என் மலர்
நாகப்பட்டினம்
நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் சிவன் மாதவன் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவன் மாதவன் தனது நண்பர்கள் 3 பேருடன் காடம்பாடி வண்ணான் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சிவன்மாதவன் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சிவன்மாதவனை குளத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே பொதுமக்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது சிவன்மாதவனின் உடலை மீட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், சிவன்மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் 12 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 194 என மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் 1 பயனாளிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான விபத்து நிவாரணத் தொகை காசோலை, சமூகப்பாதுகாப்புத் திட்டம் சார்பில் 1 பயனாளிக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பேருக்கு தலா ரூ.4170 வீதம் ரூ.58,380 மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் விக்டர் மரிய ஜோசப், உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று முதல் நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கினார்.
நாகை வேளாங்கண்ணி பகுதியில் மக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசும் போது கூறியதாவது:-
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் அவர் வழியில் செல்கிறார்களா? தமிழக மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் ஜெயலலிதா அனுமதித்தது கிடையாது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்து வருகிறார்கள். இதனால் மக்கள் செய்வதறியாமல் தத்தளித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும், என்னையும் நீக்கினார்கள். ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர். எங்களுக்கு தமிழக மக்கள் மீது நம்பிக்கை உள்ளது.
கமைடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தியை அறிந்தேன். விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் ஆட்சியாளர்கள் தான்.
ஆறு, குளங்கள், மற்றும் நீர்நிலைகளை சரியாக தூர்வாரவில்லை. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியார் பாக்கெட்டுக்கோ போய் சேர்ந்து விட்டது. தடுப்பணையும், ஆறுகளையும், ஏரிகளையும் தூர்வாரி இருந்தால் கடலில் வீணாக தண்ணீர் கலந்திருக்காது.
வருகிற 2019-ம் ஆண்டில் எம்.பி. தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Farmer #Farmersuicide #TTVDhinakaran
கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர்.
கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால், ஏரி- குளங்களை தூர் வாராததால் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. காவிரியில் வெள்ளம் வந்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. வறட்சி காலத்தை போல பம்புசெட் மூலம் தான் சம்பா சாகுபடி செய்ய வேண்டியது உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியில் பிடியில் சிக்கிய விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக நடந்தது.
தற்போது மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்தது விவசாயிகளிடையே மீண்டும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே தலையாமழை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது48). விவசாயியான இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார்.
இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலையாமழை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகின. இந்தநிலையில் கருகிய நெற்பயிர்களை கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் விஷத்தை குடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தற்கொலை செய்த ராமமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் கருணாகரன், கதிர்வேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்தி. இவருடைய மகள் சிவதர்ஷினி (வயது 2½). நேற்று அன்புச்செல்வனின் வீட்டின் முன்பு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி எந்திரம் மூலமாக நடந்தது.
15 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மதியம் 2 மணி அளவில் கிணறு தோண்டிய பணியாளர்கள் சாப்பிட சென்றனர். அப்போது பலகையால் ஆழ்துளை கிணறு மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிவதர்ஷினி, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கதறி அழுதனர். இதுதொடர்பாக உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
குழந்தையை காப்பாற்ற முதலில் கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட குழாயை வெட்டி எடுத்த தீயணைப்பு படைவீரர்கள், 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தைக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து குழந்தை நலம் அடைந்தது.
முன்னதாக மீட்பு பணிகளை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர்.
குழந்தையை மீட்கும் பணி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. மீட்கப்படும் வரை ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையின் நிலை என்ன என்பதை அறிய முடியாமல் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த பதற்றத்துக்கு ஆளானார்கள். மீட்பு பணி நடந்த நேரம் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சி அளித்தது. குழந்தையை மீட்ட பின்னரே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகன் கரிகாலன் வீட்டில் இருந்த காந்திமதி தனது மகளுக்கு ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்டு தாய் காந்திமதி தனது மகள் சரஸ்வதி வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார். 15 ஆண்டுகளாக மகன் கரிகாலன் தாயை வந்து பார்க்கவில்லை. நேற்று காந்திமதி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். தகவலறிந்த மகன் கரிகாலன் தாயின் பிணத்தை தனது ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். ஆனால் இறப்பதற்கு முன் காந்திமதி இறுதி காரியங்களை மகளே செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாராம்.
இதையொட்டி இறந்த தாயை தனது வீட்டிற்கு வந்து அண்ணன் பார்க்கக்கூடாது என்றும், சுடுகாட்டிற்கு வேண்டும் என்றால் வரட்டும் என்றும், சரஸ்வதி கூறிவிட்டார். பிறகு தாயின் இறுதி சடங்கை தானே முன்னின்று செய்து கணவன் வைரப்பன் துணையோடு இறுதி சடங்களை செய்து சிதைக்கு தீ மூட்டினார்.
மகன் இருக்கும் நிலையில் மகள் தாய்க்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை:
காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டைமப்பு சார்பில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வருகிற 23-ந் தேதி ‘இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாடு’ நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.
இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமனின் மாநாட்டுக்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆணை பிறப்பித்துள்ளார். அதன் நகலை பேராசிரியர் ஜெயராமனின் இல்லத்தில் போலீசார் ஓட்டி உள்ளனர்.
போலீசார் அனுப்பிய ஆணையில், மயிலாடு துறையில் 23-ந் தேதி நடை பெற உள்ள இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் மத்திய அரசின் திட்ட பணிகள், சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு சட்ட விரோத போராட்டங்களை நடத்தி பிரச்சினை ஏற்படுத்தி உள்ளீர்கள். இதனால் உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம், தரகமருதூர், வடமழை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டனர். தற்போது ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் அந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் கருகி வருகின்றன.
இந்த நிலையில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும், கடைமடை பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விட வலியுறுத்தியும் நேற்று வாய்மேடு அருகே உள்ள செங்காத்தலை மெயின் சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன், பணி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தேவையான தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கொங்கானோடை கிராமத்தில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மோட்டார்சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்து மோட்டார்சைக்கிளில் இருந்த சாக்கு மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் கேனில் சாராயம் இருந்ததும், அந்த சாராயத்தை அவர் காரைக்காலில் இருந்து மோட்டார்சைக்கிளில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சீர்காழி அருகே உள்ள அரசூர் பாலாஜி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் (வயது23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கொங்கானோடை கிராமத்தில் மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த செம்பனார்கோவில் அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்த அன்பழகன் (42) என்பவரையும் பெரம்பூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சீர்காழியை அடுத்த தென்னலக்குடி வனப்பகுதியில் மான்கள்கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
இந்த நிலையில் தென்னலக்குடியை அடுத்த கருக்குடி அய்யனார் கோவில் பகுதியில் உள்ள சேக்கணையில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புள்ளி மானை மீட்டனர். அப்போது மானின் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த மான் எப்படி இறந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னலக்குடி பகுதியில் வசிக்கும் புள்ளி மான்களை வனத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#tamilnews
கீழ்வேளூரை அடுத்த சிக்கல் மெயின் ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க நாகை ஒன்றிய செயலாளர் வடிவேல், ஒன்றிய தலைவர் முருகையன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவா ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி கலந்துகொண்டு பேசினார்.
விவசாயிகளுக்கு தாமதமின்றி உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும். பழுதடைந்த ரெகுலேட்டர் மற்றும் மதகுகளை புதுப்பிக்க வேண்டும். அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நாகை - திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் தேவூர் கடைத்தெரு, கொளப்பாடு ஆகிய இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.






