என் மலர்
நாகப்பட்டினம்
- விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது.
- பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் பூவைத்தேடி காமேஸ்வரம் வேட்டைக்காரன்இருப்பு, புதுப் பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது
இந்த ஏ.டி.எம் சுமார் 3 மாத காலமாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் பணம் போடவும், எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் பணம் போடு வதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வங்கி நிர்வாகம் உடனடியாக ஏ.டி.எம்-யை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
- இறந்தவர்கள் உடலை தூக்கிக் கொண்டு இச்சாலையில் செல்ல முடியாமல், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்–கரையிருப்பு-புறாக்கிராமம் இடையே மண் சாலை அமைந்துள்ளது. கீழக்–கரையிருப்பு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அன்றாடம் இச்சாலை வழியேதான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலை முழுவதுமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் இச்சாலை வழியே செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இக்கிரா–மத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய உடலை தூக்கிக் கொண்டு சேறும் சகதியுமான இச்சாலையில் செல்ல முடியாமலும், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமாகி கிடக்கும் இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை சீரமைத்து தரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன் இந்த சாலையை சீரமைத்துத்தர அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
- பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பனங்குடியில் செல்வமகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 28-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து 2-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. 3-ம் தேதி பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக் காப்பு, உதிர்வாய் துடைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
- அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.
- முதலிடம் பிடித்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கௌசிகா, இராண்டாமிடம் பிடித்த ஹரிணி ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
வேதாரண்யம் :
வேதாரண்யம்அடுத்த ஆயக்காரன்புலம் பெ ண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்சென்னை மாமல்லபுரத்தில் நடை பெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைபள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் கெளசிகா, ஹரிணி சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவி கெளசிகாவை தமிழக அரசு சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் இலவசமாக அழைத்து சென்று மீண்டும் சென்னை போட்டியில் பங்குபெறச் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததனர்.
இதில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் 19 வயதுக்கு ட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள்மேல்நி லைப்பள்ளி மாணவி கௌசிகா இராண்டாம் இடம்பெற்ற ஹரிணி ஆகியோ ருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது .பள்ளி தலைமை ஆசிய ர்ஸ்டெல்லாஜேனட் தலை மையில் நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு சால்வை, திருக்குறள் நூல்பரிசளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை யாசிரியர் பரஞ்ஜோதி, ஆசிரியர் சிலம்புசெல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் பொற்றோர்கள் கலந்துகொண்டனர்.
- செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது.
- உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வர்த்தக சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேதாரண்யம் வர்த்தக சங்கம் இணைந்து செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கக் கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் சுபஹானி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் வேதநாயகம் வாழ்த்துரை வழங்கினார். நாகை மாவட்ட நியமன அலுவலா் டாக்டர் புஷ்பராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் எப்.எஸ்.எஸ்.ஐ டெக்னிக்கல் ஆலோசகர் செய்யது அகமது, உணவுபாதுகா ப்பு ஆலோசகர் ஜெகதீ ஸ்வரி ஆகியோர் விளக்க வுரையாற்றினர். ஜி.டி.பி அலுவலா் சித்ரா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.
மேலும் கூட்டத்தில் வர்த்தக சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் தங்கதுரை, தமிழழகன் உட்பட செயற்குழுஉறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளா் சீனி வாசன் நன்றி கூறினார்.
- ஆடி மாதம் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், சந்தனம், திருநீறு உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவாடி பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர்.
- கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட அறிவியல் ஆசிரிய ர்களுக்கான முதற்கட்ட இரண்டு நாள் பணியிடைப் பயிற்சியானது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதி உதவியுடன் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ஜோதிமணியம்மாள் தலைமையேற்று சிறப்பித்தார். செயலர் எஸ்.செந்தில்குமார், இணை செயலர் எஸ். சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை தலைவர் மற்றும் பணியிடை பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பயிற்சியை தொடக்கி வைத்து கலந்து கொண்ட ஆசிரியர்களை ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார்.
இதில் நாகை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர். இதனை கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்தனர். இறுதியாக இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் காதர்நிவாஸ் நன்றியுரை வழங்கினார்.
- காவல்துறை, போக்கு–வரத்துத்துறை, சுகாதா–ரத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விவாதித்தனர்.
- வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
நாகப்பட்டினம்:
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இம்மாதம் 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதி குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல்துறை, போக்கு–வரத்துத்துறை, சுகாதா–ரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விவாதித்தனர். மேலும் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்துதுறை அதிகாரிகளுக்கும், கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் அளித்த பேட்டியில், வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருவிழா நாட்களில் வேளாங்க–ண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
- முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும்.
- ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும் தொடர்ந்து மஞ்சள், சிகப்பு என பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காட்டில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது.இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான் ,கலிமா, குதிரை, நரி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
ராமர் பாதம் அருகே 150 -க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் அடங்கிய மூலிகை வனமும் உள்ளது. மேலும் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்னாசி முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் காணப்படும் தில்லை மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும். இந்த மரத்தின் இலைகள் பல கலரில் மாறுவது குறிப்பிட்ட சில பருவத்திலும், சில நாட்களில் மட்டுமே பின்னர் மீண்டும் பசுமைக்கு மாறி விடுகிறது.
சுற்றுலா பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும்இ ந்த இயற்கை அழகினை சாலை வழியே செல்லும்போது நின்று, பார்த்து ரசித்துச் செல்கின்றனர். இது குறித்து கோடி யக்கரை வனசரகர் அயூப்கான் கூறும்போது: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் முனிய ப்பன் ஏரி, பழைய லைட் ஹவுஸ் பகுதியில் காணப்படுகிறது.
இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும் தொடர்ந்து மஞ்சள், சிகப்பு என பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் நடந்து முடிந்துவிடும். இந்த மாதம் முழுவதும் மட்டுமே இந்த நிறம் மாறும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இந்த மரத்திலிருந்து வெளிப்படும் பால் விஷத்தன்மை உடையது. இந்த பாலானது உடலில் பட்டால் அரிப்புகள் ஏற்பட்டு புண்கள் ஏற்படும். எனவே சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகை பார்த்து ரசித்தால் மட்டும் போதும். இலைகளை பறித்தோ அதிலுள்ள காய்களை பறித்தோ ஆபத்தை தேடிக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த தில்லை மரம் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க உதவும் மூலப் பொருளாகவும் உள்ளது என்றார்.
- முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.
- பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தின் வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த நிதி நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் சார்பாக தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் வங்கியில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பணத்தை விரைந்து கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்தி பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேற வளையல்களை கோவில் காணிக்கையாக வழங்கினர்.
அதில் 10ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக பால், பன்னீர் ,சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது .
அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீவிஜேந்திரசுவாமிகள் செய்திருந்தார்.
- இது குறித்து மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- இதையடுத்து சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்சில் பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் பழைய இருசக்கர வாக னங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் 68 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மோட்டார்சைக்கிளை எடுத்து ஓட்டிச் சென்று பார்ப்பதாக கூறி மாய மானார்.
இது குறித்து மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் டவர் கொண்டு இருப்பிடத்தை அறிந்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 68 வயதான குமார் என்பதும், காரைக்காலில் வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து காரைக்காலுக்கு சென்ற போலீசார் குமாரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.






