என் மலர்
மதுரை
- சோழவந்தானில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த கூட்டம் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் நடந்தது.
அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து 3 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கம்பம் பாண்டியன், ஆற்காடு அகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், தனராஜ், பேரூர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், சேர்மன் பால்பாண்டி, ரகுபதி, பொதுகுழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர்கள் லதாகண்ணன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, வசந்தகோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், முத்துசெல்வி சதீஷ், கொத்தாளம் செந்தில் குருசாமி, சிவா, ஊராட்சி தலைவர்கள் சிறுமணி, துணை தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
- அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலத்தில் கடைய டைப்பு போராட்டமும் நடைபெற்றது. சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு கொடுக்க உள்ளனர். இதற்காக அவர்கள் வருகிற 21-ந் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயன், மேற்கு மாவட்ட பா.ஜனதாக கட்சி பொதுச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் வியாபாரிகள், நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின் போராட்டக்குழுவினர் கூறுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் முயற்சி செய்து மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
- சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படும்.
- இந்த தகவலை வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். விவசாயி தெய்வப் பெருமாள் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் மாசானம், தோட்டகலை உதவிஅலுவலர் குமரேசன், ஊராட்சி துணைதலைவர் சித்தாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் மோகன் ராஜ் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 கிராமங்களை தேர்தெடுத்து 17 துறை சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி தற்சார்பு கிராமமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் வேளாண் பொறியியல்துறை மூலம், சோலார் மின்உற்பத்தி மையம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மின்மோட்டாருக்கு 70 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.
மேலும் வேளாண் உற்பத்திபொருள் மதிப்பு கூட்டு சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவீதம், பண்ணை குட்டைகளுக்கு 100 சதவீதமும் மானியம் அளிக்கப்படுகிறது.
இது போன்ற திட்டங்க ளால் வேளாண்மையில் எந்திரமாக்கல் இலக்கை அடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாடிப்பட்டி தோட்டக்கலை துறைஉதவி இயக்குனர் சண்முகபிரியா பேசுகையில்,
விவசாயிகளுக்கு தேன்கூடு பண்ணை, மாவுமில் மற்றும் சொட்டு நீர்பாசன வசதி மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார்.
விதை இடுபொருள் மற்றும் கைதெளிப்பான் உள்ளிட்ட விவசாய உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் உதவி அலுவர் விக்டோரியா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் உழவன் செல்போன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
- போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் வாலிபர் பணத்தை திருடிச்சென்றார்.
- ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது.
மதுரை
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன் (வயது 43). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் வந்தார். அவர் "தான் மதுரை மத்திய ஜெயிலில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும், எனக்கு செல்போன் கவர் வேண்டும்" என்று தோரணையாக கேட்டார்.
உடனே பாவா பக்ருதீன் செல்போன் கவர் எடுப்பதற்காக கடையில் இருந்து வெளியே சென்றார். அப்போது கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி அந்த வாலிபர் மேஜையில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த பாவா பக்ருதீன் அந்த வாலிபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அவர் மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த வாலிபர் ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
- நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் தேர்வாளர்கள் ‘திடீர்’ மறியலில் ஈடுபட்டனர்.
- தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரை
மதுரை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பருவகால பணியாளர்களை நியமிக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்கா ணல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்காலிக பருவகால உதவு பவர் பணியிடங்களுக்கு 16ந் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் நேர்காணல் நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, இருப்பிட சான்றுகளுடன் நேர்காணலுக்கு வர வேண்டும். இதில் கலந்து கொள்வதற்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது. நேர்காணலுக்கான நாளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் அனுமதிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் உள்ள நுகர்பொ ருள் வாணிபக் கழக அலுவலகத்துக்கு காலையிலேயே வந்து விட்டனர்.
பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து
50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என முதல்வருக்கு பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிடப் பெருநாள், உழவர் திருநாள், தமிழர் திருநாளான நம்முடைய வருடப்பிறப்பு, பொங்கல் விழா சீரும் சிறப்புமாக வருடந்தோறும் தமிழ் பெருங்குடி மக்களால் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாவாகவும், உலகிற்கு அறநெறி வகுத்த வள்ளுவர் பெருமகனார் பிறந்தநாள் விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். வரலாற்று பிரிவினைவாதிகள் தமிழர் திருநாள் பெருமையை திருடும் நோக்கத்தோடு சங்கராந்தி என்று தமிழனுக்கு சம்பந்தமில்லாத விழாவாக அன்றைய தினம் சனாதனக் கூட்டம் கொண்டாட எத்தனிக்கிறது.
தமிழத்தில் வாழுகிற அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும் சாதி மதமற்ற திராவிட திருநாளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டுவதோடு, தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் சனாதன கூட்டத்திற்கு வழி வகுத்திடாமல் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை ரம்ஜான் போல் கிறிஸ்துமஸ் போல் நம்முடைய உழவர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாக அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டுகிறேன்.
திராவிட மாடல் அரசு நடத்தும் முதல்வர் திராவிடத் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட ரூ.2 ஆயிரம் வழங்க அ.தி.ம.மு.க. சார்பில் வேண்டுவதோடு வேட்டி, சேலை, செங்கரும்பும் வழங்க வேண்டுகிறேன். கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் அஷ்டமி சப்பர விழா நடந்தது.
- சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு இன்று சொக்கநாதர்-மீனாட்சி, பிரியாவிடைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் விதமாக அஷ்டமி சப்பர வீதி உலா நடந்தது.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான சொக்க நாதர்-பிரியாவிடை, மீனாட்சி மற்றும் விநாய கருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் அஷ்டமி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அஷ்டமி சப்பரத் தின்போது பூஜிக்கப்பட்ட அரிசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கோவில் சிறப்பு பூஜைகளை சங்கர நாராயண பட்டர் செய்திருந்தார். விழாவிற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷினி, தக்கார் சக்கரை அம்மாள் செய்திருந்தனர். விழா கட்டளைதாரர் மாரியப்பன் குடும்பத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- அலங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
- அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கடைகள், ஓட்டல்கள், வளையல், கறி, மருந்து, பலசரக்கு கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்பு தடுப்புகள், தாழ்வாரங்கள், வாசல்படிகளை ஏற்கனவே வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் அளந்து குறியீடு செய்திருந்தனர்.
அதன்படி, ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டது. வாடிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, மற்றும் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அலங்காநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
- மதுரை பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
- இது குறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
அழகர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தகர கொட்டகை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வயலியுறுத்தப்பட்டது.
- மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழக அரசு கடந்த வருடம் போல் இந்த வருடமும் கரும்பை கொள்முதல் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட சில பூச்சி கொல்லி மருந்துகளின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணப்பட்டுவாடா விவசாயி களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலூர் பெரியாறு ஒரு போக விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- நிலத்தை விற்பதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைதானார்.
- இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை சரளாதேவி கொடுத்துள்ளார்.
திருமங்கலம்
திருமங்கலம் மாயோன் நகரை சேர்ந்த தியாகராஜன் மனைவி சரளாதேவி(48). இவர் திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் கல்லுப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமியிடம் 3.5 சென்ட் நிலத்தை சென்ட் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு பேசி முடித்தார்.
இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை சரளாதேவி கொடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை இடத்தை பதிவு செய்யவில்லை. இது குறித்து பொன்னு சாமியிடம் கேட்டபோது கூடுதலாக ரூ.4.5 லட்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சரளாதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் முகமது சாபுரத்தை சேர்ந்தவர் சின்னான்(49). இவரது 2 மகன்கள் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.
அவர்களுக்கு மின்வாரிய அலுவல கத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சத்தை திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்த சின்னா(36). திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ராஜா(55) ஆகிய இருவரிடமும் சின்னான் கொடுத்துள்ளார்.
ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இந்த நிலையில் இருவரும் போலியான அரசு ஆணை வழங்கி வேலை கிடைத்ததாக கூறியுள்ளனர். இது போலியான ஆணை என தெரிய வந்ததை தொடர்ந்து சின்னான் திருமங்கலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சின்னா, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உமர் செரீப் அங்குள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை சொல்லி கொடுக்க இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்தார்.
- மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், கைமா ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் உமர் ஷெரீப் (வயது 42). ஆட்டோ டிரைவர்.
இவரது வீட்டில் நேற்று அதிகாலை தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.) போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வாள், வேல் கம்பு, கத்தி, நிஞ்சா, சுருள் கத்தி, வீல் செயின், கேடயம், கட்டார் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
உமர் ஷெரீப்பின் வீட்டுக்குள் இந்த ஆயுதங்கள் எப்படி வந்தது? ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது ஏன்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது உமர் செரீப் அங்குள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை சொல்லி கொடுக்க இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்தார். இவரது பதில், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
மேலும் உமர் செரீப்பின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகள், பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் புலனாய்வு செய்யப்பட்டது. அதில் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு உமர் செரீப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
பயங்கரவாத அமைப்புகளுடன் இவருக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் உமர் ஷெரீப்புக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாருக்குடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் உமர்செரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






