என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கி ழமை) மாைல 4 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன், எரிவாயு நுகர்வோர்கள், ஆயில் மார்கெட்டிங் நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29 சதவீதம் உள்ளனர். 14 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் 10 சதவீதம் உள்ளனர்.

    குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    2021-ம் ஆண்டு சி.ஏ.சி.எல். என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இறந்ததாக ரூ.14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2016-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 75 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படும்போது மத்திய, மாநில அரசு தரப்பில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் அதில் பெரும் தாமதம் உள்ளது.

    கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்து, பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகிறது. ஆகவே இந்த பகுதிகளில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையத்தை அமைத்து மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து இழப்பீடு தொகை விரைந்து கிடைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்தியா இல்லாமல் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.

    வழக்கு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நடந்தது.
    • அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உள்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வர லிங்கம், நந்திகேசுவரர், சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில விவசாய அணி துணைத்தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உள்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர். ரவிச்சந்திர பட்டர், பரசுராம் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள் செய்தனர். பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    • அரசு பஸ் மோதி பெண் பலியானார்.
    • திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்சு மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்குமிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது.
    • கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

    நகராட்சி எல்லைக்கு 4 கிலோ மீட்டருக்கு அப்பால் சுங்கச்சாவடி அமைய வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி கப்பலூர் சுங்கச்சாவடி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைப்பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதனால் திருமங்கலம் வாகன உரிமையாளர்களுக்கும், கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்குமிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. சுங்கச்சாவடியை அகற்ற கோரி பல்வேறு போராட்டங்களும் நடந்தப்பட்டது.

    4 வழிச்சாலையை பயன்படுத்தாத டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.

    இந்த நிலையில் போராட்டம் நடத்தும் போது அவ்வப்போது உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பதும், பின்னர் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூலிப்போம் என கூறுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

    இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அண்மையில் கலெக்டரிடம் முறையிட்டும் சுங்கசாவடி நிர்வாகம் தனது நடவடிக்கையில் இருந்து பின் வாங்கவில்லை.

    முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள் உள்பட பலர் கோரிக்கை விடுத்தாலும் சுங்கச்சாவடி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு என்ற ஒரு குழுவை அமைத்து கடந்த 3 மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எட்டப்படாததால் கடந்த 13-ந் தேதி திருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் திருமங்கலத்தின் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரத்தின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது என் முதல் வேலை என கூறினார். ஆனால் முதல்வரும் இதில் கவனம் செலுத்தவில்லை என்பது வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்தும், சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கடையடைப்பு போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்து அறிவித்தனர்.

    அதன்படி கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எதிராக திருமங்கலம் நகர்பகுதி முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. இதனால் திருமங்கலத்தில் காய்கறி கடைகள், சிறிய கடைகள், பெரிய கடைகள், உணவகங்கள் என 5000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, பஸ் நிலையம், உசிலம்பட்டி சாலை, சின்னக்கடை வீதி பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆட்டோக்கள், கார்கள் வேன்கள் மற்றும் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்களை மட்டுமே பஸ் நிலையத்தில் காண முடிந்தது.

    • முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ‘ட்ரோன்’ கேமரா பறக்க விட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருப்பரங்குன்றம்:

    முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோவில். இதனால் இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    குடைவரை கோவில் என்பதால் இக்கோவிலின் பெரும் பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை சிலர் 'ட்ரோன்' கேமரா பறக்க விடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 'ட்ரோன்' கேமரா பறக்க விட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் 'ட்ரோன்' கேமராவை பறக்க விட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 'ட்ரோன்' கேமராவை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து புகைப்பட கலைஞர்களான மதுரை அனுப்பானடியை சேர்ந்த சுரேஷ்குமார், பிரசாந்த் பழங்காநத்தத்தை சேர்ந்த நரேந்திரகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • 58 கிராம கால்வாயை மாற்று தடத்தில் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • தற்போது பாறைபட்டி கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயை கடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் பாறைபட்டி கண்மாய் உள்ளது. இங்கிருந்து செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பாப்பான்குளம் கண்மாய்க்கு 58 கிராம கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த கால்வாய் சுளிஒச்சான்பட்டியில் கிராமத்தின் நடுவே மந்தை வழியாக செல்கிறது. இதனால் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த கால்வாயை கடந்து செல்லும் நிலை உள்ளது. தண்ணீர் அதிகமாக செல்லும் காலங்களில் கால்வாயை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

    எனவே 58 கிராம கால்வாயை மாற்று தடத்தில் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாறைபட்டி கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயை கடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மாணவ-மாணவிகள், முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதை கண்டித்தும், மாற்று தடத்தில் கால்வாயை அமைக்க வேண்டுமென வலியுறுத்தியும் இன்று காலை லிங்கப்பநாயக்கனூரில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் சுளிஒச்சான்பட்டி, எராம்பட்டி, வாய்ப்பாடி, மாவிலிப்பட்டி, குயவன்கோவில்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். மறியலின் போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனையின் அடிப்படையில் மதுரை வந்த சவுக்கு சங்கர் இன்று காலை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தனது வக்கீலுடன் வந்தார்.
    • கோர்ட்டு அலுவலகத்தில் இருந்த பதிவேட்டில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு சென்றார்.

    மதுரை:

    சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கைதாகி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சவுக்கு சங்கருக்கு ஜாமீன் நிபந்தனைகளை மதுரை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் பிறப்பித்தது. அதில், மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தது. இதனை ஏற்று சவுக்கு சங்கர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

    மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனையின் அடிப்படையில் மதுரை வந்த சவுக்கு சங்கர் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தனது வக்கீலுடன் வந்தார். கோர்ட்டு அலுவலகத்தில் இருந்த பதிவேட்டில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு சென்றார்.

    • தீயாய் பரவும் ‘மெட்ராஸ்-ஐ’ நோயார் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும்

    மதுரை

    மதுரையில் தீயாய் பரவி வரும் மெட்ராஸ்- ஐ கண் நோயால் தினம் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகி றார்கள்.

    தற்போது மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் மனிதர்களுக்கு பரவி வருகிறது.

    அந்த வகையில் மெட்ராஸ் -ஐ என்று அழைக்கப்படும் கண் வலி நோய் தற்போது மதுரை பகுதியில் அதிகளவில் பரவி வருகிறது. காட்டுத் தீப்போல ஒவ்வொரு நாளும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு இந்த நோய் பரவும் தன்மை கொண்டதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முன்னெச்ச ரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் மெட்ராஸ்-ஐ யால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான சிகிச்சையில் கண்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

    கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்கும் வகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த கண் வலி எளிதில் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் அருகில் செல்வதை தவிர்த்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கைகளை கொண்டு கண்களை கசக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    சுமார் 5 நாட்களுக்கு கண்கள் சிவந்து வீக்கம் ஏற்பட்டு நீர் வடியும் தன்மை கொண்ட இந்த நோய் காரணமாக கண் உறுத்தல் உள்ளிட்ட வலியும் காணப்படும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது தான் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    கார்த்திைக மாத பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதம் மேற்கொண்டு சபரிமலை சென்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கார், வேன்கள் மூலம் செல்லும் நிலை உள்ளது.

    பஸ்கள் இயக்க வேண்டும்

    சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மதுரையில் தற்போது வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் குழுவாக செல்லா மல் தனியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    இவர்கள் தேனி மாவட்டம் கம்பம், குமுளிக்கு சென்று அங்கிருந்து கேரள அரசு பஸ்களை பிடித்து நிலக்கல்லுக்கு செல்லும் நிலை உள்ளது.

    குமுளி முக்கிய மையமாக உள்ளதால் அங்கு தமிழக பக்தர்கள் அதிக அளவில் திரளுகின்றனர். இதனால் கேரள பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. பல கிலோ மீட்டர்தூரம் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகை யில் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி மற்றும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு நடந்தது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் நடந்தது.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கார்த்திகை முதல் சோம வார தினமான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசு வரர் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை சுந்தரேசுவர ருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சிறப்பு அபி ஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார்- கோவிலில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சோம வார வழிபாடுகள் நடைபெற்றது.

    இைதயொட்டி 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை சிவலிங்கத்திற்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

    அபிஷேக பிரியரான சிவபெருமானை கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இன்று பல பக்தர்கள் விரதம் கடைபிடித்து சோம வார வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

    இேதபோல் கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், உத்தர கோசமங்கை சிவன் கோவில், திருவாதவூர் சிவன் கோவில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சோம வார சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • மதுரையில் காந்தி சில்ப் பஜார் விற்பனை கண்காட்சி நடந்தது.
    • இலவச அனுமதியுடன் கூடிய இந்த கண்காட்சியில் தினசரி கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல் விளக்கமும் நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் அகில இந்திய கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    மதுரையில் இந்திய ஜவுளி துறை, மற்றும் மதுரை "பெட்கிராட் நிறுவனம் இணைந்து 'காந்தி சில்ப் பஜார்' 10 நாட்கள் நடைபெறும் அகில இந்திய கைவினைப் பொருட்களின் விற்பனை கண்காட்சி ராஜா முத்தையா மன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார்.

    கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணைய மண்டல இயக்குனர் பிரபாகரன், நாகர்கோவில் காதி கிராப்ட் சேவை மைய உதவி இயக்குனர் ரூப் சந்தர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் காளிதாசன், "பெட்கிராட்" நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு அலுவலர்கள் பிரிட்ஷுதா, ரேவதி, சுனில், மகளிர் உதவி திட்ட அலுவலர் வெள்ளப்பாண்டி மற்றும் "பெட்கிராட்" நிர்வாகிகள் சுருளி, அங்குசாமி, கிருஷ்ணவேணி, சாராள் ரூபி, சுசிலா குணசீலி, மார்ட்டின் லூதர்கிங், ராஜசேகரன், இந்திரா, பயிற்சியாளர்கள் விஜயகுமார், விஜய வள்ளி, முத்துச்செல்வி, ஈஸ்வரி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த அனைத்து கைவினைக் கலைஞர்கள் தயார் செய்த பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.

    கண்காட்சியில் 100 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கண்ணாடி பொம்மைகள், மண்பாண்டங்கள், வேலைப்பாடுடன் கூடிய மரச்சிற்பங்கள், சணல் பொருட்கள், பிரிண்டிங் துணி வகைகள், செயற்கை ஆபரண நகைகள், சுங்குடி சேலைகள், ஓலை மற்றும் நார் பொருட்கள், தஞ்சாவூர் கார்பெட்கள், சங்கு பொருட்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இலவச அனுமதியுடன் கூடிய இந்த கண்காட்சியில் தினசரி கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல் விளக்கமும் நடைபெறுகிறது. மேலும் தினமும்‌‌ பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தினசரி பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இந்த மாபெரும் கண்காட்சியை கண்டுகளித்து பயன் பெறும் வகையில் இந்திய ஜவுளித்துறை மற்றும் "பெட்கிராட்" நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

    ×