என் மலர்tooltip icon

    மதுரை

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • விவசாயி ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் வனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டிய கீர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பெரியார் பாசன கால்வா யில் இருந்து கிளை கால் வாய் அமைத்து சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும், அணையை தூர்வாரி ஆழப்படுத்தி விரிவு படுத்த வேண்டும், வெளியூர் பஸ்கள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்லும் ஓட்டுநர், நடத்து னர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வாடிப்பட்டி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரியும், குலசேகரன் கோட்டை பிரிவிலிருந்து மீனாட்சி அம்மன் கோவில் வரை சாலையை சீரமைக்க கோரியும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. முடிவில் விவசாயி ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

    • சோளம்-பாசிப்பயிறு ஏலம் நடந்தது.
    • மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயா என்ற பெண் விவசாயியின் 266கிலோ இருங்குசோளம் மறைமுக ஏலத்திற்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.37.25-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.9,909க்கு வர்த்தகம் நடந்தது.

    லாலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 2.501 கிலோ பாசிப்பயிறு அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.72.50 க்கும் குறைந்தபட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.71-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 889-க்கு வர்த்தகம் நடந்தது. இங்கு வேளாண் விளைபொருள் வரத்து அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சராலும், வேளாண் உற்பத்தி ஆணையராலும், வேளாண் விற்பனைத் துறை இயக்குநராலும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமானது மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு கண்காணிப்பாளர் வெங்கடேசை 90251 52075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    • சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் மதுரையில் இன்று சிறப்பு கருத்தரங்கு நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி னார். சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார்.

    அமைச்சர்கள் கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையி னருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பெரு பான்மையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்க ளுக்கு அரணாக இருக்க வேண்டும்.

    தற்போதைய சூழ்நிலை யில் மக்களிடையே சாதி-மதம் அடிப்படையில் பிரி வினை ஏற்படுத்தி விடலாம் என்று நோட்டாவோடு போட்டி போடும் ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. மத உணர்வை மதிப்போம், மதவெறி கொள்ளாதே என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. நம்மிடம் ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நமது கலாச்சாரத்தில் சிறப்பான அடையாளங்கள் அனைத்தும் சிறுபான்மையி னரால் வந்தது. அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் நன்றாக திறமைகளை வெளிப்படுத்து கின்றனர். எல்லோரும் இணைந்து சமுதாயத்தை வழிநடத்தி செல்கிறோம். தமிழக வளர்ச்சிக்கு பல சமுதாயத்தினர் பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்துள்ளனர். எனக்கு கல்வி, திறமை இருந்தாலும் முதல்வர் தரும் ஆதரவும் ஊக்கமும் மட்டுமே என் பணி சிறப்பாக அமைய ஊன்றுகோலாக விளங்கி வருகிறது.

    இந்திய அரசு ரத்து செய்த சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகையை, மாநில அரசு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ்கனி, மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதய ராஜ், ஆளூர் ஷா நவாஸ், பிரின்ஸ், அப்துல் வஹாப், கோ.தளபதி, அப்துல்சமது, ராஜேஷ்குமார், புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், சிறு பான்மையினர் ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், மதுரை கத்தோலிக்க உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, சி.எஸ்.ஐ. பேராயர் ஜெயசிங்பிரின்ஸ் பிரபாகரன், பெந்த கோஸ்தே திருச்சபை தேசிய துணை தலைவர் எடிசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத்அலி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, இயக்குநர் சுரேஷ்குமார், கலெக்டர் அனீஸ்சேகர், மேயர் இந்திராணி, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார்.
    • பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் மந்திரி பிலாவல் பூட்டோவை கண்டித்து திருமங்கலத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில கூட்டுறவு பிரிவு தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், மாநில பொருளாதார பிரிவு தலைவர்-அன்னை பாத்திமா கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் பேசினர்.

    நகர செயலாளர் விஜ யேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சரவணகுமார், பொதுச் செயலாளர் சின்னசாமி, மாநில பொருளாதாரபிரிவு செயலாளர் நிரஞ்சன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    • வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தி வருவதாக தொழிலாளர் நலத்துறைக்கு தெரிய வந்தது.
    • மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய பல்வேறு வகையான மீன்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்காக அங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் வாங்கும் மீன்களின் எடை குறைவாக இருப்பதாக தொடர்ந்து புகார் வந்தது.

    எனவே மாட்டுத்தாவணி மீன் சந்தையில் வியாபாரிகள் அரசு முத்திரையுடன் கூடிய தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மதுரை தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இருந்த போதிலும் ஒரு சில வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தி வருவதாக தொழிலாளர் நலத்துறைக்கு தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை மாவட்ட தொழிலாளர் துறை அமலாக்கபிரிவு உதவி கமிஷனர் மைவிழிசெல்வி தலைமையில் 25 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    அப்போது வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகளில் அரசு முத்திரை உள்ளதா? என்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 26 வியாபாரிகள் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்துவது தெரியவந்தது. அந்த தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சோதனை நடத்திய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளை கலைந்துபோக செய்தனர்.

    இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அமலாக்க உதவி கமிஷனர் மைவிழி செல்வி கூறியதாவது:-

    மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் அனைவரும் அரசு முத்திரையுடன் கூடிய தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. அதனை வியாபாரிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இதில் அரசு முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தியதாக 26 தராசுகளை பறிமுதல் செய்துள்ளோம். அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான நோட்டீசுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பேரையூரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 24). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த முத்துகிருஷ்ணன் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

    திருமங்கலம் அருகே ஆலம்பட்டி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தடுமாறி கீழே விழுந்த முத்துகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லூரி மாணவரின் உடலை கைப்பற்றினர்.

    பின்பு மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நான்கு வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே சாலைகளை மறித்து பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பலவற்றில் மிளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களுக்கு பேரிகார்ட்டுகள் இருப்பது தெரிவதில்லை.

    இதனால் அதில் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. சில சமயங்களில் உயிர்பலியும் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளில் மிளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • 10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார்.
    • உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஒரு புகார் கடிதம் வந்தது. அதில் சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு மனோரஞ்சிதம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி (வயது 39) மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வராஜ், மருந்தாளுநர் பால செந்தில் மற்றும் எஸ்.எஸ். காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது யோகமீனாட்சி போலி டாக்டர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார். சில மாதங்களில் அங்கு வேலையை நன்கு கற்றுக்கொண்ட அவருக்கு நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் வேலை வழங்கப்பட்டது.

    அதனையும் திறம்பட செய்த யோக மீனாட்சி அதற்கு அடுத்த கட்டமாக நர்சுகளிடம் பழகி நோயாளிகளுக்கு ஊசி போட பழகிக்கொண்டார். பின்னர் அவர் அந்த மருத்துவமனையில் டாக்டர்களின் அனுமதி இல்லாமல் நோயாளிகளுக்கு தன்னிச்சையாக ஊசி போடுவது, மருந்து வழங்குவது போன்ற வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் போல் டிப் டாப்பாக உடை அணிந்து வந்த யோகமீனாட்சி தன்னை ஒரு டாக்டர் என விவரம் தெரியாத நபர்களிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அவர்களிடம் தனது வீட்டு முகவரியை கொடுத்து ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் என்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். குறைந்த கட்டணம் தான் என கூறி உள்ளார்.

    இதனை நம்பி சிலர் யோக மீனாட்சியை சந்தித்து ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை வாங்கி உள்ளனர். இதில் சில பேருக்கு உடல் நலம் சீராகி உள்ளது.

    குறைந்த கட்டணத்தில் மருத்துவம் என்ற காரணத்தால் யோக மீனாட்சியிடம் சிகிச்சை பெற்றவர்கள் மூலம் அவருக்கு பொதுமக்கள் பலர் அறிமுகமாகினர். இதன் காரணமாக யோக மீனாட்சியை நாள்தோறும் குறைந்தது 30-க்கும் மேற்பட்டோர் சந்தித்து சிகிச்சை பெற்றனர்.

    இதையடுத்து யோக மீனாட்சி தனது வீட்டின் அருகிலேயே ஒரு கிளினிக் தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல கிளினிக்கிற்கு வரும் கூட்டம் அதிகரித்தது. இதனால் 24 மணி நேரமும் பிசியாக யோகமீனாட்சி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதற்காக ஒரு ஆண் உள்பட 2 பேரையும் வேலைக்கு சேர்த்தார்.

    அவர்களிடம், நான் ஏழை எளியோருக்கு குறைந்த செலவில் மருத்துவம் செய்ய விரும்புகிறேன். எனவே நீங்கள் உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

    இதனை நம்பி அவர்களும் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்துள்ளனர். இதற்காக, தான் வேலைக்கு சேர்த்த 2 பேருக்கும் யோக மீனாட்சி வெகுமதிகளை வழங்கினார். மேலும் மதுரையில் 200-க்கும் மேற்பட்டோருக்கு யோக மீனாட்சி குடும்ப டாக்டராக இருந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    10-ம் வகுப்பு கூட தாண்டாத ஒருவர் மக்களின் உயிரை பற்றி சிந்திக்காமல் மருத்துவம் பார்த்தது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • காந்தி மியூசியத்தில் சமூக விரோதிகள் மது-,இறைச்சி சாப்பிடுவதாக பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
    • கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன், நிர்வாகிகள் சீமான்சரவணன், முத்துக்குமார் ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை காந்தி மியூசியத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த காந்தியடிகள், 'மது அருந்தக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது" என்று போதித்தார். ஆனால் காந்தி மியூசிய வளாகத்திற்குள் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி, மாமிசம் சாப்பிட்டு வருகின்றனர்.

    இதைப்பார்த்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். இதனால் வெளி நாட்டவர் மத்தியில் காந்தியின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை உலக தமிழ் சங்கம் 1986-ந் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2016-ந் ஆண்டு திறக்கப்பட்டது. அதில் மாணவ- மாணவிகள் படித்து தெளிவுறும் வகையில் 1,330 திருக்குறள்களும், அதன் விளக்கவுரைகளும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை கருவேல மரங்களால் சூழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனுவை படித்த கலெக்டர் அனீஷ்சேகர் உடனடியாக மனுவை மேல் நடவடிக்கைக்காக மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், மற்றும் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

    • சில்வர் பட்டறை, சுவீட் கடை எரிந்து சேதமானது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    செல்லூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அகிம்சாபுரம் 4-வது தெருவில் சில்வர் பட்டறை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகில் சுவீட் கடை உள்ளது.

    நேற்று இரவு இவர் பட்டறையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பட்டறையில் இருந்து புகை வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் பட்டறைக்குள் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து இனிப்பு கடைக்கும் தீ பரவியது. தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரு கடைகளிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சில்வர் பட்டறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின்துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேரும் என்று தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது

    இந்த நிலையில் முதல்முறையாக மார்கழி 1 முதல் மார்கழிமாதம் முழுவதுமாக தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் கூறியதாவது:- மார்கழி மாதத்தில் 500 பக்தர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் சமைத்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டில் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதமும் சராசரி 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது நேற்று முதல் வருகிற 2023-ல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை (மார்கழி மாதம் முழுவதும்) தினமும் அதி காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.

    • காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
    • கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த திருவிகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 9 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். மீதமுள்ள 3 இடங்களில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

    கரூர் மாவட்டத்தின் சேர்மனாக கண்ணதாசனும், துணை சேர்மனாக தனுஷ் (எ) முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2021 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனுஷ் (எ) முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    பின்னர் துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தினர். இதனால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், வருகிற 19-ம் தேதி கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் வாக்குகளை எண்ணலாம்.

    ஆனால் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. இது தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வருகிற 22-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை, மனுதாரர் அணுகலாம் என உத்தரவிட்டு, விசாரணையை 22-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • திருமங்கலம் அருகே 40 ஆண்டுகளுக்கு பின் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
    • விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடக்கோவில் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் மீட்டர் சுற்றளவில் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக போதிய அளவில் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தனர். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக அதிசயமாக கூடக்கோவில் கண்மாய்க்கு அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் வைகையாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் இந்த கண்மாய்க்கு வந்தடைந்தது.

    தொடர்மழை மற்றும் வைகையாற்று தண்ணீரால் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 1981-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக கூடக்கோவில் கண்மாய் நிரம்பியது. அதன்பின் கண்மாய் முழுவதும் நிரம்பவில்லை. ஆனால் தற்போது பெய்த மழை காரணமாக 40 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.

    கண்மாய் நிரம்பியதை முன்னிட்டு அந்தப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து கண்மாய் கலுங்கில் உள்ள கல்லை வழிபட்டனர்.

    ×