என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் சுகாதார பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சரண்ராஜ்.
    • சரண்ராஜ் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரையில் மாநகராட்சி சுகாதார ஊழியர் மர்மநபர்களால் நள்ளிரவில் கடத்தப்பட்டதையடுத்து அவரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் சுகாதார பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சரண்ராஜ் (45). இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அனைத்து இடங்களிலும் தேடினர். சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் அந்த கும்பல் அவரை எங்கு கடத்தி சென்றது? என்ற விவரம் தெரியவில்லை.

    இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கடத்தப்பட்ட சரண்ராஜை தீவிரமாக தேடி வருகிறார்கள். மாநகராட்சி ஊழியர் கடத்தலுக்கு காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையில் மாநகராட்சி ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • குலசேகரன் கோட்டை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா நடந்தது.
    • இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன் கோட்டையில் சிறுமலை ஓடைக்கரையில் 800 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 72 அடி உயர ராஜகோபுரம், விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரியபகவான், சந்திர பகவான் ஆகியவற்றிற்கும், மீனாட்சி- சுந்தரேசுவரர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பா பிஷேகத்திற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் உள்பட திருப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவத்தன்று அங்கு வந்த குமார், மனைவியுடன் தகராறு செய்து 2 மகன்களை யும் அழைத்து சென்று விட்டார்.

    மேலூர்

    மேலூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு ஹேமநாத் (வயது 11), கோகுல்நாத் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காயத்திரி 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அங்கு வந்த குமார், மனைவியுடன் தகராறு செய்து 2 மகன்களை யும் அழைத்து சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த காயத்திரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செயது கொண்டார்.

    இதுகுறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) முகைதீன் அப்துல்காதர், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன்களை பிரித்து கணவர் அழைத்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.
    • ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி, ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி ஆகியோர் வரவேற்றனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் திருப்பதி, டாக்டர் சரவணன், எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி, நகர இளைஞரணி கேபிள் மணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மேற்கு ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நக,ர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவர் அணி டாக்டர் கருப்பையா நன்றி கூறினார்.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி லோகோவில் தமிழிலும் பெயர் இருக்க வேண்டும்.
    • மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார்.

    மதுரை

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழியில் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

    இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு, நிறுவனக் குழு கூட்டங்களில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் வியாபாரிகள் சங்க பேரவையினர் மனு அளித்தனர்.
    • டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டலம் தலைவர் மைக்கேல் ராஜ், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் கூறியதாவது:-

    உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்க வேண்டும், கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வேண்டும். சுங்க கட்டணத்தை குறைப்பதுடன் அதை 2 மாதத்திற்குள் அகற்றா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவது, வாகன விதிமீறல் என்ற பெயரில் நடைபெறும் அத்துமீறலை தவிர்க்க வேண்டும்.

    மின்கட்டணம், பெட்ரோல், டீசல், கியாஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதில் சங்க நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், ஜெயக்குமார், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், தேனப்பன், கண்ணன், மரிய சுவீட் ராஜன், ஆனந்தன், சுருளிராஜன், பிச்சைபழம், சரவணன், கணேசன், வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தை அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றின் கரையில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    • வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.



    மதுரை வைகை ஆறு அருகில் இன்று திரளானோர் தர்ப்பணம் செய்தனர்.

     மதுரை

    தமிழகத்தில் இந்துக்கள் முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து காகத்திற்கு படைத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் முன்னோர்கள், மகாளய அமாவாசை அன்று வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, படையல் உணவுகள், தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே தை அமாவாசை அன்று நீர்நிலைகளில், முன்னோருக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, ஆசிகளை வழங்குவர் என்பது ஐதீகமாகும். மறைந்த முன்னோருக்கு சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி கோவில்களுக்கு சென்று வழிபட்டால் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையும், குடும்பத்துக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. யானைக்கல் தரைப்பாலம், திருமலைராயர் படித்துறை, பேச்சியம்மன் படித்துறை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி அதிகாலை முதல் தொடங்கியது.

    இதற்காக அந்தந்த பகுதிகளில் புரோகிதர்கள் தயாராக இருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர். மதுரை வைகை ஆற்றின் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பட்டது. அதன்பிறகு வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்தனர்.

    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒருவரும் சிக்கினார்.

    மதுரை

    செக்கானூரணி நேதாஜி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). இவர் மதுரை சுப்பிரமணியபுரம் மேயர் முத்துபாலம் அருகில் உள்ள டாஸ்மாக் அருகே பார் நடத்தி வருகிறார்.

    நேற்று இவர் வேளாண் பொறியியல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அவரை 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் பணம் பறித்து தப்பினர். இந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஜெய்ஹிந்துபுரம், ராமையா தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), ஜீவா நகர், வள்ளுவர் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (27) என்பது தெரிய வந்தது.

    சந்தோஷ்குமார் மீது செல்லூர், ஜெயஹிந்துபுரம், சுப்பிரமணியபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில்

    10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி மீது பாலமேடு, நாகமலை புதுக்கோட்டை, சோழ வந்தான், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி, சுப்பி ரமணியபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இதனை தொடர்ந்து பார் உரிமையாளர் கணேசனை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த மேற்கண்ட இருவரையும் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்தனர்.

    ஆயுதங்களுடன் வாலிபர் கைது

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நேற்று தேவர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒருவர் பதுங்கி இருந்தார். அவரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கொள்ளை அடிப்ப தற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த, ஜெய்ஹிந்த்புரம் பாலமுருகன் என்ற பஞ்சாயத்து பாலா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    • ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின.

    இந்நிலையில் 11, 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு மட்டுமே அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து 11ம் தேதியன்று நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு திரைப்படங்களை திரையிட்டுள்ளதாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாட்டின் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1955ன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    • பெரியார் பஸ் நிலையத்தில் செல்போன் திருடனை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரட்டி பிடித்தார்.
    • சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள்.

    மதுரை

    தேனி மாவட்டம் கூட லூரை சேர்ந்தவர் ராஜா (வயது 29). புரோட்டா மாஸ்டர். ராஜா தனது உறவினர் விஜயகுமார் என்பவருடன் நேற்று இரவு மதுரை வந்தார். அவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ராஜா முதல் பிளாட்பாரத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள். அதனை கண்ட ராஜா, திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இதனை கண்ட திடீர்நகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி திருடர்களை விரட்டிச்சென்றார்.

    அப்போது ஒருவன் தவறி கீழே விழுந்தான். அவனை லோகேஸ்வரி மடக்கி பிடித்தார். அவனிடம் இருந்து ராஜாவின் செல்போன் மீட்கப்பட்டது.

    விசாரணையில் செல்போனை திருடியவர் கேரள மாநிலம் கொட்டாளி கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் (வயது 38) என்பது தெரிய வந்தது. அவர் மதுரையில் கடந்த சில நாட்களாக தனது கூட்டாளி ஒருவருடன் தங்கி இருந்து திருட்டி ஈடுபட்டு வந்துள்ளார். தப்பி சென்ற அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்போன் திருடனை விரட்டி பிடித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பயணிகள் பாராட்டினர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 பெண்களுக்கு கருக்கலைப்பு, 11,830 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தகவல் அறியும் சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி, மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு நடந்துள்ளது? எத்தனை பேர் குடும் கட்டுப்பாடு செய்துள்ளனர்? எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? என்பது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக கேட்டிருந்தார்.

    இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் கூறப்பட்டிருப்பதா வது:-

    மதுரை அரசு மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் 4,312 பெண்க ளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 2022-ம் ஆண்டு மட்டும் அதிகமாக 1,413 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டுகளில் 11,830 பேர் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 3,216 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனையில் 60 ஆயிரத்து 717 குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களில் 1,015 குழந்தைகள் இரட்டை யர்கள். 21 ஆயிரத்து 685 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

    மொத்த பிரசவத்தில் 64 சதவீதம் சுகப்பிரசவம் ஆகும். பிரசவத்தின் போது 197 தாய்மார்கள் இறந்துள்ளனர். 2021-ம் ஆண்டில் 69 பேர் பிரச வத்தின் போது அதிகபட்ச மாக இறந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாதி யாக குறைந்து 30 பேர் மட்டுமே இறந்தனர். 1,258 குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்தன. 2021 -ம் ஆண்டு 325 குழந்தை கள் அதிகபட்ச மாக இறந் துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார் உதயநிதி என்று பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்றார்.

    மதுரை

    மதுரை ஜீவா நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடிய வில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது.தமிழகத்தில் யாராக இருந்தாலும் அரசியல் செய்ய எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தியே ஆக வேண்டும். நல்ல நல்ல கருத்துக்களை தன் திரைப்படம் மூலம் எடுத்து சொன்னவர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தார் என்று சொன்னால் கிராமத்தில் இப்போதும் கூட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    யாரும் நடிகர் விஜயோட வாரிசு என சொல்லி விடாதீர்கள். நாம் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசு. அரிதாரம் பூசியவன், நடிகன் என எம்.ஜி.ஆரை கேலி பேசினாலும் கேலி பேசியவர் குடும்பத்தையும் வாழ வைத்தார். அரசியலில் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெய லலிதா வும். கோட்டை பக்கமே உறவுகளை வரவிடாமல் செய்தவர்கள் அவர்கள். ஆனால் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்தியவர். மக்களை தான் தன் வாரிசுகளாக எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் நினைத்தனர்.

    ஜெயலலிதா போல உத்திரபிரதேச முதல்வர் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.

    ஜெயலலிதா மந்திரி சபையில் 3-வது, 6-வது இடத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டினார். பொய் மூட்டை களை சட்ட மன்றத்தி லும், பொதுக் கூட்டத்திலும் அவிழ்த்து விடுகிறார்கள் தி.மு.க.வினர்.

    தி.மு.க. அரசில் 35 பேர் அமைச்சர்களாக இருந்தாலும் 10-வது அமைச்சராக உதயநிதி உள்ளார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் அவர். நிதி அமைச்சர் கூட 27-வது இடத்தில் தான் இருக்கிறார்.என்மகனோ, உறவுகளோ கட்சிக்கும் ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என சொன்னவர் ஸ்டாலின். அதேபோல கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் என்று பேசியவர் உதயநிதி.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால் சந்தி சிரிக்கிறது.தமிழக மக்களை ஏமாற்றி, பொய், புரட்டை சொல்லி எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர் தி.மு.க. அமைச்சர்கள். இவர்கள் ஏமாற்றுவதை எங்கே போய் சொல்வது.

    தீராத விளையாட்டு பிள்ளை உதயநிதி எப்போது கையில் செங்கலை தூக்கி னாரோ அன்றில் இருந்தே செங்கல் விலையும் உயர்ந்து விட்டது. போதைப்பொருள் கடத்தல் மாநிலமாக தி.மு.க.வினர் தமிழகத்தை மாற்றிவிட்டார்கள்.

    மதுரையில் இப்போது 2 அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை.வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை நிகழ்த்தி சட்டமன்றத்தில் கரும்புள்ளி ஏற்படுத்திய தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் காலம் மிக விரைவில் வர உள்ளது.

    ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×