என் மலர்
வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்
- கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
- கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் நள்ளிரவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விண்மீன் ஆலய வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், பேராலயத்தின் முன்பு 43 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. இதில் பேராலய அதிபர் இருதய ராஜ் மற்றும் பங்கு தந்தை அற்புதராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதில் கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வானதேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்ட்டது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்கு தந்தை அற்புதராஜ் அருகில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறப்பு செய்தியை அறிவித்தார்.
அப்போது குடிலில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு, பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்து மகிழ்ந்தனர்.






