என் மலர்
நாகப்பட்டினம்
- வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
- படித்துறை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
இக்குளத்தில் படித்துறை இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை அமைத்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அரசு கோரிக்கையை ஏற்று பொது நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- மல்லிகா தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
- திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
நாகப்பட்டினம்:
ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளராக மல்லிகா பணியாற்றி வருகிறார். 1984 ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்த இவர் திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த அலுவலர் மல்லிகா உதவியாளர், விரிவாக்க அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் என உயர் பதவிகளை அடைந்து தற்போது நாகை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலராக பணியாற்றினார்.
இந்தநிலையில் அரசு அலுவலர் மல்லிகாவின் பணி ஓய்வு நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட மல்லிகா தனது அரசு பணியில் 39 வருடம் 6 மாதங்கள் 9 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பணி ஓய்வு நிகழ்ச்சியில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பிரியா விடைகொடுத்தனர்.
- 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
- நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.
இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.
- தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
- இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் சந்திரசேகர் (வயது 65). விவசாயி.
இவர் நேற்று காலை 11 மணியளவில் முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலை 3 மணி அளவில் திரும்பி ஆற்றில் இறங்கி வந்துள்ளார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்புத் துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவிலுக்கு சென்றவர் ஆற்றில் மூழ்கி முதியவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த கலை மாதவன் (வயது 36), வேளாங்கண்ணி செட்டித்தெரு ஜெயமாதா இல்லம் பகுதியை சேர்ந்த ஜூடு அருள்பிரகாசம் ( 49) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் ரெயில்வே கேட் அருகே காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அதில் கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி அதனை காரின் மூலம் மதுரை வழியாக வேதாரணியம் கொண்டு வந்து இலங்கைக்கு கடத்த இருப்பது தெரிய வந்தது.
இந்த கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த ரவி, கோடியக்காட்டை சேர்ந்த லட்சுமணன், சேத்தாகுடி சேர்ந்த ரவி, வேதமணி, மதுரை சேர்ந்த மாயகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சமாகும்.
- ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
- பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த வழகறிஞர் நாமசிவாயம், சமூக ஆர்வலர் வசந்தி செல்வகுமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் குதிரை ஆட்டத்துடன் பால்குடம், முளைப்பாரி, பூந்தட்டு எடுத்து வந்தனர்.
- திரளான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கு பின்னை யடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது முன்னதாக பெண்கள் குதிரை ஆட்டத்துடன் பால்குடம், முளைப்பாரி, பூதட்டு எடுத்து வந்தனர்.
பின்பு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்காரிக்கபட்ட மகாதீபாரதனை நடைபெற்றது இதில் ஏரளமான பெண்கள் கலந்து கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர் பின்பு அம்பாள் விதி உலா காட்சி நடைபெற்றது.
- ஓவிய போட்டி நடந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஓவியப்போட்டி நடந்தது. அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
- வீரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- பானையில் பொங்கல் வைத்து பொங்கி வர குலவையிட்டு வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் அமைந்துள்ள நொண்டிவீரன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி வீரனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வர குலவையிட்டு வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
- இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தருமபுர ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் சார்பில் இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் கருண வாய்வரனி ஆதீனம் இளையவர் சபேசன், கோவில் நிர்வாக அலு வலர் அறிவழகன், தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின், அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் தெற்கு வீதியில் புதிதாக தருமபுர ஆதீன கட்டளை மடம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை மருதூர் ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் வழங்கினார்.
- பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய முன்னாள் படைவீரர்கள் நலச்சங்க தலைவர் தமிழரசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு குடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை மருதூர் ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் வழங்கினார்.
வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் குடை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச்சங்க தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அப்துல் கலாம் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அழகிரி பாலன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் தீபா, முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் இலக்குவன், முன்னாள் செயலாளர் சக்திதாசன், சமூக ஆர்வலர்கள் கோமதி, ஆறுமுகம், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் வெற்றியழகன் நன்றி கூறினார்.






