என் மலர்tooltip icon

    மதுரை

    • கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றதாக அமைச்சர் கூறினார்.
    • மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன.

    மதுரை

    மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஒருங்கிணைந்து, "உலக மரபு வார விழாவை" முன்னிட்டு நடத்திய 'தமிழக நடுகல் மரபு' கண்காட்சி நடந்தது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன. அவை சென்னையில் உள்ள இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கல்வெட்டு மைபடிகளை பாதுகாப்பதற்கோ, ஆய்வு கள் மேற்கொள்வதற்கோ, மைபடிகள் குறித்து வடிவ ங்களை உருவாக்குவதற்கோ இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் அளவீட்டுத்துறைக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இது வரலாற்றில் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது.

    1919-ம் ஆண்டு வரைதான் தென் இந்தியாவில் இருந்து மைல்படிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கல்வெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 50 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத கல்வெட்டுக்களும் கிடைத்து விட்டால் அவற்றின் மூலம் நாம் பல்வேறு வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. கீழடியில் 1200-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் என்னென்ன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்? என்றும், காட்சிப்படுத்தும் பொருள் குறித்து குறிப்புகள் இடம் பெற வேண்டும், பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும்? என்று திட்டமிடப்பட்டு 2 மாத காலங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று முதலமைச்சரால் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வில் கலெக்டர்அனீஷ் சேகர் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், யாக்கை மரபு அறக்கட்டளை குமரவேல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    • அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திகா(24). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரனகுமார்(34) பணிபுரிந்தார்.

    ஒரே நிறுவனத்தில் பணி புரிந்த இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரனகுமார் காதலி கார்த்திகாவுடன் சுற்றியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் வீரனகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இது குறித்து தாமதமாக தகவல் அறிந்த கார்த்திகா திருமங்கலம் பன்னிகுண்டு வந்து வீரனகுமாரிடம் கேட்கவே, அவரும் தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அவதூறாக பேசி திட்டியுள்ளனர்.

    விரக்தியடைந்த கார்த்திகா இது குறித்து சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரனகுமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
    • துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது.

    செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் இருந்த அடைப்புகளை அகற்றினார். இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையில் தண்ணீர் வடிந்தது. இதனை கேள்விப்பட்ட மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், ஏட்டு ராமனை நேரில் வரவழைத்து பாராட்டினார். துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
    • இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ஜல்லிகட்டு தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.

    வாடிப்பட்டி

    பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் டெல்லியில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.அதில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறது. தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரனைக்கு வர உள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு சரிவர கையாளவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கப்படலாம். இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ஜல்லிகட்டு தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது கே.ஆர்.முரளி ராமசாமி, மாணிக்கம், நடராஜன், சிவகுருநாதன் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பின் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த தகவல் தொழில் நுட்ப பிரிவு பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்ற தேசிய தலைவர் நட்டா, பேராசியர் ராமசீனிவாசனை திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

    • கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.
    • மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார்.

    இந்த வழக்கில் முத்தராமலிங்கம் கைதாகி ஜாமீனில் வெளியே சென்றவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் முத்துராமலிங்கத்தை தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு வருகிற 21-ந் தேதி முத்துராமலிங்கம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் லதாஜெகன் தலைமையிலும், துணை சேர்மன் வளர்மதி அன்பழகன் முன்னிலை யிலும் நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சங்கர் கைலாசம் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கவுன்சில் கூட்டத்தில்; வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்வது, செக்காணூரணி பகுதியில் கொசுத் தொல்லையை கட்டு ப்படுத்துவது, கிராமப்புற ரேசன் கடைகளில் பிரச்சினையாக கைரேகை வைப்பதில் உள்ள குறை பாடுகளை நீக்குதல், மத்திய அரசு வழங்கிடும் அரிசியை முறையாக முறையாக வழங்குதல், மத்திய அரசின் 100நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளர் களை இடமாற்றம் செய்வது, செக்காணூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவுன் சிலர்கள் ஆண்டிச்சாமி, ஓம்ஸ்ரீ முருகன், சிவபாண்டி, மின்னல் கொடி ஆண்டிச் சாமி, பரமன், சிவபிரியா ஆகியோர் கருத்து தெரிவித்து பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது

    • அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவ ள்ளுவர் திருநாளில் 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில், 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு தகுதியான நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட அளவில் அண்ணல் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து, ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    எனவே, 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது தொட ர்பாக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள சான்று களுடன் வருகிற

    23-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் வெற்றிவேல்முருகன் (வயது 28). இவர்கள் இருவரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை வெற்றிவேல் முருகன் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததால், போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

    அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரியாக தாக்கி, வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார்.

    கணவரின் சித்ரவதை தாங்காமல் அந்த சிறுமி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வெற்றிவேல் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர்.

    அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன. அதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிவேல் முருகன் தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்ததாகவும், போதையில் பாலியல் சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். சிறுமி சித்ரவதைக்கு உள்ளானது குறித்த புகாரின்பேரில் வெற்றிவேல் முருகன் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.

    தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெற்றிவேல் முருகன் மதுரை அண்ணாநகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

    பின்பு வீட்டுக்குள் இருந்த வெற்றிவேல் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அமெரிக்கன் கல்லூரியில் 710 மாணவர்கள் ரத்த தானம் செய்து சாதனை புரிந்தனர்.
    • 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், இந்திய செஞ்சிலுவைக் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் ஏற்பாடு செய்த இந்த முகாமை கல்லூரி நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம் தலைமையில், காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் ெதாடங்கி வைத்தார். காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் சிற்றாலய குரு பேராசிரியர் ஜான் காமராஜ் இறைவேண்டல் முன்வைத்தார்.

    இதில் மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவர்களான ஆனந்தீஸ்வரி, ராஜேசுவரி மற்றும் அனைத்து துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. ரத்த தானம் செய்த மாணவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஒருங்கிணைப்பில் திட்ட அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களான சாகுல் ஹமீது, ஷீலா, டாப்னி, மங்கையர்க்கரசி, யேசுராஜன், பழனிச்சாமி, ஞானமணி, விக்னேசுவரன், ஜோசைய்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை கே.புளியங்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் வெற்றிமாறன். ராணுவ வீரர். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). இவர் நேற்று காலை மதுரைக்கு வந்திருந்தார்.

    பின்னர் ஊருக்கு செல்வதற்காக பெரியார் பஸ் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் காத்திருந்தார். அங்கு பதுங்கியிருந்த பெண், பிரேமலதா வைத்திருந்த மணிபர்சை பறித்துக்கொண்டு தப்பி முயன்றார்.

    பிரேமலதா, 'திருடி, திருடி' என்று கூச்சல் போட்டார். அப்போது திடீர்நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லோகே ஸ்வரி தற்செயலாக பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். பிரேமலதாவின் கூச்சலை கேட்டதும் அவர் சக போலீசாருடன் தப்பி ஓடிய பெண்ணை மடக்கி பிடித்தார்.

    அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் உசிலம்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மனைவி காந்தி என்ற லட்சுமி (28) என்பது தெரிய வந்தது.

    இவர் மீது வழிப்பறி செய்ததாக திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றார். அதன் பிறகு ஜாமீனில் வந்த லட்சுமி மீண்டும் பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடியபோது போலீசில் சிக்கினார்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு, 65 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.
    • பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கான பருவ இடைநிலை தேர்வும் இன்று நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி கமிஷனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட 92 பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு, அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி மாநிலம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 65 மையங்கள் ஏற்படுத்த ப்பட்டு இருந்தன. விண்ணப்பதாரர்கள் அதிகாலை முதலே தேர்வு மையத்துக்கு வந்தனர். அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வி தாளில் 175 வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும், 25 வினாக்கள் எஸ்.எஸ்.எல்.சி. தரத்திலும் இருந்தது. மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கு 20 ஆயிரத்து 259 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையங்களில் 65 ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    துணை தாசில்தார் தலைமையில் 18 மொபைல் குழுவினர், துணை கலெக்டர் தலைமையில் 5 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 66 வீடியோ கிராபர்கள் வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 முதல் நிலை தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது.

    தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முழு வேலை நாள் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடக்கும் மையங்களில், 12.30 மணிக்கு பிறகு பள்ளிகளை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மட்டுமின்றி பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கான பருவ இடைநிலை தேர்வும் இன்று நடந்தது.

    ×