என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் மயிலாடுதுறை வ.உ.சி. தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் கடந்த 2007-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் குழாய் மற்றும் ஆள்நுழைவுத் தொட்டிகள் உடைந்து சாலைகள் உள்வாங்கி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தரங்கம்பாடி சாலையில் ஆள்நுழைவுத் தொட்டி உடைந்ததால் சாலை உள்வாங்கியது. அந்த பகுதியில் தற்போது சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் கூறைநாடு வ.உ.சி. தெருவில் உள்ள ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி, தெருவில் சுகாதாரகேட்டை உருவாக்கும் வகையில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே சென்று வரமுடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். வீட்டிற்குள்ளும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதேபோல கூறைநாடு திருமஞ்சனவீதி, எடத்தெரு, வெள்ளந்தாங்கி அய்யனார் கோவில் தெரு, அண்ணா வீதி உள்பட பல இடங்களில் ஆள்நுழைவுத் தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் மற்றும் ஆள்நுழைவுத் தொட்டிகளை சீரமைத்து கழிவுநீர் வெளியேறாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குற்றம் பொருத்தானிருப்பு மதகடி அருகில் சாராயம் விற்ற சங்கமங்கலம மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் (வயது20), ஆழியூர் பிரிவு சாலை அருகே சாராயம் விற்ற நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த குமரவேல் மகன் பிரபு (25) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.இதுகுறித்துகீழ்வேளூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவா்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் ெசய்தனர்.
    மணல்மேட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். நகைக்காக இந்த கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மணல்மேடு:

    மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேட்டை அடுத்த நடுத்திட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜானகி (வயது 72) . சண்முகம் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் ஜானகி தனியாக வசித்து வந்தார். இவரது மகன் பாரிராஜன். அரசு டாக்டரான இவர், மணல்மேட்டில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஜானகியின் வீட்டு பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், ஜானகியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர்.

    பின்னர் ஜானகி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் சங்கிலியை அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

    நேற்று காலை ஜானகி வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுப்பதற்காக டாக்டர் பாரிராஜன் வந்தார். அவரது கார் டிரைவர் ஜான்சன், ஜானகியை அழைத்துள்ளார்.

    நீண்ட நேரமாக அழைத்தும் வீட்டுக்குள் இருந்து ஜானகி வெளியில் வராத காரணத்தால் பின்பக்க வழியாக சென்று பார்த்துள்ளார். அப்போது ஜானகி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த தகவலை டாக்டர் பாரிராஜனிடம் தெரிவித்தார்.

    அவரும் ஓடி வந்து தனது தாய் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து அவர், மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருவதுடன், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் நடந்த பகுதியிலேயே மணல்மேடு போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. போலீஸ் நிலையத்தின் அருகிலேயே மிகவும் துணிச்சலாக கொலையாளிகள் மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்துச்சென்ற சம்பவம் மணல்மேடு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
    தனது நடத்தையில் கணவர் சந்தேகம் அடைந்ததால் மனம் உடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயிலடி ஹாஜியார் நகரை சேர்ந்தவர் மாதவன்(வயது 37). இவர் கடலை மிட்டாய் வியாபாரி ஆவார். இவருடைய மனைவி ஆவுடையம்மாள்(34). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது.. 12 வயதில் ஹரிணிதா என்ற மகள் உள்ளார்.

    மாதவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மாதவன் மது அருந்தி விட்டு சந்தேகத்தின் பேரில் தனது மனைவி ஆவுடையம்மாளிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த மாதவன் வழக்கம்போல் ஆவுடையம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த ஆவுடையம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீ மளமளவென அவரது உடலில் பரவியதால் வேதனை தாங்காமல் ஆவுடையம்மாள் கூச்சலிட்டு கதறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகள் ஹரிணிதா ஓடி வந்து பார்த்தார். அப்போது தனது தாயார் தீயில் எரிவதை பார்த்து கதறி அழுதார்.

    அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து ஆவுடையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாஜிஸ்தி்ரேட்டு அப்துல்கனி தீக்காயம் அடைந்த ஆவுடையம்மாளிடம் வாக்குமூலம் பெற்றார். வாக்குமூலத்தில் ஆவுடையம்மாள், தனது கணவர் மாதவன் குடித்துவிட்டு சந்தேகத்தின் பேரில் தன்னிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆவுடையம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனையடுத்து ஆவுடையம்மாளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆவுடையம்மாளின் சகோதரர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 4-வது தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முப்பிடாதி(36) என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் மயிலாடுதுறை போலீசார் மாதவன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக மாதவனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன என வேதாரண்யம் அருகே விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எல்.முருகன் கூறினார்.
    வேதாரண்யம்:

    வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன என வேதாரண்யம் அருகே விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எல்.முருகன் கூறினார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு கிராமத்துக்கு விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பிரசார பயணமாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் வந்தார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். 

    நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வரதராஜன், பேட்டை சிவா, மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசும் போது கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக மூன்று வேளாண் திருத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது. அந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டுள்ளன. 

    ஆனால் டெல்லியில் எதிர்க்கட்சிகள், தனிநாடு கோரும் ஒருசில அமைப்புகளுடன் சேர்ந்து எதிர்க்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் விவசாயிகளுக்கு எதிராக நடந்து வருகின்றன.

    இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் நடந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து காணாமல் போய்விட்டது. இதேபோல தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை விவசாயிகளும், பொதுமக்களும் படுதோல்வி அடைய செய்வார்கள். 

    பா.ஜ.க. அரசு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வீதம் 41 லட்சம் விவசாயிகளுக்கு உதவி தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக மோடி அரசு பாடுபட்டு வருகிறது. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பொய் பிரசாரம் செய்யும் தி.மு.க.விற்கு விவசாயிகள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கட்சியின் பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
    மயிலாடுதுறை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அரும்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுந்தராம்பாள்(வயது48). சம்பவத்தன்று சுந்தராம்பாள் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று வி்ட்டு வீடு திரும்பினார். ஈச்சங்குடி பாலிடெக்னிக் அருகே அவர்கள் வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆசாமி திடீரென சுந்தராம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டார். இதன்மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும்.

    இது குறித்து சுந்தராம்பாள் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
    திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.
    திட்டச்சேரி:

    திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரிலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரிலும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில போலீசார் ஈடு்பட்டனர். இதேபோல் ஏனங்குடியில் திருக்கண்ணபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார்சைக்கிள் வந்தது. இந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்பேரில் மறித்து சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிள்களில் 2 மூட்டைகளில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 200 சாராயம் பாட்டில்கள் இருந்தன. இதை தொடா்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், மானாம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த தனபால் (44), அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஜெகதீசன் (வயது 35) என்பதும், இவா்கள் திருவாரூர் பகுதிக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து 200 சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.
    பொறையாறு பகுதியில் உப்புநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் அழுகின. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பொறையாறு:

    நாகை மாவட்டத்தில் புயல் காரணமாக பெய்த கன மழையால் பொறையாறு, தரங்கம்பாடி, காழியப்பநல்லூர், காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி, செம்பனார்கோவில், பரசலூர், கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம், கீழ்மாத்தூர், மேமாத்தூர், நல்லாடை, விளக்கம், கொத்தங்குடி, அரசூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், விசலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நடவு செய்த வயல்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

    இதனால் விவசாயிகள் மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கடல் சீற்றத்தால் பொறையாறுக்கு கிழக்கே ராஜீவ்புரம், கீழமேட்டுப்பாளையம், நண்டலாறு சோதனை சாவடி பகுதிகளில் உப்புநீர் புகுந்து, நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல திருக்கடையூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையினால் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    கடந்த 12 நாட்களாக நெற்பயிர்களை மூழ்கி இருந்த தண்ணீர் தற்போது வடிய தொடங்கிய நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டு நாட்களாக திருக்கடையூர், டி.மணல்மேடு, கண்ணங்குடி, கிள்ளியூர், பிள்ளை பெருமாநல்லூர், அன்னப்பன்பேட்டை, கிடங்கல், காலமநல்லூர், ஆக்கூர், மடப்புரம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் நெற்பயிர்கள் மேலும் பாதிப்படைந்து சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வாய்மேடு அருகே கடையின் ஷட்டரை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள்-பணத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனா்.
    வாய்மேடு:

    வாய்ட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் மருதூர் வடக்கு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வீரராகவன் (வயது25) என்பவா் போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை செல்போன் கடையின்ஷட்டா் உடைக்கப்பட்டு முன்பக்க கண்ணாடி கதவும் திறந்து கிடந்துள்ளது. அதை பார்த்த அக்கம் பக்கத்தினா், இதுகுறித்து வீரராகவனுக்கு தகவல் தெரிவித்தனா். உடனே அவா் கடைக்கு வந்து பாா்த்த போது ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானரி, வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் செல்போன்கள்- பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் நாகையில் இருந்து மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டு அது திருட்டு நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் ஜெயசீலன் தடயங்களை கேகாித்தார். இதுகுறித்து வாய்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை வலைவீசி தேடி வருகின்றனா்.
    குத்தாலம் அருகே ராகவேந்திரா ஆசிரமத்தில் 2 வெண்கல சிலைகளை மர்ம மனிதர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை திருடிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தை அடுத்த சிவராமபுரம் அக்ரஹாரத்தில் ராகவேந்திரா ஆசிரமம் உள்ளது. கடந்த 16-ந் தேதி இரவு ஆசிரமத்தில் பணிகளை முடித்து விட்டு ஆசிரம காப்பாளர் மணி வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் 17-ந் தேதி ஆசிரமத்திற்கு வந்தபோது கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது ஆசிரமத்தில் இருந்த 23 கிலோ எடை உள்ள இரண்டு வெண்கல சிலைகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சென்னையில் உள்ள ஆசிரம உரிமையாளருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சென்னையில் இருந்து வந்த ஆசிரமத்தின் உரிமையாளர் ஹரிகணேஷ் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். ஆசிரமத்தில் வெண்கல சிலைகள் திருட்டு போன சம்பவம் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபரை கைது செய்த போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.
    நாகூர்:

    நாகை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரிலும், துணை சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல் படியும் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூரை அடுத்த பாலக்காடு பகுதியில் நேற்று நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் சரக்கு வேனில் ஒருவா் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அங்கு சென்று மணல் அள்ளி கொண்டிருந்த நபாிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், நாகூரை அடுத்த தெத்தி கீழத்தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் அரவிந்த் (வயது 35) என்பதும், அவர் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர். மேலும் அவாிடம் இருந்து சரக்கு வேனை பறிமுதல் செய்தனா்.
    துளசியாப்பட்டினத்தில், ‘மினி கிளினிக்’ அமைக்கக்கோரி கொட்டும் மழையில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த துளசியாப்பட்டினத்தில் சுகாதாரத்துறை ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் தமிழக அரசு அறிவித்த அம்மா ‘மினி கிளினிக்’கை அமைக்காமல், வண்டுவாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அமைக்க உள்ளதாக தெரிகிறது.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், துளசியாப்பட்டினத்தில் அம்மா ‘மினி கிளினிக்’கை அமைக்க வலியுறுத்தியும் துளசியாப்பட்டினத்தில், அரசு துணை சுகாதார நிலையம் முன்பு 100 பெண்கள் உள்பட 250 பேர் கொட்டும் மழையில் குடை பிடித்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்திற்கு ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தியாகராஜன், நவாஷ், பஷீர் அகமது, சலீம், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொன்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்தானமேரி, முனியாண்டி, ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ரெங்கநாதன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதியில்லை, முறைப்படி அனுமதி வாங்க வேண்டும் எனவே தற்போது அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என அதிகாாிகள் கூறினா். இதனையடுத்து வருகிற 24-ந் தேதி(வியாழக்கிழமை) வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடப்படும் என தெரிவித்து விட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனா்.

    ×