என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • அவ்வழியே வேகமாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
    • 200 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் வெளி மாநில சாராயம், மதுபான பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை தாண்டவன் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.

    சோதனையில் காரினுள் 25 பெட்டிகளில் 1200 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களும், 200 லிட்டர் புதுச்சேரி சாராயமும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து போலீசார் மது பாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து துரை (வயது 56) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 17 பேர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்.

    இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளை காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு நித்தியாவை வாழ்த்தினர்.

    பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்ப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கும், 17 பேர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் வைத்தீஸ்வரன்கோவில் ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுகுறித்து சீர்காழி, மயிலாடுதுறை, மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகம் முழுவதும் விவசாயிகளின் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • இதில் மயிலாடுதுறை மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த அதிரடியாக உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் விவசாயிகளின் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளின் பள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வேளாண் அடுக்கம் என்று சொல்லக்கூடிய என்ற செயலி மூலம் விவசாயிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு விபரம், நில உடமை விபரம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்வதால் ஒன்றிய அரசு, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் தொடர்பான குறிப்பாக, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை வணிகவரித்துறை, விதை சான்றளிப்புத்துறை, போன்ற 13 த்துறைகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்துத் திட்டப்பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 68382 விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்வதில் மாநிலத்தில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    • பரிமளரெங்கநாதர் கோயில், பெருந்திருவிழா 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருளினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும்.

    இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.

    9-ஆம் திருநாளின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

    பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோயில் செயல் அலுவலர் ரம்யா, காவல் ஆய்வாளர் செல்வம், நகராட்சி தலைவர் குண்டாமணி, வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, பரிமள ரெங்கா என்ற பக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் மேற்கொண்டனர்.

    தேர் நான்கு வீதிகளைச் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் மோகனசுந்தரம், அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் சிவகுமார், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி லயன்ஸ் சங்கம், கொள்ளிடம் லயன்ஸ்சங்கம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வ ரன்கோயில், திருவெண்காடு லயன்ஸ் சங்கங்கள், வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி சண்முகவேல் தலைமை வகித்தார்.

    சீர்காழி சங்கத்தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சக்திவீரன் நன்றிக்கூறினார்.

    • இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
    • குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டுவரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது. இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது.

    இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர். இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர். இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் லாரி ஓட்டுநர்கள் சென்று விடும் நிலையில் அப்பகுதி மக்களே மண்ணை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.

    இதனால் நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண் சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் சிதறிய மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சீர்காழி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.
    • வடரெங்கம் வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வடரெங்கத்திற்கு 2 நகர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.இதனிடையே பள்ளி நேரங்களில் பேருந்துகளில் அதிகளவு பயணிகள், மாணவர்கள் பயணம் செய்யும் நிலையால் மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சீர்காழி கிளை மேலாளர் வடிவேல் உத்தரவின்படி வடரெங்கம் கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுபேருந்து இயக்கப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் செல்லும் மாற்று பேருந்துகளை வடரெங்கம் வழிதடத்தில் இயக்கி மாணவ -மாணவிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதுள்ளது.

    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெருமாள்- தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும்.

    இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் திருநாளின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான பரிமளரெங்கநாதர் பெருமாள், சுகந்தவனநாயகி தாயார் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

    பெருமாள் தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல், சிறப்பும் பூரணாகுதி திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பெருமாள் தாயார் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக செயலர் ரம்யா, அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் குமார், மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

    • கோவிலிருந்து மார்க்கசகாயசாமி சவுந்தரநாயகி அம்பாளுடன் தேரில் புறப்பட்டது.
    • பக்தர்கள் வழிநெடுகிலும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    9-ம் திருநாளின் முக்கிய விழா வான தேரோட்டம் நேற்று கோயில் நிர்வாக செயல் அலுவலர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    கோவிலிருந்து மார்க்கசகாய சுவாமி சௌந்தரநாயகி அம்பாளுடன் தேரில் புறப்பட்டது.

    பின்னர் நான்கு வீதிகளில் வீதி உலா வந்தது.

    இந்த தேர் திருவிழாவில் தக்கார் சதிஷ், உபயதாரர்கள், கிராமவாசிகள், அனைத்து வழிப்பாட்டு மன்றத்தினர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.
    • மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

    மகா பூர்ணாகுதியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில், மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிவ பாடகசாலை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் ஆன்மீக பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
    • தள்ளுபடி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பரதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.

    அப்போது எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும், தள்ளுபடி தொகையினை வட்டியுடன் வழங்கிட வேண்டும், நகை கடன் ஏலத்தில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களை பழி வாங்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கோபிநாதன், இணை செயலாளர்கள் அரபுபுனிசாபேகம், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.

    • தற்போது 2.57 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • விரைவில் ரூ. 23.60 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா தளம் ரூபாய் 2.57 கோடி செலவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணி களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் உலக சுற்றுலா தளத்திற்கு இணையாக பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஆணையிட்டு உள்ளார்கள். அதன்படி பூம்புகார் சுற்றுலா தளம் தற்போது 2.57 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதன் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.

    சிலப்பதிகார கலைக்கூடம், தகவல் விளக்க கூடம், உணவகம், கடைகள், இலஞ்சி மன்றம் மேம்பாடு, குடிநீர் தொட்டி, போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் மிக விரைவில் ரூபாய். 23 . 60 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    டெண்டர் விடப்பட்டுள்ளது முதற்கட்ட பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும்.

    உலகிலேயே முன்னோடி சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் மீனவர் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

    ×