என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    திருமங்கலம் அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

    • மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பேரையூரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 24). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த முத்துகிருஷ்ணன் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

    திருமங்கலம் அருகே ஆலம்பட்டி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தடுமாறி கீழே விழுந்த முத்துகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லூரி மாணவரின் உடலை கைப்பற்றினர்.

    பின்பு மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நான்கு வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே சாலைகளை மறித்து பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பலவற்றில் மிளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களுக்கு பேரிகார்ட்டுகள் இருப்பது தெரிவதில்லை.

    இதனால் அதில் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. சில சமயங்களில் உயிர்பலியும் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளில் மிளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×