என் மலர்
நாகப்பட்டினம்
- ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- திட்டச்சேரி அரசு பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
- கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 62-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பூங்குழலி தலைமை தாங்கினார்.
பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகமது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் தலைவர் ஆனந்த், செயின்ட் மைக்கேல் அகாடமி தலைவர் ஆல்பிரட் ஜான்,பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் ஜெயினுல் ஆபிதீன்,முகமது ஷெரீப், அப்துல் நாசர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி வளர்ச்சி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
- செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
- கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் பணிபுரியும் ஊழியர்களும் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அங்கு படிக்கும் மாணவர்களும் பணிபுரியும் ஊழியர்களும் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்ததுடன், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாணவர்களுக்கான பெஞ்ச் டெஸ்க் 40, ஊழியர்களுக்கான மேஜைகள் மற்றும் இருக்கைகள் 25 ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் கல்லூரியின் முகப்பில் கல்வெட்டு பாலம் அமைப்பதுடன் நுழைவாயில் வளைவும் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக ஷா நவாஸ் எம்.எல்.ஏ.வுக்கு கல்லூரியின் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
- கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் விதைத்த நெல் மணிகள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
- களைப்பு தெரியாமல் இருக்க சினிமா, கிராமிய பாடல்களை பாடியபடி நடவுப் பணிகளில் ஈடுப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நாகை , திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டனர்.
குறிப்பாக காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுப்பட்டனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் விதைத்த நெல் மணிகள் கருகியும், முளைப்புத் தன்மையும் இல்லாமல் போனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இருந்தும் மனம் தளராத விவசாயிகள் இயற்கையின் மீதான நம்பிக்கையில் ஆடிப்பட்டம் தேடி விதைக்கனும் என்ற முது மக்களின் சொல்லாடலுக்கு ஏற்ப தற்போது குறுவை நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஆடி 18 என்பதால் விவசாயிகள் தங்களுடைய வயல்களில் வழிப்பட்டு நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். அப்போது நடவுப் பணிகளில் ஈடுப்படும் பெண்கள் வெயில், களைப்பு தெரியாமல் இருக்க சினிமா, கிராமிய பாடல்களை பாடியபடி நடவுப் பணிகளில் ஈடுப்பட்டனர்.
ஒரு பெண் ராகம் இழுத்து பாட அதை மற்றப் பெண்கள் கோரஸாக வாங்கி உற்சாகமாக பாடி மகிழ்ந்தனர்.
- தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழா நடந்தது.
- தினசரி உடையார்பாளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது.
தினசரி உடையார்பா ளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.
விழாவை தொடர்ந்து நாளை ( சனிக்கிழமை) அரவாண் களப்பலியும், 6-ம் தேதி அன்று அர்ச்சுணன் தபசும் நடக்கிறது.
7-ம் தேதி படுகள நிகழ்ச்சியும், தொடர்ந்து திரவுபதையம்மன் கூந்தல் முடிதலும் நடக்கிறது.
மாலை 4 மணியளவில் அம்மன் வீதியுலாவாக புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் அக்னிபிரவேசம் எனப்படும் தீமிதி விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார்கள் செய்து வருகிறார்கள்.
- 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
- வேதாரண்யம் மாணவி மஹாதி 2-ம்இடம் பெற்றுகோப்பை பெற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி ராஜாளி காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - வேதா தம்பதியினரின் மகள் மஹாதி (வயது 11).இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்ற ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மனநிலை வேக எண்கணித போட்டியில் (அபாகஸ்) முதலிடம் பெற்றார்.
தற்போது சென்னை மகாபலிபுரத்தில் உலக அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் பங்கு பெற்றார்.
இதில் 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் வேதாரணியம் மாணவி மஹாதி இரண்டாம் இடம் பெற்றுகோப்பை மற்றும் வெள்ளி பதக்கத்தை பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவி மஹாதியை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் பாராட்டினார் .
- சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் வண்ண புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்தஅண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் போன் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைவு தினம்,தேசிய வண்ண புத்தகங்கள் தினம், இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்களி வெங்கையா பிறந்தநாள் ,தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகள் பிறந்தநாள் தினவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் இரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன்,சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி,ஆனந்தன் பள்ளி மேலாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவ -மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
- தானேவில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது.
- விபத்தில் கண்ணன் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் வேதரத்தினம். பெயிண்டர். இவருடைய மகன் கண்ணன் (வயது23). தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை தானேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.
இவர் கடந்த 31-ந் தேதி நள்ளிரவில் மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கண்ணன் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
விபத்தில் பலியான கண்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உறவினர்களிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று காலை உடல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவருடைய பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவருடைய உடல் நேற்று மதியம் அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. கிரேன் விபத்தில் என்ஜினீயர் ஒருவர் உயிரிழந்தது வேதாரண்யம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தக்காளி விலை உயர்வு அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அம்மனுக்கும் 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவிக்கப்பட்டது
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை வெகு நடைபெற்றது.
திருமணத்தடை குழந்தை பாக்கியம் கல்வி மற்றும் செல்வம் ஆகியவை பெறுக வேண்டி சிறப்பு பரிகார பூஜைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், தற்போது வரலாறு காணாத அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்து வரும் தக்காளி விலையால் அடித்தட்டு ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தக்காளியின் விலை குறைய வேண்டி, அம்மனுக்கும், மதுரை வீரனுக்கும் தனித்தனியே 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
மலர் மாலை எலுமிச்சை பழம் மாலை உடன் சேர்த்து தக்காளியையும் மாலையாக அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் நாகை திருவாரூர் காரைக்கால் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
- காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.
- 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
சென்னை அம்பத்தூர் கலைவாணர் நகரை சேர்ந்த மூதாட்டி மல்லிகா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து மல்லிகாவின் மகன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பினர். இந்த தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் புனே சென்று மல்லிகா மீட்டு நாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரை நாகப்பட்டினத்திற்கு அழைத்து மல்லிகாவை ஒப்படைத்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்வாறு திறம்பட செயல்பட்ட நாகை மாவட்ட போலீசாரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பாராட்டியதுடன் காணாமல் போன மூதாட்டியையும் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
- மேலப் போலகம் தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடப் பணியை நாகை எம் எல் ஏ முகமது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை அப்போது வலியுறுத்தினார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரம் தொடக்க ப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், எரவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், போலகம் ஊராட்சி மேலப் போலகம் தொட க்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருவதாகவும் விரைந்து அங்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
- திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.
- கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு திருமருகல், கரையிருப்பு, சேகல், வள்ளுவன்தோப்பு, ஆண்டிதோப்பு, கட்டலாடி மற்றும் சுற்று வட்டா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைக்கு மருத்துவம் பார்க்க திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவுகிறது.
இந்தநிலையில் திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர், நிரந்தர கால்நடை பராமரிப்பு உதவியாளர், நிரந்தர கால்நடை ஆய்வாளர் இல்லாத காரணத்தால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உடன் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






