என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமருகல் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டச்சேரி:

    நாகையை அடுத்த பண்டாரவாடை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மனைவி கனகவள்ளி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கனகவள்ளி தனது குழந்தையை பார்த்து கொள்ள ஒரு வேலைக்கார பெண்ணை வைக்குமாறு கணவர் பக்கிரிசாமியிடமும், மாமியார் விஜயலட்சுமியிடமும் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த கனகவள்ளி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கனகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கனகவள்ளிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மணிவேலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் முகமது (வயது 60) இவர் ஆடு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருப்பூண்டி அருகே சென்ற போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பஷீர் முகமதுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பஷீர் முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே குற்றம்பொருத்தானிருப்பு மதகடி பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தனபால் (58) , ராதாமங்கலம் எறும்புகன்னி காத்தவராயன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகையன் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி அருகே சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் கிடைக்காத அதிர்ச்சியில் விவசாயி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடைகாரமூலை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி(வயது 84). இவர் சாகுபடி செய்திருந்த 4 ஏக்கர் சம்பா நெற்பயிர் கடந்த கனமழையின் காரணமாக முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்து நாசமாகி விட்டது. இதனால் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்த கிருஷ்ணமூர்த்தி வேதனையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் அறிவித்த நிவாரண தொகை பழைய பாளையம் கிராமத்தில் உள்ள சில விவசாயிகளுக்கு கிடைக்கவில்லையாம். இதில் அரசு சார்பில் ஏக்கருக்கு ரூ. 8000 வீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.விவசாயி கிருஷ்ண மூர்த்திக்கு நிவாரண தொகை ரூ. 4000 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையில் இருந்து வந்தாராம் .

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் அருகே உள்ள செம்பியமனக்கொடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயப்பிரியா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதில் மனமுடைந்த ஜெயப்பிரியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயப்பிரியா இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே படகிலிருந்து தவறி விழுந்த பாம்பன் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் காவல் சரகம் கோடியக்கரை கடற்கரையில் பாம்பன் பகுதி தெற்குவாடியை சேர்ந்த முனியசாமி(51) என்ற மீனவர் நேற்று தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது தரங்கம்பாடி புதுப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(32) என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலிருந்து, பாம்பனை சேர்ந்த டேவிட் என்பவருக்கு சொந்தமான வள்ளம் படகிற்கு அருகில் சென்று முனியசாமி ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறி பைபர் படகில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

    உடன் அவரை கரைக்கு கொண்டு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது முனியசாமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுபற்றி வேதாரண்யம் கடற்கரை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    நாகையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வெளிப்பாளையம் தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது40) என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து ரவியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    தரங்கம்பாடி அருகே வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே உள்ள சின்னங்குடி தெற்கு சுனாமி நகரை சேர்ந்தவர் சத்தியராஜ். மீனவர். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25).

    நேற்று இரவு இவர் வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென கட்டையால் தமிழ்செல்வியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர். 

    இதற்கிடையே காயமடைந்த தமிழ்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொறையார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு மீன்பிடி தொழில் செய்ய ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான் (வயது 48) என்பவருக்கு சொந்தமான படகில் அவரும், பாம்பனை சேர்ந்த செல்வேந்திரன் (48), தோமஸ் (58), அந்தோணி (42), வினோத் (38), போஸ் (40) ஆகிய 6 மீனவர்கள் வந்தனர்.

    கடந்த 1-ந்தேதி மதியம் இவர்கள் கோடியக்கரையில் இருந்து பெரிய படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    நேற்று முன்தினம் இரவு இவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்தபோது இவர்கள் வலையில் ஒரு பாட்டில் சிக்கியது. 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த பாட்டிலில் ஒரு வகையான திரவம் இருந்தது. இந்த பாட்டிலை வலையில் இருந்து எடுத்து மீனவர்கள் படகில் வைத்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அந்தோணி, வினோத், போஸ் ஆகிய 3 பேரும் மற்றவர்களுக்கு தெரியாமல் படகில் இருந்த அந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்தனர். பின்னர் அவர்கள் தூங்க சென்று விட்டனர்.

    நேற்று காலை கரை திரும்பியபோது படகில் தூங்கிய அந்தோணி, வினோத், போஸ் ஆகிய 3 பேரையும் மற்ற மீனவர்கள் எழுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் எழுந்திருக்காமல் மயங்கி கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் படகை வேகமாக ஓட்டி கோடியக்கரைக்கு வந்தனர்.

    பின்னர் கரைக்கு வந்து பார்த்த போது அந்தோணி இறந்தது தெரிய வந்தது. மயங்கி கிடந்த வினோத், போஸ் ஆகிய 2 பேரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர்களை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி போஸ், வினோத் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்த கடலோர காவல் குழுமம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    உயிரிழந்த மீனவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அந்த பாட்டிலில் இருந்தது சாராயமா? அல்லது எந்த வகை திரவம் என தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே வலிவலம் போலீஸ் சரகம் சூரமங்கலம் வடுவகுடி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகள் புனிதவள்ளி (வயது23), இவருக்கும் வேதாரண்யம் அருகே கோடியக்கரையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண்குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக கணவர் திருநாவுக்கரசிடம் கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டில் புனிதவள்ளி தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று புனிதவள்ளி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதவள்ளி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புனிதவள்ளிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேதாரண்யத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர் திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 40). இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    சம்பவத்தன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அய்யாதுரையை உறவினர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்பு தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாதுரை இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. இதில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சிதுறை, கல்வி துறையில் பணியும் அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 212 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு, டாக்டர்கள் ரோகினி, சந்திரமவுலி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×