என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம், கீழ்வேளூரில் புகையிலை பொருட்கள் விற்ற 41 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
இதைப்போல கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்க்கொடி மற்றும் போலீசார் கரியாப்பட்டினம் பகுதியில்
ரோந்து பணியில் ஈடுபட்டு பெட்டிக்கடைகளில் புகையிலை விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
மேலும் வேட்டைகாரனிருப்பு போலீஸ் சரகத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கீழ்வேளூர், கோவில்கடம்பனூர், ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை தாக்கி செல்போன் பணத்தை பறித்து சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகூர் அருகே பூதங்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 50). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து மீன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் அக்கரைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். நாகை கூக்ஸ் ரோட்டில் சென்றபோது அங்கிருந்த மர்ம நபர்கள் 4 பேர், மோட்டார் சைக்கிளை வழிமறித்து ஆரோக்கியதாசை உருட்டு கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த ஆரோக்கியதாஸ் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாசை தாக்கியதாக வெளிப்பாளையத்தை சேர்ந்த ராம்குமார் (28), திருக்குவளையை சேர்ந்த ராஜவேல்(24), 18 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சீர்காழி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி நங்கநல தெருவை சேர்ந்தவர் செந்தமிழன் (வயது 32). லாரி டிரைவர். இவருடைய மனைவி அஞ்சலி (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அஞ்சலி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறினார்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம், ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி, வழுதலைகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் அழுகும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நிவாரணம் வழங்க வேண்டும்
தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் குறிப்பாக ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.
தமிழக அரசு எவ்வளவு நிவாரணம் அறிவிக்க போகிறது என்பதை இன்னும் சொல்லவில்லை. வீடு இடிந்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப் போவதாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தெரிகிறது. வீடு இழந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்.
எல்லா வடிகால் வாய்க்கால்களையும் தூர்வார புதிய ஆலோசனைகளை உருவாக்கி அதிக மழையின் போது தண்ணீர் வடிய நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். சராசரியாக கணக்கு பார்க்காமல் முழு நஷ்டத்தையும் வழங்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடனை அரசே வழங்கி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
எல்லா பழைய தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகளை கட்டி் தரவேண்டும். ஊரடங்கு தளர்வுகள் என்று அறிவித்து சென்னை புறநகர் பகுதிகளில் மின்சார ரெயிலில் பயணம் செய்ய பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பஸ்களில் 100 சதவீத பயணம் செய்யும் போது வராத இந்த கொரோனா ரெயில் பயணத்தில் மட்டும் எப்படி வரும்? சாதாரண ஏழை எளிய மக்கள் தான் ரெயில் பயணத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே தமிழக அரசும், தென்னக ரெயில்வே நிர்வாகமும் சகஜ நிலைக்கு ஆளாகி 100 சதவீத ரெயில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவா் கூறினார்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன், வட்ட செயலாளர் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கேசவன், துரையரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சா் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, நாகூர் பட்டினச்சேரி வெட்டாறு பகுதியில் ரூ.19 கோடி மதிப்பில் தடுப்பு கருங்கல் சுவர் அமைக்கும் பணி ஆகியவைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைெபற்றது. விழாவில் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் கலந்து ெகாண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னா் அவா் நிருபா்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ெதாிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு கஷ்டம் வந்தால் முதல்-அமைச்சர் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். வேளாண் சட்டத்தால் கடுகளவு கூட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. புயலால் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி நேரடியாக வந்து வயலில் இறங்கி பார்வையிட்டு சென்றுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். தற்ேபாது மழை விட்டு உள்ளது. வயல்களில் தேங்கிய தண்ணீரும் வடிய தொடங்கி விட்டது. விவசாயிகள் அச்சம் அடைய வேண்டாம்.
உரிய நிவாரணத் தொகையை முதல்- அமைச்சா் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். அதனால் தான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆசைப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்ற முயற்சி செய்கிறது. விவசாய சங்கத்தினருக்கு மக்கள் மத்தியில் அவ பெயரை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. விவசாய சட்டத்திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) இருந்து அனைத்து கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தப்படும் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்கும்.
கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிகொண்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். டெல்டா மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தொகுப்பு வீடுகள், குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் லட்சக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து பார்வையிட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல மழையால் பாதிக்கப்பட்ட மற்ற பயிர்களையும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.
சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செல்வராஜ் எம்.பி., ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே நிம்மேலி கிராமம் நடுதெருவை சேர்ந்த சின்னையன் மகன் வெங்கடேஷ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (34). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்திற்கு சென்றுவிட்டு, சீர்காழிக்கு திரும்பி கொண்டிருந்தனர். சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் மதகடி என்ற இடத்தில் மதகில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வெங்கடேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த நடராஜன் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கோமல் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சசிகுமார் (வயது 30). இவர் மயிலாடுதுறை சித்தர்காடு மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் சசிகுமார் கையில் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து அந்த 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். மர்ம நபர்கள் பறித்து சென்ற கைப்பையை பறிமுதல் செய்து சசிகுமாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்த கைப்பையில் இருந்த ரூ.2 ஆயிரம் அப்படியே இருந்தது. பின்னர் அந்தபகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடித்து வைத்திருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நீடூர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஷாஜகான் (46), நீடூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நூருல்அமீன் (35), அதே பகுதியை சேர்ந்த யாகூப் மகன் ஹாலிக் (32) என்பதும், இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
திருக்கடையூர் அருகே சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அலையால் அடித்து செல்லப்பட்ட சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமேடு மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் கரைப்பகுதி அடிக்கடி அரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கரையோர வீடுகள் மற்றும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் சின்னமேடு கிராமத்தில் கடல் சீற்றத்தால் கரையில் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் போடப்பட்ட கான்கிரீட் சாலையை கடல் அலை அடித்து சென்றது.
மேலும் இதனால் படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடங்களை உடனடியாக பார்வையிட்டு கடல் அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறையாறு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
நாகை மாவட்டம் பொறையாறு அருகே கழனிவாசல் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள், பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததையும், அங்கு இருந்த உண்டியல் மாயமானதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உண்டியலை தேடியபோது கடலாழி ஆற்றங்கரை புதரில் உடைந்த நிலையில் கிடந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிவிட்டு ஆற்றங்கரையில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காக்கழனி தோப்பு தெருவை சேர்ந்த அபிஷேக் (வயது22), அதே பகுதியை சேர்ந்த குமார் (41), பழையனூர் மேல்பாதியை சேர்ந்த விஜயதீனா (25), நாகூர் தைக்கால் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (20) ஆகியோர் என்பதும், அவர்கள் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
தோப்புத்துறையில் வடிகால் வசதியை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பெய்த தொடர் மழையால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மழைநீர் தேங்கினால் வடிய வைப்பதற்காக வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீரை வடியவைக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவக்குமார், நகரச்செயலாளர் அய்யப்பன், பொதுச்செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வடிகால் வசதியை சீரமைக்கக்கோரி தோப்புத்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மேலாளர் மன்சூர், சுகாதார மேற்பார்வையாளர் கோமதிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தண்ணீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வேதாரண்யம்-நாகை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






