என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேளாங்கண்ணி அருகே சரக்கு ஆட்டோ மோதி தாய் கண் முன்னே மாணவர் பலியானார்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கோகிலா. இவர்களுடைய மகன் சிவசந்தோ‌‌ஷ் (வயது12). இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்இந்த நிலையில் நேற்று கோகிலா மற்றும் சிவசந்தோ‌‌ஷ் ஆகிய 2 பேரும் பிரதாபராமபுரம் கழுவன்குளம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி பொரி ஏற்றி கொண்டு வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக 2 பேர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவசந்தோ‌‌ஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோகிலா படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவசந்தோ‌‌ஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த கோகிலாவை சிகிச்சைக்காகவும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுதொடர்பாக கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் விஜயஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஸ்ரீவத்சன் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாய் கண்முன்னே மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்பத்தி உள்ளது.
    வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டத்தில் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதிகள் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றன. வேளாங்கண்ணியில் நீண்ட கடற்கரை உள்ளது. தமிழக சுற்றுலா துறையின் மூலம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பூங்கா திறக்கப்படவில்லை.

    வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு விழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    மேலும் ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், தவக்காலத்தின் போதும் வேளாங்கண்ணியில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். முக்கிய விடுமுறை நாட்களிலும் அதிக அளவில் கூட்டம் காணப்படும்.

    வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்கின்றனர். இவ்வாறு மகிழ்ச்சியாக கடலில் குளிக்கும் போது சோகமான நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

    கடலில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது.

    இதனை தடுக்க கடலோர காவல் படை போலீசாரும், மீனவர்களும் மற்றும் வேளாங்கண்ணி போலீசாரும் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் உயிர் பலியை தடுக்க முடிவதில்லை. 2019-ம் ஆண்டில் 13 பேரும், 2020-ம் ஆண்டில் 13 பேரும், 2021-ம் ஆண்டில் இதுவரை 4 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 30 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். கடலில் மூழ்கிய 20-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

    கடலில மூழ்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க வேளாங்கண்ணி கடற்கரையில் 700 மீட்டர் நீளத்திற்கும், 200 மீட்டர் அகலத்திற்கும் தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பக்தர்கள், மீனவர்கள், வியாபாரிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யத்தில் பறவைகளை சுட்டு வேட்டையாடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலய வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தஞ்சாவூர் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், வனஉயிரினக் காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்திரவின்படி ரோந்து பணி மேற்கொண்டனர்

    அப்பொழுது கீழ ஆறுமுக கட்டளை பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 35) என்பவர் அப்பகுதியில் உள்ள நாடேட்டி குளத்தில் வரும் பறவைகளை ஏர்கன் மூலம் சுட்டுகொண்டிருந்தார். இதை பார்த்த வனவர் சதீஷ்குமார், வனக்காப்பாளர் முனியசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் சுதாகர், லோகநாதன் ஆகியோர் விஜயகுமாரை கைது செய்தனர்.

    நாகையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் பணியை முடித்து விட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார். அப்போது அங்கு குடியிருக்கும் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் சிவக்குமார்(வயது33) திடீரென பிரவீனாவை தடுத்து நிறுத்தி கீழே தள்ளினார். பின்னர் கன்னத்தில் கடித்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

    அதிர்ச்சியடைந்த பிரவீனா அவரிடமிருந்து தப்பியோடி நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திட்டச்சேரி அருகே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் மாயமானார். இது குறித்து அவரது மகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சீயாத்தமங்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 55). கணவர் பாலசுப்ரமணியன்.

    10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்த விஜயலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காணாமல் போய்விட்டார்.

    அவருடைய மகள் தனலட்சுமி (33) திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கோவையில் இருந்து நாகைக்கு பஸ்சில் கொண்டு வந்த சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய ஆவணங்களை கொடுத்ததால் திரும்ப ஒப்படைத்தனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை பறக்கும்படை தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நாகை- நாகூர் மெயின்ரோடு அரசு ஐ.டி.ஐ. அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவையில் இருந்து நாகையை நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த பஸ்சிஸ் 7 மூட்டைகளில் சேலைகள் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததால் அந்த சேலை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சேலை மூட்டைகளை நாகை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    நாகூரை சேர்ந்த மொய்தீன் என்பவர் இந்த சேலைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து நாகை தாசில்தார் முருகு விசாரணை நடத்தினார். இதையடுத்து சேலைகளுக்கு ஆவணங்களை எடுத்து வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார். இதனால் அந்த சேலைகளை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.45 லட்சம் மற்றும் 45 பவுன் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது61).அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலை பராமரித்து வருகிறார். இந்த கோவிலுக்கு நாகையை சேர்ந்த ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி(36) ஆகியோர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அப்போது ராஜேஸ்வரிக்கும், சுப்பிரமணியனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணியனிடம் அதிக பணம் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்து கொண்ட

    ராஜேஸ்வரி தனக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளதை தெரிந்து கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை கேட்டு வங்கி கணக்குகளை முடக்கி விட்டனர். இதனால் ரூ.45 லட்சம் கொடுத்தால் வருமான வரித்துறைக்கு வரியை செலுத்தி விட்டால் வங்கி கணக்கு விடுவிக்கப்படும். பின்னர் உங்களுக்கு பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சுப்பிரமணியன் தன்னிடம் இருந்த ரூ.45 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

    மீண்டும் ராஜேஸ்வரி வருமான வரித்துறைக்கு பணம் செலுத்தவேண்டும் என கூறி ரூ.10 லட்சம் பணம் கேட்டார். அதற்கு சுப்பிரமணியனை நம்ப வைக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரி போல் தனது நண்பர் ராகுலை நேரடியாக அழைத்து சென்று பேச வைத்துள்ளார். இதை நம்பிய சுப்பிரமணியன் தன்னிடம் பணமில்லை என்று கூறி தனது மகள் பாரதியின் 45 பவுன் நகைகளை எடுத்து அவரிடம் கொடுத்தார். இதையடுத்து ரூ.45 லட்சம் மற்றும் 45 பவுன் நகைகளை வாங்கி சென்ற ராஜேஸ்வரி பல மாதங்களாகியும் அதை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுப்பிரமணியன் கடந்த ஜனவரி 6-ந் தேதி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகா‌‌ஷ் மீனாவிடம் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேஸ்வரி அவரது தந்தை ராமகிரு‌‌ஷ்ணன், தாய் சாந்தா, தங்கை நந்தினி மற்றும் உறவினர்கள் முருகன், ராகுல், வெங்கடபாலாஜி, ராமு, ராஜா ஆகிய 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இருந்த ராஜேஸ்வரியை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் நாகை மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை தேடி வருகின்றனர்.

    அகஸ்தியம்பள்ளியில் குடிசை மாற்றுவாரியம் மூலம் கட்டப்படும் வீடுகளை மாற்று இடத்தில் கட்டக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியை சேர்ந்த அகஸ்தியம்பள்ளி, மேலக்காடு மற்றும் கைலவனம் பேட்டை பகுதிகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.83 கோடி செலவில் 816 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வீடுகள் கட்டப்படும் இடங்கள் வடிகால் பகுதிகளாகவும், அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களாகவும், உப்பு தன்மையான உப்பள பகுதிகளாகவும் உள்ளன. எனவே இந்த இடங்களில் வீடுகள் கட்ட கூடாது. மாற்று இடத்தில் வீடுகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தி அகஸ்தியன்பள்ளியில் மரப்பாலம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் அன்பரசு தலைமை தாங்கினார். இதில் வக்கீல் வெங்கடேஸ்வரன், கிளை செயலாளர் நாகராஜன், ஆரோக்கியநாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.
    வேளாங்கண்ணியில் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்பேத்கர் சிலம் பேசன்டவுன் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). கூலி தொழிலாளி. இவா் தனது மனைவி சரிதா, மகன் பரத் (17). உறவினர் மகன் தீபக் (17) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 12 பேருடன் கடந்த 10-ந்தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தீபக் மற்றும் பரத் ஆகிய இருவரும் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர்.. அப்போது ராட்சத அலையில் சிக்கிய 2 பேரும் கடலில் மூழ்கினர். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடலில் தேடினர். இதில் பரத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து தீபக்கை தேடும் பணியில் போலீசார் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் தீபக் பிணமாக கரை ஒதுங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வேளாங்கண்ணி மற்றும் கீழையூர் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் செம்பியமனக்கொடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (வயது29).இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயப்பிரியா சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயப்பிரியா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் அரசு பஸ் மீது மொபட் மோதிய விபத்தில் வியாபாரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் செட்டித் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் (வயது 50). இவர் நாகை மாவட்டம் பரவை சந்தை சாலையோரத்தில் வளையல் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று ஹாஜா அலாவுதீன் தனது மொபட்டில் நாகைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே திருவாரூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய ஹாஜா அலாவுதீன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹாஜா அலாவுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே பதுக்கி வைத்திருந்த 220 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது பிரதாபராமபுரம் கோவில் தெருவில் ஒரு பகுதியில் உள்ள புதரில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடந்து அங்கிருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சாராயத்தை பதுக்கி வைத்தது மேலஈசனூர் பகுதியை சேர்ந்த அம்பேத்கார் (வயது 40) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். அதேபோல் கீழையூர் அருகே மணக்குடி செல்லும் சாலையோரத்தில் மறைத்து வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து புலிவலம் திருவாசல் பகுதியைச் சேர்ந்த பாலு மகன் சின்னான் (21) என்பவரை கைது செய்தனர்.
    ×