என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேளாங்கண்ணி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே உள்ள நாரணமங்கலம் ஆய்மழை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது45). தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்றுமுன்தினம் பாலசுப்பிரமணியன் விஷம் தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் போலீசாருக்கு பாப்பான் சுடுகாடு அருகே கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்த கொடிவீரன் என்ற நாகேந்திரனை(வயது 39) பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 400 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குத்தாலம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சிவமூர்த்தி (வயது 29). இவரது மனைவி ஹரிணி. இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. சிவமூர்த்தி தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகைக்காக நாகை மாவட்டம் குத்தாலம் தோப்புத் தெருவில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தனது மைத்துனருடன் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஹரிணி அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இதில் இருந்து 2 ஆயிரம் மணல் மூட்டைகள் எடுத்து செல்லப்பட்டு கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றின் சேதமடைந்த கரை பகுதியில் போடப்பட்டுள்ளது.

    மேலும் போதிய அளவு மண் குவியல்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோரின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் போதிய அளவுக்கு தயார் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதிக மழை பெய்து வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் கரையில் ஏற்படும் உடைப்பை தவிர்ப்பதற்கு மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்கூட்டியே அடைக்கும் வகையில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள கோவிலான் வாய்க்கால் பொதுப்பணித்துறை சார்பில் பொக்லின் எந்திரம் மற்றும் கூலி தொழிலாளர்களை கொண்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கோவிலான் வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முக தெரு, தெற்கு வெளி, ரெயில்வே ரோடு, கற்கோவில், தொழுதூர், கரைமேடு, எடக்குடி வடபாதி, வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் வடிவாய்க்காலாக உள்ளது.

    ஆண்டுதோறும் மழை காலங்களில் இந்த வாய்க்காலில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சாலை முதல் கரைமேடு வரை கோவிலான் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை பொக்லின் எந்திரம் மற்றும் கூலி தொழிலாளர்களை கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நாகை- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் பாலத்தை ஆக்கிரமித்துள்ள முள் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள பாலம் கடலூர் மாவட்டத்தையும், நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இரவு-பகல் எந்நேரமும் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளை கடந்த போதிலும் இன்றும் இந்த பாலம் உறுதியுடனும் தரமாகவும் கம்பீரமாகவும் உள்ளது.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் பாலத்தின் நடுவே தேங்கும் மழை நீரை வடிய செய்வதற்கு உரிய குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தும், அந்த குழாய்கள் முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் மழை பெய்தால் தண்ணீர் வடிய வழியில்லாமல் மழைநீர் தேங்கி விடுகிறது. பாலத்தில் அடிக்கடி குப்பை மற்றும் மண் தேங்கி மாசுபடுகிறது. இவைகளை உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கொள்ளிடம் சோதனை சாவடியையொட்டி கொள்ளிடம் பாலத்தை கருவேல முள்செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் அந்த முள்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே பாலத்தையொட்டி வளர்ந்து இருக்கும் கருவேல முள்செடிகளை அகற்றி பாலத்தை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகை மாவட்டம் கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் காரப்பிடாகை தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவருடைய மகன் நடராஜன் (வயது 40). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி தனது வீட்டிலிருந்து வயலுக்கு மோட்டார் சைக்கிளில் கீழையூர் செல்லும் குறுக்கு சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். 

    இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்.இவருடைய மனைவி அனுசியா தேவி (வயது.36). செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அனுசியா தேவி குழந்தைகளுடன் அகரகடம்பனூர் அக்ரஹார தெருவில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தைகளுடன் ஒரு அறையில் அனுசியா தேவி படுத்து தூங்கி உள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் அனுசியா தேவி வீட்டின் அருகில் உள்ள கணேசன் மகன் குபேரன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதேபோல கீழ்வேளூர் மெயின்ரோட்டில் தாசில்தார் அலுவலகம் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.அப்போது மக்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாகூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூர் அருகே பூதங்குடி கிராமத்தில் நாகூரில் இருந்து கங்களாஞ்சேரி செல்லும் சாலையில் மீன்வள பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி அருகே வெட்டாறுபாலம் ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் நேற்றுமுன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கே டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து உடலை புதைத்தனர்.

    இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான சிறுதலைக்காடு, கோடியக்கரை, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, வானவன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். 

    இந்த நிலையில் நேற்று முதல் அந்தந்த கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன், சூறைக்காற்று வீசும் என்று மீன்துறையினரும், மீனவ கிராம பஞ்சாயத்தார்களும் அறிவித்தனர். அதன்படி நேற்று 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை ஆறுக்காட்டுத்துறையில் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான கோடியக்காடு மீனவர்கள் பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் கரை சேர்ந்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டை சேர்ந்த வீரப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரைச்சேர்ந்த சற்குணம் (வயது35), உத்திராபதி (20), அமிர்தலிங்கம் (60), காளிதாஸ் (40) ஆகிய 4 பேரும் கடந்த 9-ந்தேதி கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    பின்னர் மீன்பிடித்து விட்டு வலையை திரும்பி எடுத்தபோது படகு விசிறியில் வலைகள் சிக்கிக்கொண்டதால் படகை இயக்க முடியாமல், பழுதடைந்து நின்று விட்டது. அந்த வழியே வந்த மற்ற மீனவர்கள் பார்த்து படகை நகர்த்த முயற்சி செய்தும் முடியவில்லை, வலையையும் அகற்ற முடியவில்லை. பின்னர் மற்ற மீனவர்கள் ஊருக்குச்சென்று ஆட்களை அழைத்து வருகிறோம் என்று கோடியக்காடு மீனவர்களிடம் கூறி விட்டு கரைக்கு வந்து விட்டனர்.

    இதை தொடர்ந்து கோடியக்காடு மீனவர்களை மீட்க மற்ற மீனவர்கள் படகில் நேற்றுமுன்தினம் சென்றனர். அப்போது அங்கு படகை காணவில்லை. மீனவர்களும் மாயமாகி இருந்தனர். பலத்த காற்று வீசுவதாலும், கடல் சீற்றமாக காணப்படுவதாலும் படகு எந்த பக்கம் சென்றது என்பது தெரியவில்லை என்றும், காற்று நீரோட்டத்தை பார்க்கும் பொழுது மல்லிப்பட்டினம், ஜகதாப்பட்டினம் பகுதிகளுக்கு படகு சென்றிருக்கலாம் என தேடி சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மீனவ சங்கத்தினர் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். படகுடன் மாயமான கோடியக்காடு மீனவர்களை சக மீனவர்களும் இரண்டு படகுகளில் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் மாயமான கோடியக்காடு மீனவர்கள் 4 பேர் ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் கரை சேர்ந்தனர். அவர்கள் அங்கிருந்து சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோடியக்காட்டில் இருந்து மீனவர்கள் கார் எடுத்து சென்று அவர்களை ஊருக்கு அழைத்து வந்தனர். மாயமான மீனவர்களை பார்த்த மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
    மத்திய அரசை கண்டித்து வருகிற 26-ந்தேதி நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடக்கிறது என்று நாகை எம்.பி. செல்வராஜ் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் செல்வராஜ் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். மின்சார திருத்த மசோதா என்ற பெயரில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி தொழிலாளர்களையும் மத்திய அரசு வஞ்சித்துள்ளது. எனவே மத்திய அரசை கண்டித்து வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

    அதன்படி நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து, ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தொற்று குறைந்து வருவதால் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னக ரெயில்வே தொடர்ந்து டெல்டா மாவட்ட பகுதிகளை வஞ்சித்து வருகிறது. இதுவரை சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்குடி வரை செல்லும் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் இருந்து நாகை, திருச்சியில் இருந்து காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு ரெயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தென்னக ரெயில்வே நாகை மாவட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட்டது. இந்த போக்கை தென்னக ரெயில்வே மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் தமிமுன்அன்சாரி, மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    ×