என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர்,பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது,
    • பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.

    சீர்காழி:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டின் முதல்நாள் தொடக்கவிழா விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷகிலாரெத்தி னகுமாரி தலைமை வகித்தார்.

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய், கல்வியாளரும், பெற்றோர் ஆசிரியசங்கத்தலைவர் பாபுநேசன்,துணை தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்துக்கொண்டு அரசின் பாடநூல்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சிறப்புறையாற்றினார்.

    தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய் தனது சொந்த செலவில் 170 மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர், பென்சில், நோட் ஆகிய கல்விஎழுதுப்பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    முன்னதாக பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவ, மாணவிகளை கார்டூன் வேடமணிந்து சாக்லெட் கொடுத்து உற்சாக ப்படுத்தி வரவேற்றனர்.

    நிகழ்வில்முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    • விவசாயிகள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும்.
    • பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவ லர்களுடன் ஒத்துழைத்து பயன்பெற வேண்டும். நிலை மைக்கேற்ப பாசனத்திற்கு முறைவைத்து தண்ணீர் விடப்படும்.

    மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடுதல் தொடர்பாக அவ்வப்போது விளம்பரம் செய்யப்படும். காவேரி வடிநில பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடும் போது நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ அல்லது இதரபொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம். மேலும், குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்கிவிடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    தண்ணீர் திறந்துவிடும் போது விலங்குகள், நீர்நிலைகளில் கடந்து செல்லும்போது பாதுகாப்பாக விவசாயிகள் கடந்து செல்ல வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.
    • பயனாளிகள் 500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழல் குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய ஆணையர் இளங்கோவன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிக்குமார், புஷ்பவள்ளி ராஜா, நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான நிவேதா.

    முருகன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கமலஜோதி தேவேந்திரன் பயனாளிகள் 500 பேருக்கு சேலைகளை வழங்கினார்.

    இதேபோல் மேலையூர் பகுதியில் புதிதாக ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடையையும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் ரவி, தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மது குடித்ததால் தான் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
    • மதுபான கடை மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பூராசாமி (வயது 65), பழனிகுருநாதன் (55).

    இருவரும் நேற்று முன்தினம் இரவு கழனிவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து மதுவாங்கிக்கொண்டு பழனிகுருநாதனுக்கு சொந்தமான இரும்பு பட்டறையில் வைத்து குடித்தனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

    இவர்கள் இருவரும் மது குடித்ததால் தான் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதனால் அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கிடந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல் மருத்துவ நிபுணர் குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும், கழனிவாசல் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து இறந்தவர்கள் குடித்த மதுவகையை சேர்ந்த 400 மது பாட்டில்களை பெரம்பூர் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதில் 13 மதுபாட்டில்களை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், மதுபான கடை மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகள் பூட்டப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேரின் உடல்களும் அவர்களுடைய வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டன.

    இறந்தவர்கள் இருவரும் டாஸ்மாக் மது குடித்து இறந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பூராசாமி, பழனிகுருநாதன் ஆகியோர் இறந்தது தொடர்பாக பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், திருச்சி மண்டல தடயவியல் துறை துணை இயக்குநரின் முதற்கட்ட பரிசோதனை அறிக்கையில் இறந்த இருவரின் ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகளில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பழனிகுருநாதனின் சகோதரர்களான மனோகரன் மற்றும் பாஸ்கரன் (இருவரும் பழனி குருநாதன் தந்தையின் முதல் தாரத்தின் மகன்கள்) சொத்து காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொலை செய்ய முயற்சித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து, மனோகரன், பாஸ்கரன் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டறையில் இருந்து டாஸ்மாக் மதுபானம் தஞ்சாவூரில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • ஒரு மதுபாட்டில் பெவிக்குவிக் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன் (வயது55). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லுப்பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இருவரும் பட்டறையில் மாலை 5 மணிவரை வேலை செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

    அவர்களுக்கு அருகில் 2 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்தது. அதில் ஒன்றில் பாதி மதுபானமும், மற்றொன்று பிரிக்காமலும் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் தான் 2 பேரும் இறந்தனர் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    தொடர்ந்து பழனிகுருநாதன், பூராசாமி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மது குடித்ததில் தான் 2 பேரும் இறந்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.

    மேலும், பட்டறையில் இருந்து டாஸ்மாக் மதுபானம் தஞ்சாவூரில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை அருகே நேற்று திடீரென 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மது குடித்ததால் தான் உயிரிழந்தனர் என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அந்த மதுபாட்டில்கள் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட தடயவியல் அறிக்கைபடி அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதியானது.

    அதில், ஒரு மதுபாட்டில் பெவிக்குவிக் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு ஆய்விக்கு பிறகு உண்மை நிலவரம் தெரியவரும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே மாவட்ட ஆட்சியர் பொய் சொல்வதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
    • 2025-க்குள் மயிலாடுதுறையை குழந்தை தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலககூட்ட ரங்கில் குழந்தை தொழி லாளர் முறையினை அகற்று வதற்காக உறுதிமொழி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழும் நிலையில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-ம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் , மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    வளிமண்டலத்தில் நிலவும் வறண்ட நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தாமரைக்குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது.
    • ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் நகரில் மிகப்பெரிய குளமான தாமரைக் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த தாமரைக் குளம் பொய்கை தீர்த்தம் என முன்பு அழைக்கப்பட்டு வந்தது.

    சீர்காழி நகர் பகுதியில் பெரும் நீர் ஆதாரமாகவும் இந்த தாமரைக் குளம் இருந்தது இந்நிலையில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த தாமரைக் குளம் தற்போது சீர்காழி நகர்பதி போகுது மக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கியது.

    குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகள் அகற்றாமல் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தாமரைக் குளம் தூர்வாரும் பணியை திடீர் ஆய்வு செய்தார் .அப்போது தாமரைக் குளத்தில் நடைபெற்று வரும் சிமெண்ட் கட்டைகள் கட்டும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி பணிகள் தரமாக செய்திட அறிவுறுத்தினார்.

    குளத்தின் படித்துறையை மீட்டு பார்க்கிறது முழுமையாக அகற்றி தூர்வாரிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இந்த ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, நித்யா தேவி பாலமுருகன்,மற்றும் ஒப்பந்ததாரர் வெற்றி உடனிருந்தனர்.

    • 9 ஏக்கரில் முந்திரி விவசாயம் செய்து வந்தார்.
    • பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமானது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் மற்றும் பழையாறு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் உள்பட 9 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி விவசாயம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது முந்திரி தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த பூம்புகார் மற்றும் சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன் பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் தனி விமானத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினர்.

    ஆனால், 1947-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்றும் பல்வேறு தரப்பினர் சர்ச்சைகள் எழுப்பினர்.

    இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையிலும் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளிச்சுவற்றில் கல்வெட்டாக பொறித்து அதனை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தனது ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதியான நேற்று அந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 5 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு நாட்டிய திருவிழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் பலர் கலந்து கொன்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாள் 11-ம்நாள் திருவிழாவாக ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டின பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பக்தர்கள் மற்றும் மடத்து சிப்பந்திகள் சிவிகை பல்லக்கில் நான்கு வீதிகளில் சுமந்து வந்தனர். இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு நடைபெற்றது.

    பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிராயன் சுவாமிகள் பாவனை அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பித்தார். இறுதியாக விழாவில் பங்கேற்ற சூரியனார்கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்டவர்களுக்கு தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விடியவிடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர். இதில் கடந்த மாதம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 5000 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பங்கேற்று நடைபெற்ற நாட்டிய திருவிழாவை உலக சாதனை நிகழ்ச்சியாக டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு பதிவு செய்தது.அதன் தலைவர் கிருத்திகா தேவி உலக சாதனை படைத்த சான்றிதழ்களை தருமபுரம் ஆதீனத்திடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் என திரளாக கலந்து கொன்டனர்.

    • 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    போட்டிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்று பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் , பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை துறையின் நல அலுவலர் நரேந்திரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா ஹனி, கல்லூரி செயலர் ராதாகிருஷ்ணன், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மாணவர்களுக்கு ரூ 20 ஆயிரமும்,2ம் இடம் வெற்றிப்படும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், 3ம் இடம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. ஐந்தாயிரம் வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே, பெரியார் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணாவின் தமிழ் கனவு, கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும் மாநில உரிமைகளும் உள்ளிட்ட 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் உதவி கலெக்டர் அர்ச்சனா, ஒன்றிய குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், காமாட்சி, மகேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ண ன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏவிசி கல்லூரி தமிழ் துறை தலைவர் தமிழ் வேலு நன்றி கூறினார்.

    ×