என் மலர்
மதுரை
- தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியானது.
- வருகிற 26, 27-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியானது. மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிக்காக 12, 13-ந் தேதி ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்திருந்தார்.
அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் நேற்று வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த முகாம் கடைசி நாளான இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடக்கிறது. கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர். வருகிற 26, 27-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- டாக்டர் சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
மதுரை
மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பா.சரவணன்-கனிெமாழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித் குமாருக்கும், தனசேகரன்-விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் சாதுர்யா என்கிற அபூர்வஸ்ரீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அவர்களது திருமணம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்து வக்கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை (14-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.இவர்களது திருமணத்தை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைக்கிறார்.
இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருமண விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படு கிறது. மேலும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
மணமக்கள் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் சாதுர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.
- தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.
- மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தில் மூழ்கினான். இதனைக் கண்ட கிராம மக்கள் அஜய்யை மீட்டனர். அவன் தெப்பக்குளத்தில் மூழ்கியதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.
நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- மதுைர தெற்கு மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அவைத்தலை வர் நாகராஜன், துணை செயலாளர் லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் திருமங்கலம் தனபாண்டி, கள்ளிக்குடி ராமமூர்த்தி, டி.கல்லுப்பட்டி நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், ஒன்றிய அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன், நகர அவைத்தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
- தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
மதுரை
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலை யார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், அதே மில்லில் வேைல பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டி னுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்ைத அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.
அவர் தான் பாண்டி யம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்ற தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தபபட்டது.
பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடுதல் கட்டணம் பெறும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் மூலம் 413 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் மதுரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் திட்டம், கிராம தொழில் முனைவோர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சான்றுகள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தினை தவிர கூடுதல் கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 1800 425 1333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்டுள்ள பயனாளர் நுழைவு வசதியினை தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெறாமல் இ-சேவை பெயரில் தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய பயனாளர் நுழைவினை பயன்படுத்தி வருவாய் துறை சான்றுகள், முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்து சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் கூடுதலாக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது என பல்வேறு தரப்பில் புகார்கள் வருகின்றன.
தனியார் கணினி மையங்கள் பயனாளர் நுழைவினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, இ-சேவை என்ற பெயர் பலகை மற்றும் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ வருவாய் மற்றும் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
- கழிவுநீர் சாலையின் ஒருபுறம் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மறுபுறத்தில் செல்கின்றனர்.
அவனியாபுரம்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
அவனியாபுரம் அயன்பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்கின்றன.
2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் மழை நீரோடு கலந்து செல்கிறது. பாசன கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் இருந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக தண்ணீர் வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இந்த நுரை மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் உள்ள விமான நிலைய சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.
இது தவிர கழிவுநீர் சாலையின் ஒருபுறம் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மறுபுறத்தில் செல்கின்றனர்.
இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
- தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.
மேலூர்
மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களிடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உதவிட வேண்டும்/
தி.மு.க. ஆட்சியின் சாதனையை எடுத்துக் கூறியும் இன்றில் இருந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இதில் மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவமான முகமது யாசின், மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்களான குமரன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், ராஜராஜன், ராஜேந்திர பிரபு, பழனி, கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், துரை புகழேந்தி, பூதமங்கலம் அப்பாஸ், பொருளாளர் ரவி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- பாலமேடு அருகே கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது.
- இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார், திருமங்கலம் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலர் கிரிஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 180-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து மருந்து வழங்கினர்.
சிறப்பாக கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்கள் 3 பேருக்கு சான்றிதழ், பரிசுகள் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெள்ளையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கவுன்சிலர் சரவணன், அணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு, சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.
- கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 386 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 19 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பள்ளி மைதானம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
- விடுதலைக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் விடுதலை.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த கடந்த கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதேபோல் மற்ற 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பட்டதை அடுத்து மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரனும் விடுதலையானார். சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், துயரம் தனக்கானது என்றும், மகிழ்ச்சி, தமிழ் கூறும் நல் உலகம் அனைவருக்குமானது என்றும் கூறினார்.
ஏழு பேர் விடுதலைக்காக உயிர் நீத்த செங்கொடி தியாகத்தை நினைவு கூறுவதாக அவர் தெரிவித்தார். நீண்ட நெடிய வழக்கு முற்றுப் பெற்று ஏழு பேரும் விடுதலையாக காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.
மதுரை:
மதுரை முத்துப்பட்டியில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ரூ.23 லட்சம் மதிப்பிலான கட்டிடப் பணிகளை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் கடந்த ஆட்சியை விட திறம்பட செயல்பட்டு வருகின்றன.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை சார்பிலான பள்ளிகளில் நடைபெறும் கட்டிடப் பணிகளையும், வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.
இன்று மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளை மேம்படுத்த முதலமைச்சர் ரூ.100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் தமிழக முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் 1356 பள்ளிகளிலும், விடுதிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், கள்ளர் சீரமைப்புத்துறை செயலாளர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






