search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biodiversity Heritage Site"

    • அரிட்டாபட்டி கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமம் உள்ளது. இதனை தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அரிட்டாபட்டி அமைந்து உள்ளது.

    அரிட்டாபட்டி கிராமம் 7 சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பகுதி இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கை நீர் ஊற்று கொண்ட குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஆட்சியில் கட்ட ப்பட்டது.

    இந்த கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர பறவை இனங்கள் 300-க்கும் மேல் உள்ளன. இதில் லகர் ராஜாளி, சாகின் ராஜாளி மற்றும் ராஜாளி பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்னுருண்ணி பறவை இனங்கள் உள்ளன. எறும்புத்தின்னிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.

    மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுக்கள், 2200 ஆண்டுகள் பழமையான குடை வரை கோவில்கள் உள்ளன.

    இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பையும் தருகின்றது. இதனை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பினார்.

    அதேபோல் இப்ப குதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வன பாதுகாவலர் ஓடையன், நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முன்னாள் நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஓடையன் உள்பட பலர் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    மதுரையை சுற்றியுள்ள சமூக ஆர்வலர்களும் மற்றும் பறவை இன பாதுகாவலர்கள் வன பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழக அரசு அரிட்டா பட்டியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்தது. இதையொட்டி அரிட்டா பட்டி கிராம பிரமுகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தங்களது கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்ததற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    ×