என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீர்காழியில், 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
- அவ்வழியே வேகமாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
- 200 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் வெளி மாநில சாராயம், மதுபான பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை தாண்டவன் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் காரினுள் 25 பெட்டிகளில் 1200 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களும், 200 லிட்டர் புதுச்சேரி சாராயமும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் மது பாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து துரை (வயது 56) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






