என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
    • மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித்து சென்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று கோடியக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் உள்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. பலத்த காற்று குறைந்த உடன் மீண்டும் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததாலும் ஆகாய தாமரைகள் அகற்றப்படாததாலும் பயிர்களை சூழ்ந்த தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் உள்ளது. இருந்தாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்தது.

    இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகை, திருவாரூர் உள்ளிடட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்த சூழ்நிலையில் நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் திருப்பூண்டி, கீழப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு நடவு செய்து ஒரு வாரமே ஆன 2000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்களை மழைநீர் மூழ்கடித்தது. மேலும் வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததாலும் ஆகாய தாமரைகள் அகற்றப்படாததாலும் பயிர்களை சூழ்ந்த தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தொடர்ந்து சில நாட்களாக பயிர்கள் மூழ்கிய நிலையில் உள்ளதால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக வடிகால் வாய்க்காலை தூர்வாரி தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர்.
    • கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக வேளாங்கண்ணி அமைந்துள்ளது. இங்கு கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்ககூடிய புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கடற்கரை நகரமாக விளங்ககூடிய வேளாங்கண்ணி ஆன்மீகம் நகரம் மட்டும் இல்லாமல் பொழுது போக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

    எப்போதுதே வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந்தேதியில் இருந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டுகடங்காத அளவில் உள்ளனர்.

    இன்று காணும் பொங்கலை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு அதிகாலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள், மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காக கூட்டம் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காணும் பொங்கலை முன்னிட்டு பலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து கடற்கரையை சுற்றி பார்த்து குளித்து மகிழ்ந்தனர்.

    வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை சாலை, நடுத்திட்டு, தியான கூட்டம், முடி காணிக்கை செலுத்தும் இடம், பழைய மாதா கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளதால் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஏராளமான கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இது தவிர கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நீண்ட நெடிய கடற்கரை, தமிழகத்தின் உயரமான நாகை கலங்கரை விளக்கம் ஆகியவையும் நாகையில் உள்ளன.

    இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாகை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் சுற்றுலா தலங்களை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது. அதற்காகவே, அந்த மாநிலங்களுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.

    இதைப்போல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதற்காக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வேளாங்கண்ணியை சுற்றி சுமார் 25 கிலோமீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டர் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பயணிகள் பயணிக்கலாம்.

    ஒரு பயணிக்கு ரூ.6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

    வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், ராணுவத்தினர் பயன்படுத்தும் விதமாக இந்த ஹெலிபேடு அமைக்கப்படுகிறது.

    இந்த ஹெலிகாப்டர் சேவை குறித்து ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது நாகை மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இந்த ஹெலிகாப்டர் சேவை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அந்தவகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் நள்ளிரவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விண்மீன் ஆலய வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், பேராலயத்தின் முன்பு 43 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. இதில் பேராலய அதிபர் இருதய ராஜ் மற்றும் பங்கு தந்தை அற்புதராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வானதேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்ட்டது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்கு தந்தை அற்புதராஜ் அருகில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறப்பு செய்தியை அறிவித்தார்.

    அப்போது குடிலில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு, பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்து மகிழ்ந்தனர்.

    • வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.
    • கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார்.

    அங்கு மாலை 6 மணிக்கு காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் படத்திறப்பு நிகழ்ச்சி கலைஞர் கோட்டம், அஞ்சுகம் அம்மையார் திருமண அரங்கில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை (சனிக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் நடைபயிற்சி சென்றார். பின்னர் நாகை துறைமுகத்துக்கு சென்று அங்கு பாய்மர கப்பல் விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து அவர் நாகூர் சில்லடி கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை கவுரவித்தார்.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்றாலும் நாகை இங்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருவது போன்று நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் என மும்மத வழிபாட்டு தலங்களும் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

    நாகூர் ஹனீபா, அண்ணா, கருணாநிதி ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்றவர். கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது. ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே இறைவன் என வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. வைக்கம் நூற்றாண்டு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா என பல்வேறு நூற்றாண்டு விழாக்களை தி.மு.க. அரசு கொண்டாடி உள்ளது.

    இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் அறிவித்த பேராட்டம் தான் கருணாநிதியையும், நாகூர் ஹனீபாவையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்தது. இந்தி திணிப்பை எதிர்த்து அன்று போராடினோம். அதேபோல் தற்போது வேறு வழியில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதனை தமிழக முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் என உறுதியாக கூறுகிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விநிதி என்கிறது மத்திய அரசு. இப்படி பல்வேறு வழிகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.

    தனது குரல் வளத்தால் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர் நாகூர் ஹனீபா. நாகூர் தைக்கால் தெருவிற்கு முதலமைச்சர் நாகூர் ஹனீபா தெரு என பெயரிட்டார். நாகூர் ஹனீபா மறைந்தபோது கலைஞர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் நாட்டை மதநல்லிணக்கம் மிகுந்த மாநிலமாக வைத்திருக்க வேண்டும். தி.மு.க. அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. நாகூர் ஹனீபாவின் பாடல்களை மதுரை ஆதீனம் சிறப்பாக பாடி காட்டுவார். தமிழகம் என்றென்றும் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
    • கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    "டிட்வா" புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் 60 வகையான பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தரைக்காற்று வீசியது. அதைத்தொடர்ந்து வேதாரண்யம், தலைஞாயிறு, செம்போடை, ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

    மேலும் இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் உடனடியாக அவர்களை அழைத்து வந்து நிவாரண முகங்களில் தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. இப்பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் 6-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த 24 மணிநேரத்தில் நாகை மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு(சென்டிமீட்டரில்):-

    நாகப்பட்டினம்-6.12, திருப்பூண்டி-9.24 , வேளாங்கண்ணி-9.54 , திருக்குவளை-4.61, தலைஞாயிறு-8.76, வேதாரண்யம்-14.56, கோடியக்கரை-20.36.

     

    வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்து வைத்துள்ள காட்சி.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பல்லவராயன் கட்டளை, புழுதிக்குடி, விக்கிரபாண்டியம், கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 1,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு ரூ.8,000 வரை செலவு செய்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் வடியாமல் உள்ளது. எனவே கிளை வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கடுமையான கடல் சீற்றம் உள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குருங்குளம், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டின், மதுக்கூர், பேராவூரணி என மாவட்டத்தின அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்சம்பா,தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அதிராம்பட்டினம் கடற்கரையில் புயலால் பலத்த காற்று வீசியப்படி கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழைக்கு 1 வீடு இடிந்துள்ளது. 3 கால்நடைகள் இறந்துள்ளன.

    • மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது.

    அதன்படி இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு ஆகிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 6 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் "சாகர் கவாச்" என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    நாகை:

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார். 

    • மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
    • கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    சீர்காழி:

    தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.

    கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அன்று இரவில் ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்த மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

    இதில், ராஜாராமன் செல்லூரில் போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.

    கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்.

    ×