என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அற்புத செல்வம் (வயது 34). மீனவர். இவர் கடந்த 15-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பீரோவில் பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்- இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ் ஆவியோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் பின் பக்கம் கதவை திறந்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம  நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வேளாண் அவசர சட்டங்களை கண்டித்து நாகை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    மத்திய அரசின் வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகை ரெயில் நிைலயத்தை நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுைகயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பொருளாளர் இப்ராகிம், மாவட்ட செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் வேளாண் அவசர திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
    கோடியக்கரை சரணாலயத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான், ஈராக் நாட்டில் இருந்து வரித்தலை வாத்துகள் வந்தன. இந்த பறவைகள் ஒரு மணி நேரத்தில் 160 கி.மீ. வேகத்தில் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 50 வகையான பறவைகள் நிலப்பறவைகள் ஆகும். 200-க்கும் மேற்பட்டவை நீர் பறவைகள் ஆகும்.

    உலகின் மிக உயரத்தில் பறக்கக்கூடிய பறவையினங்களுள் ஒன்றான இந்த வரித்தலை வாத்துகள் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வந்து செல்லும். இந்தநிலையில் கஜா புயல் காரணமாக கோடியக்கரை பகுதிக்கு வாராமல் இருந்த வரித்தலை வாத்துகள், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து உள்ளன.

    மிக அதிக உயரத்தில் 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் இந்த பறவைகள் பறக்கும் திறன் கொண்டவை என பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    புல் பூண்டுகளை உணவாக உட்கொள்ளும் இந்த வரித்தலை வாத்துகள் மத்திய ஆசிய நாடுகளான மங்கோலியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், திபெத், இந்தியாவின் லடாக் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண்டுதோறும்

    கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு குளிர் காலத்தில் வரும் இந்தப் பறவைகள் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு தங்கி ஹிமாலயன் மலைப்பகுதிக்கு சென்றுவிடும்.

    சாம்பல் வெள்ளை நிறம் கலந்த நிறம் கொண்ட இந்த பறவைகள் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சி அளிக்கும்.

    மற்ற பறவைகளை ஒப்பிடும் பொழுது இந்த வரித்தலை வாத்துகள் அதிகளவில் ஆக்சிஜனை உட்கொள்ளும் திறன் கொண்டமையால், நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டது என தஞ்சை சரக வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இந்த வரித்தலை வாத்துகள் கஜா புயல் தாக்கத்துக்கு பின் 3 ஆண்டுகளுக்கு பிறகு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த பறவைகளை அதிகாலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் நண்டு பள்ளம், முனியப்பன் ஏரி, காலவாய்க்கரை, சோழா கலங்கரை விளக்கம் பகுதி, சவுக்கு பிளட்டு, அலைவாரிப்பகுதிகளில் அதிகமாக சுற்றுத்திரிகின்றன. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அடுத்த வாரம் திறக்கப்படும். சரணாலயம் திறந்த உடன் இந்த பறவைகளை பார்த்து ரசிக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மயிலாடுதுறையில் கழிவுநீர் வெளியேறி தெருக்களில் சூழ்ந்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு அண்ணா வீதியில் பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்களில் சூழ்ந்து உள்ளதை கண்டித்து பூக்கடைத்தெருவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, நகராட்சி பொறியாளர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    பின்னர் நகராட்சி அதிகாரிகளை தெருக்களுக்கு அழைத்துச்சென்று பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை காண்பித்தனர். அப்போது அண்ணா வீதி, சந்திரி குளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கீழ்வேளூர் அருகே ஆட்டோவில் ஆடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே செருநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் ஜெயராமன் (வயது31). இவா் தனது வீட்டின் வாசலில் தனக்கு சொந்தமான 3 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது நேற்று காலை ஆட்டோவில் வந்த 2 பேர், மூன்று ஆடுகளை திருடி சென்றுள்ளனா். இதை பார்த்த ஜெயராமன் சத்தம் போட்டு உள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவா்களை விரட்டி பிடித்தனா். பின்னா் அவா்களையும், ஆட்டோவையும் கீழ்வேளூா் போலீசாரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவா்களிடம் போலீசார் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் கீழ்வேளூர் புத்தர்மங்களம் முருகேசன் மகன் பிரசாத்(வயது24), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (45) என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனா். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு 58 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் இருந்து “ஹிமாலய கிரிபன் கழுகு” வந்துள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகள் வந்து செல்லும். 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.

    இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளில் 4 அடி உயரம் உள்ள அழகுமிகு பூநாரை(பிளமிங்கோ) சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல் காகம், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வரும் ஆர்க்டிக்டேன்(ஆலா) இமாச்சல பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா(காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.

    கடந்த 1963-ம் ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமயமலையில் இருந்து “ஹிமாலய கிரிபன் கழுகு” வந்து சென்றது. தற்போது 58 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோடியக்கரைக்கு மீண்டும் “ஹிமாலய கிரிபன் கழுகு” வந்துள்ளது.

    இந்தியாவில் மொத்தம் 9 வகையான கழுகுகள் காணப்படுகின்றன. இதில் யூரேசியன் கிரிபன் கழுகு மற்றும் ஹிமாலய கிரிபன் கழுகுகள் உலகில் பழமை வாய்ந்ததாகவும், அழியும் தருவாயிலும் உள்ளன.

    இந்த பழமை வாய்ந்த ஹிமாலய கிரிபன் வகையை சேர்ந்த கழுகுகள், பருவ நிலை மாற்றத்தால் உடலின் சீதோஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள தற்போது ஹிமாலயன் மலைப்பகுதிகளில் இருந்து வேதாரண்யம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு புலம் பெயர்ந்து வந்துள்ளன.

    இங்கு வந்துள்ள கழுகு சுமார் 25 கிலோ எடை கொண்டது எனவும், இறந்த ஒரு மாட்டை அரை மணி நேரத்தில் உண்ணக்கூடியவை என்றும், இமயமலையில் பருவ நிலை மாற்றம், பனிப்புயல் காரணமாக இடம் பெயர்ந்து கோடியக்கரைக்கு வந்துள்ளது. இவை ஒரு சில நாட்கள் இங்கு தங்கி விட்டு மீண்டும் இமயமலைக்கே சென்று விடும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வகை கிரிபன் கழுகுகள் இறந்த உயிரினங்களின் உடல்களை பிரதானமான உணவாக உண்ணக் கூடியவை. மேலும் இந்த கழுகுகள் ஹிமாலய மலைப்பகுதிகளில், மலையின் உச்சிகளில் 1500 மீட்டர் முதல் 5500 மீட்டர் உயரங்களில் கூடு கட்டி வசிக்கக் கூடியவை. இந்த கழுகுகள் சுமார் 6 கிலோவில் இருந்து 25 கிலோ வரை உடல் எடை கொண்டதாக இருக்கும்.

    இந்த வகை கழுகுகள் கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபால், சீனா மற்றும் மங்கோலியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கோடியக்கரைக்கு வந்த ஹிமாலய கிரிபன் கழுகை வனத்துறையினரும், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர்.
    கரியாப்பட்டினத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் கவுண்டர் காடு மேற்கு பகுதியில் 60 குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளை சுற்றி வயல்களும் உள்ளன. நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கியது.

    அப்பகுதியில் உள்ள தார் சாலைகளில் 2 அடி தண்ணீர் தேங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் பொக்லின் எந்திரம் மூலம் தார் சாலையை வெட்டி தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தண்ணீர் வடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து தண்ணீர் வடிய ஏற்பாடு செய்தனர். .

    ஆனாலும் தண்ணீர் வடியவில்லை. மழை விட்டு ஒரு வாரமாகியும், அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு தண்ணீரில் தான் நடந்து செல்கின்றனர். வீடுகள் மற்றும் வீட்டின் கழிவறைகளை சுற்றியும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வடியாததால் இப்பகுதி மக்கள் தண்ணீரை வடியவைக்க வாய்க்கால் வெட்டும் பணிக்கு சென்றனர். தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் முருகு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிசெல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தண்ணீர் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    நாகையில் கருவாடு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கருவாடு காயவைக்கும் தளங்களில் மழைநீா் தேங்காமல் நடவடிக்கை எடுக்க உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு குடிசைகள் அமைத்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகை கருவாடுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருவாடுகள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும். நாகையில் தயாரிக்கப்படும் கருவாடுக்கு தனி மவுசு உண்டு.

    இந்த நிலையில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக நாகை விசைப்படகு மீனவர்கள் கடந்த 15 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கனமழையால் நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் கருவாடு உற்பத்தி மொத்தமாக முடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதால் கருவாடு தயாரிக்க தேவையான அனைத்து வகையான மீன்களும் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. இதை வைத்து தற்போது கருவாடு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கருவாடு உற்பத்தியாளர் சத்யா கூறியதாவது:-

    நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக கருவாடு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போது விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதால் கருவாடுக்கு தேவையான மீன்கள் கிடைக்கிறது. இதை வைத்து கருவாடு உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இங்கு இருந்து பல்வேவறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர் உள்ளூர் மக்களும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஓட்டம் பாறை கருவாடு அதிக அளவில் விற்பனையாகிறது.

    மழை காரணமாக கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரூ.150-க்கு விற்ற பாறை கருவாடு ரூ.250-க்கும், ரூ.30-க்கு விற்ற கெளுத்தி கருவாடு ரூ.70-க்கும், ரூ.110-க்கு விற்ற வாளை ரூ.150-க்கும், ரூ.40-க்கு விற்ற ஓட்டாம்பாறை ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழைக்காலங்களில் கருவாடு காயவைக்கும் தளத்தில் தண்ணீர் தேங்குவதால் தொழில் முற்றிலுமாக முடங்கி் போகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தண்ணீரை வெளியேற்ற வேண்டியுள்ளது. அதுவரை சாலையில் கருவாட்டை காய வைக்கும் நிலை உள்ளது. எனவே கருவாடு காய வைக்கும் தளத்தில் மழை நீர் தேங்காதவாறு மேடுப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    வேதாரண்யம் அருகே கடற்கரை பகுதியில் சுமார் 30 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை இந்த மழை காலங்களில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து வரும் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீரோட்டத்திற்கு தகுந்தவாறு கடந்து இப்பகுதிக்கு வந்து, மேடான மணல் பரப்பில் குழி தோண்டி 15 முதல் 25 வரை முட்டைகள் இட்டு மூடிவிட்டு சென்றுவிடும். சமூக விரோதிகள் இந்த ஆமை முட்டைகளை, திருடிச் சென்று இதை சாப்பிட்டால் ஆண்மை அதிகமாகும் எனக்கூறி அதிக விலைக்கு விற்று விடுவார்கள். 

    வனத்துறையினர் அந்த முட்டைகளை சேகரித்து கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதியில் உள்ள ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாத்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சுமார் 15 நாட்களுக்கு குறையாமல் பொறிப்பகத்தில் வளர்த்து கடலில் பின்னர் விடுவர்.

    இந்த நிலையில் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் சுமார் 30 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கியது. இயற்கை சீற்றம், கப்பல் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபட்டு ஆமை கரை ஒதுங்குவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம் பகுதியில் திடீரென கடல் 50 அடி தூரம் திடீரென உள்வாங்கியது. இதனால் இயற்கை சீற்றம் ஏதுவும் ஏற்பட போகிறதா? என அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் வரை உள்ள கடற்கரை பகுதியில் புரவி புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டதால்அதிகளவில் கடல்நீர் புகுந்து, கடல் நீரும் மழை நீரையும் சேர்ந்து குளம் போல் காட்சியளித்தது. கடற்கரையில் உள்ள மீனவர்களின் இறங்கு தள கொட்டகைகள், வலைகள் மற்றும் என்ஜின்களை பாதுகாப்பாக வைக்கும் கொட்டகைகளில் கடல்நீா் சூழ்ந்தது. அதன் பிறகு கடல் நீர் வடிந்து விட்டது. இந்த நிலையில் புஷ்பவனம் பகுதியில் கடல் 50 அடி தூரம் திடீரென உள்வாங்கியது. இதனால் இயற்கை சீற்றம் ஏதுவும் ஏற்பட போகிறதா? என அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா்.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், இது வழக்கமான நிகழ்வு தான் என்றும், அமாவாசை பவுர்ணமி காலங்களில் காலை முதல் இரவு வரை கடல் உள்வாங்குவதும். பின்னா். பழைய நிலைக்கு கடல் வந்துவிடுவதும் வழக்கமான ஒன்றுதான் என்றும், இதற்கு அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் தெரிவித்தனர்.
    வேதாரண்யத்தில் விவசாயியை தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ராமகிரு‌‌ஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது45). விவசாயி. இவருடைய அண்ணன் சேகர் (50). இதில் சேகர் வெளியூரில் வசித்து வருகிறார். இவர்களுடைய தாயார் செல்லம்மாள் இறந்த 30-ம் நாள் நிகழ்ச்சிக்கு சேகர் வெளியூரில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அண்ணன், தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சேகர் மற்றும் அவருடைய மகன் தீபக் ஆகியோர் சேர்ந்த சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கினர். காயம் அடைந்த சாமிநாதன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து செய்தனர். மேலும் தீபக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோல் சேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமருகல் அருகே வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஆலமரத்தடியில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் யூசுப்தீன் முன்சீப், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் பகுரூதின், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி தமிமுன் அன்சாரி, திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க துணை அமைப்பாளர் சேக்பரிது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பபட்டன. முடிவில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் நி‌ஷாத் நன்றி கூறினார்.

    ×