search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர்- விசாரணையில் தகவல்
    X

     போலி டாக்டர் யோகமீனாட்சி.

    நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர்- விசாரணையில் தகவல்

    • 10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார்.
    • உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஒரு புகார் கடிதம் வந்தது. அதில் சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு மனோரஞ்சிதம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி (வயது 39) மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வராஜ், மருந்தாளுநர் பால செந்தில் மற்றும் எஸ்.எஸ். காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது யோகமீனாட்சி போலி டாக்டர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார். சில மாதங்களில் அங்கு வேலையை நன்கு கற்றுக்கொண்ட அவருக்கு நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் வேலை வழங்கப்பட்டது.

    அதனையும் திறம்பட செய்த யோக மீனாட்சி அதற்கு அடுத்த கட்டமாக நர்சுகளிடம் பழகி நோயாளிகளுக்கு ஊசி போட பழகிக்கொண்டார். பின்னர் அவர் அந்த மருத்துவமனையில் டாக்டர்களின் அனுமதி இல்லாமல் நோயாளிகளுக்கு தன்னிச்சையாக ஊசி போடுவது, மருந்து வழங்குவது போன்ற வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் போல் டிப் டாப்பாக உடை அணிந்து வந்த யோகமீனாட்சி தன்னை ஒரு டாக்டர் என விவரம் தெரியாத நபர்களிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அவர்களிடம் தனது வீட்டு முகவரியை கொடுத்து ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் என்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். குறைந்த கட்டணம் தான் என கூறி உள்ளார்.

    இதனை நம்பி சிலர் யோக மீனாட்சியை சந்தித்து ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை வாங்கி உள்ளனர். இதில் சில பேருக்கு உடல் நலம் சீராகி உள்ளது.

    குறைந்த கட்டணத்தில் மருத்துவம் என்ற காரணத்தால் யோக மீனாட்சியிடம் சிகிச்சை பெற்றவர்கள் மூலம் அவருக்கு பொதுமக்கள் பலர் அறிமுகமாகினர். இதன் காரணமாக யோக மீனாட்சியை நாள்தோறும் குறைந்தது 30-க்கும் மேற்பட்டோர் சந்தித்து சிகிச்சை பெற்றனர்.

    இதையடுத்து யோக மீனாட்சி தனது வீட்டின் அருகிலேயே ஒரு கிளினிக் தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல கிளினிக்கிற்கு வரும் கூட்டம் அதிகரித்தது. இதனால் 24 மணி நேரமும் பிசியாக யோகமீனாட்சி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதற்காக ஒரு ஆண் உள்பட 2 பேரையும் வேலைக்கு சேர்த்தார்.

    அவர்களிடம், நான் ஏழை எளியோருக்கு குறைந்த செலவில் மருத்துவம் செய்ய விரும்புகிறேன். எனவே நீங்கள் உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

    இதனை நம்பி அவர்களும் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்துள்ளனர். இதற்காக, தான் வேலைக்கு சேர்த்த 2 பேருக்கும் யோக மீனாட்சி வெகுமதிகளை வழங்கினார். மேலும் மதுரையில் 200-க்கும் மேற்பட்டோருக்கு யோக மீனாட்சி குடும்ப டாக்டராக இருந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    10-ம் வகுப்பு கூட தாண்டாத ஒருவர் மக்களின் உயிரை பற்றி சிந்திக்காமல் மருத்துவம் பார்த்தது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×