என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேளாங்கண்ணி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அடகு வைத்திருந்திருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை மீட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மாலையில் அமர்தலிங்கம் மனைவி வேம்பு அரைஞான் கயிறு எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது சட்டை பையில் உள்ளது என கூறி உள்ளார். இதை தொடர்ந்து அவரது சட்டைபையில் பார்த்த போது அதை காணவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இதை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அவரது வீட்டின் எதிர்புறத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வேம்பு அங்கு சென்று பார்த்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் அமிர்தலிங்கம் தூக்கில் தொங்கி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அமிர்தலிங்கத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அமிர்தலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில். கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாத நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்தும் வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதையொட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கடந்த 2008-ம் ஆண்டு தனியார் மின் ஆலை அமைப்பதற்காக வாழஒக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது வாழஒக்கூர் கிராமத்தை தத்தெடுத்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டது.

    ஆனால் பல ஆண்டுகளாகியும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பது போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாத நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்தும் வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக நேற்று அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதையொட்டி வாழ ஒக்கூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். நிலக்கரி துகள்கள் காற்றில் பரவி சுவாச பிரச்சினை ஏற்படுவதை தடுக்க வேண்டும். நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன் நாயருக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயராஜ் மற்றும் பனங்குடி, பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், கோபுராஜபுரம், முட்டம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ெபாதுமக்கள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த அடிப்படையில் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அளித்த உத்தரவின்படி நிரந்தர பணி வழங்கவில்லை. ஓராண்டு காலமாக ஊதியமும் வழங்கவில்லை. ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கவில்லை. இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், பெட்ேராலிய நிறுவன விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போக்கை கண்டித்தும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலை பனங்குடி, பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், கோபுராஜபுரம், முட்டம் ஆகிய 6 கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


    நாகப்பட்டினம் அருகே வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாகை நீலா தெற்கு வீதியில் கார்ப்பரேஷன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாகை நீலா தெற்கு வீதியில் கார்ப்பரேஷன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் மதுசூதனன், ஜெகன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், பொறியாளர் வசந்தன் மற்றும் அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் சென்று ஆய்வு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    நாகை புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள் உள்ளன. இதில் பல கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்திருந்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து நேற்று நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், பொறியாளர் வசந்தன் மற்றும் அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது நகராட்சி ஆணையர், கடைக்காரர்களிடம் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால், நகராட்சி பணியாளர்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறினார்.

    அதற்கு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது என கூறியதால், இருதரப்பினர் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது நகராட்சி ஆணையர் கூறுகையில், ‘கடைகள் வைக்க நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் கடைகள் செயல்பட வேண்டும். பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடைபாதைகளை ஆக்கிரமிக்க கூடாது. அவ்வாறு செயல்படும் கடைகள் அகற்றப்படும்.

    நகராட்சி சார்பில் ஒதுக்கிய இடத்தில் கடைகள் வைத்துக்கொள்ளவே நகராட்சிக்கு வரி செலுத்தப்படுகிறது. அதிலும் நிறைய கடைகள் வரி செலுத்தாமல் நிலுவை தொகை வைத்துள்ளனர். எனவே நிலுகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்றார்.

    அதன்பின்னர் கடையின் உரிமையாளர்கள் தாங்களாவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். தொடர்ந்து நடத்திய ஆய்வில் உரிமம் புதுப்பிக்காமல் உள்ள கடையின் உரிமத்தை உடனடியாக புதுப்பிக்கவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
    திருமருகல் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மர்ம நபர், தீ வைத்து கொளுத்தி விட்டார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நெல் தீயில் எரிந்து நாசமானது.
    திட்டச்சேரி:

    திருமருகல் அருகே மதுபோதையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நெல் மூட்டைகளை தீயிட்டு கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவருடைய மகன் இளங்கோவன். விவசாயி. இவர் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய மருங்கூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை. இதையடுத்து கொள்முதல் நிலையம் அருகே சாலையோரம் நெல் மூட்டைகளை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மர்ம நபர், தீ வைத்து கொளுத்தி விட்டார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நெல் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து இளங்கோவன் நாகூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மருங்கூர் தெற்கு தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் கார்த்திகேயன் (வயது30) என்பவர் மதுபோதையில் அங்கிருந்த நெல் மூட்டைளை தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு பகுதிக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 10 நாட்களாக இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வரவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக வேதாரண்யம்- கோடியக்கரை சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.
    கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.தேவூரில் உள்ள வட்டார மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் அதாவது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட்டு, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் எதுவும் இல்லை. இவ்வாது அதில் கூறப்பட்டுள்ளது.
    இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
    வேதாரண்யம்:


    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்க நாகை கியூ பிரஞ்ச் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த கண்காணிப்பையும் மீறி கஞ்சா மற்றும் தங்கம் கடத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிராஞ்ச் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன், நாகை கியூ பிரஞ்ச் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் போலீசார் நேற்று தோப்புத்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லை. மாறாக, ஆம்புலன்சில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ்சில் வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை அயனாவரம் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 46)், மகேந்திரன்(24), வினோத்(26), சுந்தர்(36) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா பொட்டலங்களை சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட இருந்ததும் தெரிய வந்தது.

    மொத்தம் 28 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா ஆம்புலன்சில் இருந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்சையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு நமது நாட்டில் ரூ.3 லட்சம் என்று தெரிவித்த போலீசார், சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
    வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி பருவம் தவறி கடந்த மாதம் பெய்த கனமழையினால் காலதாமதமாக கடந்த மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் காலை10 மணி வரை ஈடுபடுகின்றனர்.

    இந்த ஆண்டு காலதாமதமாக உற்பத்தி துவங்கினாலும் தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகும் என உப்பு உற்பத்தியாளர் தெரிவித்தனர்.

    நாகையில் தனியாக இருந்த பெண்ணை குக்கரால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை செம்மரக்கடை வடக்குத் தெருவை சேர்ந்தவர் தாதா‌ஷரிப். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரிஹானாசமின் (40). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    ரிஹானாசமின் வீட்டின் மேல் யாசர் அரபத் (35) என்பவர் கடந்த 2 ஆண்டு காலமாக வாடகைக்கு இருந்து வருகிறார். சம்பவத்தன்று ரிஹானாசமின் வீட்டில் தனியாக இருந்தபோது யாசர்அரபத் ரிஹானாசமினிடம் தவறாக நடக்க முற்பட்டாராம். அவர் கூச்சலிடவே குக்கரை எடுத்து ரிஹானாசமினை தலையில் தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து யாசர்அரபத்தை கைது செய்தார்.

    நாகை அருகே குடிபோதையில் தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம:

    நாகை அருகே திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைதம்பி(52). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கைலியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டடுள்ளார்.

    இதுகுறித்து திருகண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    நாகூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி புறா கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன். இவரது மகன் அபுல்இர்சாத் (21). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபாம் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரி சென்றார். அங்கு தனது நண்பர் முகமதுபரகத் (19) என்பவரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வந்தபோது பனங்குடி அருகே கும்பகோணம் சென்ற தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அபுல் இர்சாத் சம்பவ இடத்திலயே இறந்தார். காயமடைந்த முகம்மதுபரகத் நாகை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×