search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழஒக்கூர் கிராமத்தில் ஒரு வீட்டில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்த காட்சி
    X
    வாழஒக்கூர் கிராமத்தில் ஒரு வீட்டில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்த காட்சி

    சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு - வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்

    கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாத நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்தும் வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதையொட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கடந்த 2008-ம் ஆண்டு தனியார் மின் ஆலை அமைப்பதற்காக வாழஒக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது வாழஒக்கூர் கிராமத்தை தத்தெடுத்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டது.

    ஆனால் பல ஆண்டுகளாகியும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பது போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாத நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்தும் வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக நேற்று அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதையொட்டி வாழ ஒக்கூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். நிலக்கரி துகள்கள் காற்றில் பரவி சுவாச பிரச்சினை ஏற்படுவதை தடுக்க வேண்டும். நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன் நாயருக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயராஜ் மற்றும் பனங்குடி, பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், கோபுராஜபுரம், முட்டம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ெபாதுமக்கள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த அடிப்படையில் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அளித்த உத்தரவின்படி நிரந்தர பணி வழங்கவில்லை. ஓராண்டு காலமாக ஊதியமும் வழங்கவில்லை. ஊதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கவில்லை. இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், பெட்ேராலிய நிறுவன விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போக்கை கண்டித்தும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலை பனங்குடி, பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், கோபுராஜபுரம், முட்டம் ஆகிய 6 கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×