search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    கோடியக்காட்டில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

    வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு பகுதிக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 10 நாட்களாக இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வரவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக வேதாரண்யம்- கோடியக்கரை சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×