search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Protest"

    • 58 கிராம கால்வாயை மாற்று தடத்தில் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • தற்போது பாறைபட்டி கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயை கடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் பாறைபட்டி கண்மாய் உள்ளது. இங்கிருந்து செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பாப்பான்குளம் கண்மாய்க்கு 58 கிராம கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த கால்வாய் சுளிஒச்சான்பட்டியில் கிராமத்தின் நடுவே மந்தை வழியாக செல்கிறது. இதனால் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த கால்வாயை கடந்து செல்லும் நிலை உள்ளது. தண்ணீர் அதிகமாக செல்லும் காலங்களில் கால்வாயை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

    எனவே 58 கிராம கால்வாயை மாற்று தடத்தில் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாறைபட்டி கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயை கடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மாணவ-மாணவிகள், முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதை கண்டித்தும், மாற்று தடத்தில் கால்வாயை அமைக்க வேண்டுமென வலியுறுத்தியும் இன்று காலை லிங்கப்பநாயக்கனூரில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் சுளிஒச்சான்பட்டி, எராம்பட்டி, வாய்ப்பாடி, மாவிலிப்பட்டி, குயவன்கோவில்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். மறியலின் போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ×