகளை 3 பேரும் திருடி வாஞ்சூர் பகுதியில் உள்ள இரும்புக்கடையில் விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரும்பு தகடுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.
    • வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.

    அதன்படி, கீழ்வேளூர் தாலுகாவில் காரப்பிடாகை வடக்கு கிராமத்திலும், நாகை தாலுகாவில் கொத்தமங்கலம் (கோதண்டராஜபுரம்) கிராமத்திலும், திருக்குவளை தாலுகாவில் வாழக்கரை கிராமத்திலும், வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் மேற்படி முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பொது விநியோக திட்டம் சார்ந்த அனைத்து கோரிக்கைகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×