என் மலர்
மதுரை
- உசிலம்பட்டி அருகே உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா முன்னிலையில் உசிலம்பட்டி யூனியன் தலைவர் ரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், ஊராட்சி செயலாளர் மகேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா மதுரையில் விமரிசையாக நடந்தது.
- இதில் முன்னாள் அமைச்சர்கள்-முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரை
மதுரை மத்திய 6-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், ஆர்.கே. குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி பார்மா மேனேஜிங் டைரக்டர்மான எம்.ஜி. ராமச்சந்திரன்-கொன்னலட்சுமி தம்பதியின் மகள் ராஜிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -உமா மகேஸ்வரி தம்பதி மகனுமான மோகன் ராஜூக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இவர்களது திருமணம் நேற்று (20-ந் தேதி) அழகர் கோவில் ரோடு சூர்யா நகரில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. திருமணத்தை மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் எம். கணேசன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ். பாண்டியன், அண்ணாதுரை, ராஜா, ஜெயபாலன், சக்தி மோகன், குமார், சோலை எம். ராஜா, சக்தி விநாயகர் பாண்டியன், தளபதி மாரியப்பன், பரவை ராஜா, திரவியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் அரசியல் கட்சியினர், தொழிலதி பர்கள், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண ஏற்பாடுகளை எம்.ஜி. ராமச்சந்திரன்- கொன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர் உதயகுமார்- புனிதா, நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.
- மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை
மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிர படுத்தி உள்ளனர்.
24 மணி நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ள போலீசார் முன்னே எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரங்காட்டி வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் வழிபா ட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
அழகர் கோவில், ஒத்தக்கடை, திருமங்கலம், கப்பலூர், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எப். போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகர் பகுதியில் போலீஸ் கமிஷன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான வாகனங்களும் சோதனை நடத்தப்படுகிறது. போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- சோழவந்தான் அருகே தர்காவில் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுகை நடத்தினர்.
- இதில் தமிழ்மகன் உசேன், உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகையாற்று கரையோரமுள்ள தர்காவில் அ.தி.மு.க. அவைதலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கட்சியின் பொதுசெயலாளராகவும், முதல்வராகவும் வேண்டி சிறப்பு தொழகை நடந்தது.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் தொழிற்சங்க நிர்வாகி மணி, கிழக்கு மண்டலம் ஜெயபால், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட மருத்துவ அணி கருப்பையா, பேரூர் செயலாளர் முருகேசன், ராமசந்திரன், தென்கரை ராமலிங்கம், கண்ணன், திருமங்கலம் தமிழழகன், வக்கீல் திருப்பதி, அஷ்ரத் கவுஸ் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் சாத்தியாறு அணை நிரம்புகிறது.
- 13 ஆண்டுகளுக்கு பின் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியாறு அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பருவமழை இல்லாத காரணத்தால் அணை முழுவதுமாக வறண்டு காணப்பட்டது. இதனால் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக வறண்டு காணப்பட்டது.
போதிய நீர் வசதியின்றி விவசாயிகள் கடும் வறட்சிக்கு உள்ளாகினர். இதனால் வைகை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த அணைக்கு ராட்சத பைப் மூலம் கொண்டு வந்து அணையை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என பாசன வசதி பெரும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து ஓரளவு தண்ணீர் வந்த நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இதனால் இந்த அணையில் இருந்து பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் நிரம்பியது.
இருப்பினும் தற்போது பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக நிரம்பி விவசாயப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து கிராம கண்மாய்களும் நிரம்பி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையில் இருந்து வரும் தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாசன வசதி பெறும் எர்ரம்பட்டி, கீழச்சின்னம்பட்டி முடுவார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 13 ஆண்டுகளுக்குப் பின் நெல் நடவு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வானம் பார்த்த பூமியாக இருந்த இப்பகுதி விவசாய நிலங்கள் தற்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை ஆடை போர்த்தியபடி கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்மநபர்கள் திடீரென்று வெள்ளியம்மாளை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்தார்.
மதுரை:
மதுரை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி வெள்ளியம்மாள் (வயது 31). ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு பீ.பி.குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வெள்ளியம்மாள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரை பின் தொடர்ந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்மநபர்கள் திடீரென்று வெள்ளியம்மாளை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வெள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை தேடி வருகின்றனர்.
- போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் சிறப்பு படை பிரிவு அமைக்கப்பட்டது.
- புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களும் அறிவிப்பு
மதுரை
மதுரை மாநகரில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு போலீசார் மூலம் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கரிமேடு, செல்லூர், கூடல்புதூர், தல்லாகுளம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு 'பாலியல் சீண்டல் செய்தால் என்ன செய்ய வேண்டும்? அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் முகமது இத்ரீஸ் (கரிமேடு), பாலமுருகன் (தல்லாகுளம்), செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிப்பதற்காக கூடுதல் காவல் துணை ஆணையர் தலைமையில் குற்ற தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான குற்றங்களை எந்தவித தயக்கமுமின்றி இலவச தொலைபேசி எண்கள்: 181, 1098, இணைய வழி குற்றங்கள் தொடர்பாக சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண்: 1930, வாட்ஸ்அப் செயலி எண்: 83000-21100, "நம் காவல்" செயலி மற்றும் மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 0452-2330070, 0452-2520760 ஆகியவற்றின் மூலமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோரின் விபரங்கள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
- கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராம த்தில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகள் இடிந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சாத்தங்குடி கிராமத்தில் மழையால் வீடுகளை இழந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு. காய்கறி மற்றும் நிவாரண நிதியை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.
இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
- விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராம் மகன் தங்கமாயி (26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்றிரவு உறவினரை பார்ப்பதற்காக காளப்பன்பட்டிக்கு மானூத்து வழியாக இதே ஊரைச் சேர்ந்த நண்பர் உக்கிரபாண்டி மகன் தினேசுடன்(25) பைக்கில் சென்றார். மானூத்து அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளின்றி தங்கமாயி பரிதாபமாக இறந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- ஓ.பி.எஸ்.உடன் தொண்டரணி உள்ளது; ஈ.பி.எஸ்.உடன் டெண்டர் அணி உள்ளது-முன்னாள் எம்.பி
- அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன்கூட உயர் பதவிக்கு வருவான்.
அவனியாபுரம்
மதுரை அவனியாபுரத்தில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட (ஓ.பி.எஸ். அணி) சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்-முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் எம்.எல்.ஏ., மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரித்துரை, ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஐயப்பன் எம்.எல்.ஏ., தமிழக தேர்தல் ஆணையம் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.-ஐ தான் அ.தி.மு.க.வாக அங்கீகரித்துள்ளது. தொண்டர்கள் ஓ.பி.எஸ். பின்னால்தான் உள்ளார்கள் என்றார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கோபாலகிருஷ்ணன் பேசிய தாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ்.உடன் தொண்டர் அணி உள்ளது. இ.பி.எஸ்.உடன் டெண்டர் அணி உள்ளது. அ.தி.மு.க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்ந்த இயக்கம். இந்த இயக்கத்தை தனது சுயநலத்திற்காக அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.
அ.தி.மு.க.வுக்கு விசுவாசத்துடன் ஓ.பி.எஸ். இருக்கிறார். கூவாத்தூரில் தங்கம் தருகிறோம், பணம் தருகிறோம் என்று பேரம் பேசி அவர்கள் அணிக்கு என்னை அழைத்தபோது நான் தங்கம் வேண்டாம் தங்கமகன் ஓ.பி.எஸ். உடன் இருப்பதே மேல் என்று கருதி இருந்தேன். இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறேன்.
அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன்கூட உயர் பதவிக்கு வருவான். பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். வழிவகுத்து கொடுத்திக்கிறார். ஆனால் இன்று சிலர் தனது சுயநலத்திற்காக 10 மாவட்ட செயலாளர்கள் சொன்னதால் இடைக்கால பொதுச்செயலாளர் என்று தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அது ஒருபோதும் செல்லாது. அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பி.எஸ். பின்னால்தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வேலுச்சாமி, பி.எஸ்.கண்ணன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலை பிரபு, கொம்பையா பாண்டியன், ஆட்டோ கருப்பையா,முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன், கமலக்கண்ணன், வெள்ளூர் கார்த்திகேயன், பவுண்டு ராஜ், கணேசத்தேவர், ராதா, முத்து, கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுலா முகவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஹோம் ஸ்டே நிறுவனங்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள், முகாம் ஆபரேட்டர்கள், கேரவன் டூர்- பார்க் ஆபரேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
அவர்கள் www.tntourismtors.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை மேல வெளி வீதியில் உள்ள சுற்றுலா அலுவலகம் மற்றும் தொலைபேசி எண்: 0452-2334757 ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
- கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றதாக அமைச்சர் கூறினார்.
- மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன.
மதுரை
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஒருங்கிணைந்து, "உலக மரபு வார விழாவை" முன்னிட்டு நடத்திய 'தமிழக நடுகல் மரபு' கண்காட்சி நடந்தது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன. அவை சென்னையில் உள்ள இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கல்வெட்டு மைபடிகளை பாதுகாப்பதற்கோ, ஆய்வு கள் மேற்கொள்வதற்கோ, மைபடிகள் குறித்து வடிவ ங்களை உருவாக்குவதற்கோ இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் அளவீட்டுத்துறைக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இது வரலாற்றில் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது.
1919-ம் ஆண்டு வரைதான் தென் இந்தியாவில் இருந்து மைல்படிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கல்வெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 50 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத கல்வெட்டுக்களும் கிடைத்து விட்டால் அவற்றின் மூலம் நாம் பல்வேறு வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. கீழடியில் 1200-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் என்னென்ன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்? என்றும், காட்சிப்படுத்தும் பொருள் குறித்து குறிப்புகள் இடம் பெற வேண்டும், பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும்? என்று திட்டமிடப்பட்டு 2 மாத காலங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று முதலமைச்சரால் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் கலெக்டர்அனீஷ் சேகர் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், யாக்கை மரபு அறக்கட்டளை குமரவேல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






