என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • செந்தில் அவரை கொலை செய்து வீட்டில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்தார்.
    • கழிவறைக்கு சென்ற சககைதிகள் இதனை பார்த்து சிறை காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த உமையாள் பதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்ற 40 வயது பெண்மணி தனது கணவர் மற்றும் குடும்பத்தினரை புரிந்து கீழவாடியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

    அப்போது கொள்ளிடம் அடுத்த பாலூரன் படுகை கிராமத்தைச் சார்ந்த செந்தில் என்ற இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ்மணி மீது சந்தேகப்பட்ட செந்தில் அவரை கொலை செய்து வீட்டில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்தார்.

    இது தொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல் துறையில் புகார் அளித்ததும் தப்பி ஓடி மூங்கில் தோப்பு ஒன்றில் மறைந்திருந்த செந்திலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் கழிவறை சென்று வருவதாக கூறிச் சென்ற செந்தில் கைலியால் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கழிவறைக்குச் சென்ற சக கைதிகள் இதனை பார்த்து சிறை காவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து செந்தில் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் உள்ளன.
    • 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள் ஆகியவைகளும் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியில் தலைவர்களின் மணல் சிற்பம், கலைஞர் கருணாநிதியின் சிறு வயது முதல் தற்போது வரை உள்ள புகைப்பட கண்காட்சி, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் 150 ஆண்டுகள் பழமையான சூடு மண் பானைகள், 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள்,

    பல்வேறு நாடுகளின் கரன்சிகள், கடல் வாழ் உயிரினங்களின் கல் படிமங்கள், சுண்ணாம்புக் குடுவைகள் ஆகிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.மேலும் வரைபட கண்காட்சி, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறுவர் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் அதன் நிர்வாகி ஜெய் கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் சகுந்தலாதேவி, பழனிவேல் சரத்குமார், செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.கண்காட்சிக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

    • பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
    • ஐந்து வகை உணவுகள் வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.

    இதில் வேளாங்கண்ணி, திருப்பூண்டி பூவை தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.

    தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.

    மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

    மேலும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.

    உறவுகளால் வீட்டில் வளைகாப்பு செய்திருந்தாலும் ஒரே இடத்தில் இப்படி எல்லோருக்கும் வளைகாப்பு செய்து, சீர்வரிசை வழங்கி, விழா எடுப்பது மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் பெத்த மகளை போல பாவித்து வளைகாப்பு செய்ததை எங்களால் மறக்க முடியாது என்றும் கர்ப்பிணி பெண்கள் உற்சாகம் பொங்க தெரிவித்தனர்.

    • மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.
    • கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 23).

    இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24).

    இவர்கள் இருவரும் கடந்த 30-ம்தேதி புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது, பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.

    பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் கீழ்வேளூர் அருகே உள்ள கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜித் (23), அகரகடம்பனூர் ஊராட்சி கோவில்கடம்பனூரை சேர்ந்த வினோத் (24), கோவில்கடம்பனூர் ஸ்ரீகண்டி நத்தத்தை சேர்ந்த சுதீஷ் (19) என்பதும் இவர்கள் மூவரும் மேற்படி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அண்மை காலங்களாக ஆடு, மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
    • விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து விழிதியூரில் கொண்டு போய் விடுகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வருவாய் கிராமங்களுக்கு உட்பட்டு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இந்த விளைநிலங்களில் சம்பா, தாளடி என இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விளைநிலங்களை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க 10 ஆண்டுகளுக்கு முன்னர் தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டு பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அடைக்க பெருமாள் மேல வீதியில் வாடி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வாடிகள் இயக்கப்படாமல் உள்ளது.

    இதனால் அண்மை காலங்களாக ஆடு, மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    அவ்வாறு சேதப்படுத்தும் கால்நடைகளை அடைக்க வாடிகள் திட்டச்சேரி பகுதியில் இல்லாமல் உள்ளது.

    இதனால் விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அண்டை மாநிலமான காரைக்கால் மாவட்டம் விழிதியூரில் கொண்டு போய் விடுகின்றனர்.

    எனவே கால்நடைகளை கட்டுப்படுத்த திட்டச்சேரி பெருமாள் மேலவீதியில் உள்ள இடத்தில் மீண்டும் புதிய வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்தன் என்பவர் இறால் வளர்ப்பில் முறையான மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.
    • தொழில் முனைவோர், இறால் வளர்ப்போர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு மீன்வள பல்கலைக்கழகத்தில் இறால் வளர்ப்பு சிறந்த எதிர்காலத்திற்கான வழிமுறை கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு கல்லூரி முதல்வர் பாலசுந்தரி தலைமை வகித்தார்.

    இதில் சீர்காழி ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மைய இயக்குனர் கந்தன் இறால் வளர்ப்பில் முறையான மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.

    கருத்தரங்கில் கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப இயக்குனர் அந்தோணி சேவியர் சுரேஷ், தொழில்நுட்ப உதவி மேலாளர் குமரவேல், பண்ணை பொது மேலாளர் கோவிந்தராஜ், விஞ்ஞானிகள் குமரன், ரவிசங்கர், சலீம், கல்லூரி பேராசிரியர்கள் ஜாக்குலின் பெரேரா, சந்தோஷ்குமார், இறால் பண்ணை வளர்ப்போர் சங்கத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள், மேலாண்மை அறிவியல் மையத்தினர், தொழில் முனைவோர் மற்றும் இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டேனியல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பன்னீர்செல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.

    மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலரை தரிசிக்க வந்தார்.

    சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகை ஆயுதப்படை மைதானம் வந்து இறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனத்தை முடித்து விட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு செல்கிறார்.

    அதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    • யானை கட்டி முடுக்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் மைய கட்டிடம் சிதிலமடைந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். நாகூர் தர்கா எதிரிலுள்ள யானை கட்டி முடுக்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அங்கு இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான இடத்தை யும் பார்வையிட்டார்.

    அதைத் தொடர்ந்து, நாகூர் அமிர்தாநகரில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நாகூர் தர்கா பவர் ஹவுஸ் குழந்தைகள் மையம் கட்டடம் சிதிலமடைந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து அங்கும் நேரில் ஆய்வு செய்தார்.

    விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த ஆய்வின் போது, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் மற்றும் வி.சி.க மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் இரண்டு கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.

    அதனை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.

    இது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்தார்.

    • நெற்கதிர்களை அறுத்து காய வைக்க எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் உலர்த்தும் தளம் இல்லை.
    • பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளிலும் நெற்களை காயவைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    வேதாரண்யம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி ஒரளவு மகசூல் கிடைத்துள்ளது.

    இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை அறுத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதிக ஈரபதத்துடன் நெல் உள்ளது என்று திருப்பி அனுப்ப படுகின்றனர்.

    வேதாரண்யம் பகுதி விவசாயிகள் தங்களது நெற்கதிர்களை அறுத்து காய வைக்க எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் உலர்த்தும் தளம் இல்லை.

    எனவே விவசாயிகள் நெல்மணிகளை கிராமபுறம் உட்பட பல்வேறு இடங்களில் பிரதான போக்கு வரத்து சாலைகளில் கொட்டி காய வைக்கின்றனர்.

    தற்போது பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளிலும் நெற்களை காயவைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    சில நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் விவசாயிகளுக்கு சிறு பிரச்சனைகள் நடக்கிறது.

    எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் தூற்றும் மிஷின் இருப்பது போல நெல் காயவைக்கும் மிஷின்களை (டிரையர்) அரசே ஏற்று அமைத்து ெகாடுக்க வேண்டும்.

    விவசாயிகள் கொண்டுவரும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த நெல்லை கொள்முதல் செய்துவிவசாயிகள் நலன்காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியம், காடந்தேத்தி ஊராட்சியில் 190 மீள்குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் காடந்தேத்தி பஸ் நிலையத்தில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×