என் மலர்tooltip icon

    மதுரை

    • மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.
    • இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் இடறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் தற்போது பெய்து வரும் பருவ மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாணிக்கம்பட்டி கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • அரிட்டாபட்டி கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமம் உள்ளது. இதனை தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அரிட்டாபட்டி அமைந்து உள்ளது.

    அரிட்டாபட்டி கிராமம் 7 சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பகுதி இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கை நீர் ஊற்று கொண்ட குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஆட்சியில் கட்ட ப்பட்டது.

    இந்த கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர பறவை இனங்கள் 300-க்கும் மேல் உள்ளன. இதில் லகர் ராஜாளி, சாகின் ராஜாளி மற்றும் ராஜாளி பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்னுருண்ணி பறவை இனங்கள் உள்ளன. எறும்புத்தின்னிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.

    மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுக்கள், 2200 ஆண்டுகள் பழமையான குடை வரை கோவில்கள் உள்ளன.

    இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பையும் தருகின்றது. இதனை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பினார்.

    அதேபோல் இப்ப குதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வன பாதுகாவலர் ஓடையன், நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முன்னாள் நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஓடையன் உள்பட பலர் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    மதுரையை சுற்றியுள்ள சமூக ஆர்வலர்களும் மற்றும் பறவை இன பாதுகாவலர்கள் வன பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழக அரசு அரிட்டா பட்டியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்தது. இதையொட்டி அரிட்டா பட்டி கிராம பிரமுகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தங்களது கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்ததற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.
    • உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை கடக்க ஒவ்வொரு முறையும் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி நிர்வாகத்து க்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

    கப்பலூர் சுங்கச்சாவடியை கைப்பற்றிய புதிய ஒப்பந்த நிறுவனம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் மாதந்தோறும் ரூ.310 கட்ட வேண்டும். சுங்கச்சாவடியை கடக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் சுங்கச்சாவடி பாக்கித் தொகை லட்சக்கணக்கில் இருப்பதாகவும், அதனை உடனே செலுத்தக்கோரி வாகன உரிமையாளருக்கு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கப்பலூர் சுங்கச்சா வடி ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் நேற்று திருமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    அமைச்சரின் அறிவிப்பை முன்னிட்டு போராட்ட குழுவின் அவசர கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரின் கருத்தில் முழு திருப்தி இல்லை. இந்த அறிவிப்பு தற்காலிகமானது தான். கப்பலூர் சுங்கச்சா வடிக்கு நிரந்தர தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட போவதாக போராட்டக்குழு தெரிவித்தனர்.

    • மதுரை விமான நிலையம் தென் தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது.
    • விமான நிலையம் வரும் பயணிகள் வி.ஐ.பி.களுக்காக கூடி இருக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளே செல்ல தாமதம் ஏற்படுகிறது.

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையம் தென் தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் தினமும் 15-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்கிறது.

    இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். தென் தமிழகத்திற்கு வரக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் முதல்வர் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை அதிகமானோர் மதுரை விமான நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் அடிக்கடி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்து, மதுரை அருகே உள்ள இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

    இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் வி.ஐ.பி.க்கு என தனி பாதை இருந்தும் அதனை பயன்படுத்தாமல் பயணிகள் செல்லும் பொது வழியிலேயே செல்வதால் தலைவர்களின் வருகைக்காக காத்திருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அதிமாக இருக்கிறது.

    இந்த கூட்ட நெரிசலால் பயணிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையம் வரும் பயணிகள் வி.ஐ.பி.களுக்காக கூடி இருக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளே செல்ல தாமதம் ஏற்படுகிறது.

    மதுரை விமான நிலையத்தில் விஐபிகள் செல்வதற்கான தனிப்பாதைகளை பயன்படுத்தினால் விமான பயணிகள் வந்து செல்வதில் உள்ள சிரமம் குறையும் என்பது பயணிகளின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

    மதுரை விமான நிலையத்தில் ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குறைவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனி பாதை திறந்தால் அதற்கு தனியாக வீரர்கள் நியமிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் வி.ஐ.பி. பாதை மூடப்பட்டுள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கேள்வி விடுத்துள்ளனர்.

    பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு வி.ஐ.பி. பாதையை உடனடியாக திறந்து விட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது.

    மதுரை:

    மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையின்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் 36 மாதங்களில் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது.

    ஆனால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை என்றும், கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மற்றொரு வழக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என முடிவு எடுக்க நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர்முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் குடும்பநல அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிவதற்கு 5 வருடம் 8 மாதம் ஆகும். (அதாவது 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2026-ம் ஆண்டு அக்டோபர் வரை). அதிக செலவு மற்றும் கூடுதல் காலத்துக்கான மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கப்பட்டு செலவினத்துறையின் பரிசீலனையில் உள்ளது.

    இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது. மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    பின்னர் அரசு தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மேற்கண்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மனுதாரர் நேரில் ஆஜராகி, 2014-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 8 மாநிலங்களில் மத்திய அரசின் சொந்த நிதியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை கட்டியுள்ளனர். சமீபத்தில் கூட இமாசலப்பிரதேசத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன்? என்பது தெரியவில்லை என்றார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடியும் என்று தெரிவிக்கிறீர்கள்? அது சாத்தியமா? அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டு உள்ளன? என்ற நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • பராமரிப்பு பெட்டி என்பதால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • சரவண அருணாச்சலம் பத்திரமாக இறக்கி விடப்பட்டு, எஸ்-2 பெட்டியில் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

    மதுரை:

    நெல்லையில் இருந்து புதன்கிழமை தோறும் கொங்கண் ரெயில்வே வழியாக மும்பை தாதர் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கடந்த 2-ந் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டது. அப்போது சரவண அருணாச்சலம் என்பவர் ஓடும் ரெயிலில் கடைசி பெட்டியில் ஏற முயன்றார்.

    அது பராமரிப்பு பெட்டி என்பதால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே சரவண அருணாச்சலம் வாசல் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க நேரிட்டது. இதனை ரெயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்களான ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் தற்செயலாக பார்த்தனர். இந்த ரெயிலின் அடுத்த நிறுத்தம் கோவில்பட்டி என்பதால், 65 கிமீ தொலைவுக்கு படியில் தொங்கியபடி பயணிப்பது ஆபத்து என்பதை உணர்ந்த அவர்கள், அது தொடர்பாக நிலைய அதிகாரிக்கும், அதே ரெயிலின் மேற்பார்வையாளர் பாலமுருகனுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் ரெயில் 14 கிலோ மீட்டர் தொலைவை கடந்து கங்கைகொண்டான் வந்து விட்டது. அங்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சரவண அருணாச்சலம் பத்திரமாக இறக்கி விடப்பட்டு, எஸ்-2 பெட்டியில் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

    நெல்லை தாதர் விரைவு ரெயிலில் சமயோசிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரெயில் பெட்டி பராமரிப்பு ஊழியர்கள் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

    அப்போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை எந்திரவியல் பொறியாளர் மகேஷ்கட்கரி, கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.

    • அழகர்மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
    • மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தீபம் ஏற்றப்படும்.

    மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமியன்று நடக்கிறது.

    அன்று காலையில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடத்தி பெரிய தோளுக்கினியானில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகரை எழுந்தருளச் செய்கிறார்.

    பின்னர் திருமடப்பள்ளி யில் உள்ள நாச்சியாருக்கு திருமஞ்சனம் செய்து, நாச்சியார் முன் புன்னியவசனம், தீப பூஜை நடத்திய பிறகு மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் நெய் தீபங்களை பெருமாள் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, சேத்திரபாலகர் சன்னதி, கருடன் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, சரஸ்வதி சன்னதி, கம்பத்தடி போன்ற சன்னதிகளில் தீபங்கள் ஏற்றப்படுகிறது.

    பிராம்ன சீர்பாதமாக பெருமாளை தெற்கு படியேற்றத்தின் வழியாக பிரகாரம் எழுந்தருளி ஆழ்வார்கள் சன்னதியில், தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்து பெருமாளை தீபத்துடன் குடவரை வழியாக உறியடி மண்டபத்திற்கு மேல்புறம் பார்சட்டத்தில் எழுந்தருளச்செய்கிறார்.

    பின்னர் புன்னியவசனம் சொக்கப்பானை, புரோ ஷேனை, பூஜை நடந்த பிறகு அகல் தீபத்தை சொக்கப்பானையில் கொளுத்தி பெருமாள் தீப உற்சவம் நடைபெறும்.

    மேலும் அழகர்மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளிமலையாண்டி கோவில் கோம்பை கொப்பரையில் 200 லிட்டர் நெய் ஊற்றி மாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தீபம் ஏற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகராட்சி அனைத்து பிரிவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்

    மதுரை

    மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவு பணி, பாதாளசாக்கடை, ஓட்டுநர், பம்பிங் ஸ்டேசன், தெருவிளக்கு, பிட்டர் கூலி, பார்க் மஸ்தூர், கம்ப்யூட்டர், எழுத்தர், அலுவலக பணியாளர், துப்புரவு மேற்பார்வையாளர், பில் கலெக்டர் உள்பட சி மற்றும் டி பிரிவு பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய வேண்டும், கிராமப் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும்.

    ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    தமிழக அரசின் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. இணைந்து, மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    மண்டல தலைவர் அழகர்சாமி முன்னிலை யில் நடந்த இந்த போராட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற- மரணமடைந்த ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் தர வேண்டும்.

    ஒப்பந்தப்படி ஓய்வூதி யத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும், வேலைநிறுத்தம் செய்த 21 நாட்களை முறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
    • வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

    மதுரை

    மதுரை ஆனையூர் பகுதிக்கான குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு திட்டம் முடிவடைந்த நிலையில் சிறு, சிறு தவறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

    முழுமையாக இப்பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், தி.மு.க. நிர்வாகிகள் மருது பாண்டி, சசிகுமார், செல்வகணபதி கணேஷ், ரோகிணி பொம்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்போன் பேசியதை கண்டித்ததால் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை வசந்தநகரை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (வயது 27). இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பாக காரை நிறுத்தியிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதற்கு கோபிகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கல்வீசி தாக்கினார்.

    இதில் காரின் கண்ணாடி கள் உடைந்து நொறுங்கி யது. இது தொடர்பாக கோபி கிருஷ்ணன், சுப்பிரமணிய புரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை அனுப்பானடி பகலவன் நகர், பூக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் எல்லீஸ் நகர், போடி லைனில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கம்பெனியின் கேட் முன்பாக போஸ்டரை ஒட்டினார். இதற்கு கண்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், கல் வீசி தாக்கினார். இதில் கம்பெனியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இது தொடர்பாக கண்ணன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும், ஒரே வாலிபர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் எல்லீஸ் நகர், போடி லைனைச் சேர்ந்த முத்து கருப்பன் என்பவரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் மீனாட்சிஅம்மன் கோவில் முன்பு தேங்கிய சாக்கடை நீர் அகற்றப்பட்டது.
    • அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக அங்கு எந்த நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கோபுர வாசல் பகுதியில் திடீரென பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் அந்த வழியாக செல்லவும், கோவிலுக்குள் செல்லவும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான வாகனங்களை எடுத்து வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த பணிகளை தொடர்ந்து சாக்கடை அகற்றப்பட்டது.

    ஏற்கனவே சில நாட்க ளுக்கு முன்பும் இதே பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியது. எனவே கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை தரமான முறையில் செய்ய வேண்டும் என்றும், கழிவு நீர் கோவில் சுற்றுப்புறங்களில் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    ×