என் மலர்
மதுரை
- உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.
- மாவட்ட நிர்வாகத்தால் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துறை சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பல்வேறு துறைகள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிகளவில் பயனாளிகள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
எனவே பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர்சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாவட்ட திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) காளிதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- வரிச்சுமைகளை பல மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.
- தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.
மதுரை
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றினார்.
மதுரை இன்று வளர்ந்த மாவட்டமாக இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தான். அதை திறம்பட செய்து காட்டியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
நம்முடைய திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார் மு.க. ஸ்டாலின். மதுரையில் இருக்கும் இரு அமைச்சர்களும் எந்தவித திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதி யாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு ஊழியர்களின் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.
விடியல் ஆட்சி தருகிறேன் என சொல்லிவிட்டு ஸ்டாலின் விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.மின்சார கட்டணம், பால்விலை உயர்வு, சொத்துவரி என பல மடங்கு வரிகளை உயர்த்தி சாதனை படைத்துள்ளது தி.மு.க. அரசு.இதற்கு தக்க பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை: ஓட்டல்-பேக்கரிகளில் உணவு பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
- உணவுத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்ளவதில்லை.
மதுரை
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதுரை இடம் பிடித்துள்ளது. தென்மாவட்டங்களின் தலைநகர்போல் மதுரை கருதப்படுகிறது. தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மதுரைக்கு வந்து செல்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ராமேசுவரம் உள்பட பல்வேறு புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அங்கு சென்று தரிசனம் செய்ய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் செயல்பட்டு வரும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அரிசிக்கு ஜி.எஸ்.டி. விதித்த பின்னர் தங்கள் இஷ்டத்துக்கு அவர்களே நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். ஒரு இட்லி ரூ.10 முதல் 16 வரை விற்பனை செய்யப்படுகிறது. காபி, டீ வகைள் ரூ.14 வரை விற்கப்படுகிறது. சாப்பாடு ரூ.90 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் குடும்பத்துடன் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஓட்டல்களில் சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பார்சல் வாங்கி சென்றால் அதற்கும் தனி கட்டணம் வசூலிக்கின்றனர்.
பெரும்பாலானோர் சாலையோர கடை களுக்கு சென்று சாப்பிடுகின்றனர். அங்கு தரமற்ற அரிசி மற்றும் எண்ணையை பயன்படுத்தி சமைத்து கொடுகின்றனர். அங்கும் ஓட்டல்களுக்கு நிகராக விலை உள்ளது. வெளியூர் பயணிகளுக்கு ஒரு விலை கூறுகின்றனர்.
கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ஓட்டல்களில் விலை உயர்வு செய்வதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். அவர்கள் இஷ்டத்துக்கு விலையை நிர்ணயம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இதனால் பலர் பட்டினி கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. உணவுத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்ளவதில்லை.
இதேபோல் பேக்கரி மற்றும் சுவீட்ஸ் ஸ்டால்களிலும் அவ்வப்போது விலையை உயர்த்தி விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட பப்ஸ் தற்போது ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இனிப்பு வகைகள் கிலோ ரூ.ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் கிலோ ரூ.200 விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை பிரபல கடைகளில் ரூ.600-க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.
அபராதம்
இதற்கான அனுமதியை யார் கொடுத்தது என்பது தெரியவில்லை. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு ஓட்டல்களின் தரத்துக்கு ஏற்ப உணவுகளின் விலையை நிர்ணயம் செய்து அதன் அளவையும் அதிகரிக்க செய்து விலை பட்டியல் வைக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு விலை பட்டியல் வைக்காத ஓட்டல், பேக்கரி, சுவீட்ஸ் ஸ்டால் ஆகியவைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் உணவு பொருட்களின் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறும்போது, மதுரையில் சாதாரண ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. 3 நேரம் சாப்பிட வேண்டும் என்றால் ரூ.300 தேவைப்படுகிறது. இது கூலி தொழிலாளர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே இதில் உயர் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ஒரு மணி நேரம் யோகா செய்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலூர்
மேலூர் நாடார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயம் மற்றும் புதிய சோழன் அமைப்பு சார்பில் உடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் யோகா பயிலும் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் ஆனந்த பத்மாசனம் யோகா செய்து சாதனை படைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் தலைவர் ராஜா மகேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவயோகி சிவசண்முகம் குருஜி மற்றும் மேலூர் டாக்டர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், பொதுச்செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டல தலைவர் சுந்தர், மண்டல தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவண பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
- அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும்.
- சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
தமிழக கவர்னர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததில் இருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். மேலும் ஒரு பொறுப்பு கவர்னர் நியமிக்க இருப்பதாக தகவல் வருகின்றது.
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும். போட்டிபோட்டுகொண்டு காவடி தூக்குவது அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும் நல்லதல்ல. பா.ஜ.க. வளர்வது, அ.தி.மு.க.விற்கு நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல.
ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பிலான மதசார்பற்ற கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.
சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது. பீகாரில் இதுகுறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.
- 30-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.
- 31-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது.
தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பைபுல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிழாவில் தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில், பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வருகிற 30-ந்தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்.
முக்கிய நிகழ்ச்சியான வருகிற 31-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சர்வதேச சிலம்ப போட்டிக்கு திருமங்கலம் பள்ளி மாணவன் தேர்வானார்.
- சென்னையில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்டு கேரிகிப்ட்சன்சாம் 9 வயது பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் சியோன்நகரை சேர்ந்தவர்கள் ராஜசேகரன் -ரூபி. இவர்களது ஒரே மகன் கேரிகிப்ட்சன்சாம் (வயது10). இவர் திருமங்கலம் மறவன்குளத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவயது முதலே கேரிகிப்ட்சன்சாம்க்கு சிலம்பாட்டத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது தாய் மகனை சிலம்ப பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெற்ற கேரிகிப்ட்சன்சாம் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகளை படைத்து வருகிறார்.
இவர் திருச்செந்தூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டி யில் 9 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்டு கேரிகிப்ட்சன்சாம் 9 வயது பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் வரும் 28-ந் தேதி நடைபெறும் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்க மாணவர் கேரிகிப்ட்சன்சாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து மொத்தம் 8 பேர் தேர்வாகியுள்ள இந்த போட்டிக்கு மதுரை மாவட்டம் சார்பில் திருமங்கலம் மாணவர் கேரிகிப்ட்சன்சாம் மட்டுமே தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் இருந்து சக்தி பீடங்கள்-ஜோதிர்லிங்கம் கோவில்களுக்கு சுற்றுலா ெரயில்கள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை
ஆன்மீக திருத்தலங்க ளுக்கு அனைவரும் செல்லும் வகையில் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சக்தி பீட சுற்றுலா ெரயில் மதுரையில் 2இருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி 9-ந்தேதி இந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்படுகிறது.
12-ந்தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி தரிசனம், கங்கையில் புனித நீராடி விசாலாட்சி அம்மன் தரிசனம், கயா வில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து மங்கள பவுரி தேவி தரிசனம், காமாக்யா தேவி தரிசனம், கொல்கத்தா காளி தரிசனம், காளிகாட், போளூர் மடம், தஷிணேஸ்வரர் தரிசனம்.
ஒடிசா கொனார்க் சூரிய கோவில், பூரி ஜெகநாதர் மற்றும் பிமலா தேவி தரிசனம் முடித்து சுற்றுலா ரெயில் 21-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.
நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.21 ஆயிரத்து 500 ஆகும். இந்த சுற்றுலா ெரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு www.ularail.com என்ற இணையதளத்திலும் அல்லது 73058 58585 என்ற அலைபேசி எண் மூலமும் செய்து கொள்ளலாம்.
இதேபோல் மாசி மகத்தை முன்னிட்டு ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ெரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து மார்ச் 3-ந்தேதி புறப்படும் சுற்றுலா ரெயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக 5-ந்தேதி உஜ்ஜைனி சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு. பின்பு 6-ந்தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், 7-ந்தேதி சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், 9-ந்தேதி நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, 10-ந்தேதி பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், 11-ந் தேதி அவுரங்காபாத் குருஸ் ணேஸ்வரர் தரிசனம், 12-ந்தேதி அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், 13-ந்தேதி பார்லி வைத்தியநாதர் தரிசனம், 14-ந்தேதி ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் செய்து விட்டு சுற்றுலா ெரயில் 15-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.ெரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் பஸ் கட்டணம் உள்பட நபர் ஒருவருக்கு ரூ.23 ஆயிரத்து 400 கட்டணம் ஆகும்.
இந்த கட்டணத்துடன் குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு கூடுதலாக கட்டணம் ரூ,7 ஆயிரத்து 100 செலுத்த வேண்டும்.
இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
- வீட்டு வரி செலுத்தியவர்களிடம் மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
- இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.
மதுரை
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் லட்சுமி சந்திரசேகர். இவர் இப்பகுதி வாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வழங்கி வருவதுடன் தொலைநோக்கு சிந்தனையுடன் பல திட்டங்க ளையும் இப்பகுதிகளில் நிறைவேற்றி யுள்ளார்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தங்களது சொந்த செல வில் ஆசிரியர்களை தேர்வு செய்து வீடுகளில் முடங்கி கிடக்கும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் மாணவ- மாணவி களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கி தந்தும் ஆசிரியர்களுக்கு தங்களது சொந்த செலவில் சம்பளம் வழங்கியும் சேவை செய்திருந்தார்.
எனவே இதுபோன்று தொலைநோக்கு சிந்தனை யுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் சாதனைகளை செய்து வந்த லட்சுமி சந்திரசேகர் சமீபத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியினை அரசு உத்தரவு பணி செயல்படுத்தினார். அப்போது அரசு நிர்ணயித்த தொகை ரூ.20 லட்சம் போக தனது சொந்த பணம் ரூ.13 லட்சத்தை அலுவலகத்துக்கு செலவு செய்து அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர் லட்சுமி சந்திரசேகர் ஊராட்சியில் வீட்டு வரி, தொழில்வரி, குழாய் வரி போன்ற வரிகளை வசூலிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும், சில வீடுகளில் கணவன்-மனைவி இருவரும் அரசு மற்றும் தனியார் வேலை களில் உள்ளதால் வேலை நாட்களில் ஊராட்சி பணியாளர்கள் வரி வசூலிக்க முடியவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்த நினைத்தாலும் அவர்களாலும் வரி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
இது போன்று வரிப்பாக்கிகளை வசூலிக்க ஒரு அருமையான வழி உள்ளது. அரசு தற்போது வீட்டு வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் என்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வீட்டு வரி, குழாய் வரி ஏன் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் பாதாள சாக்கடை வரி மற்றும் வருமான வரி போன்றவைகளை பாக்கி வைத்துள்ளனர். ஆனால் யாரேனும் மின்சார வரியை பாக்கி வைத்திருக்கி றார்களா? என்றால் இல்லை.
எனவே மக்களுக்கு அவசியம் தேவைப்படுவதி னால் மின்சார வரியை மட்டும் சரியாக செலுத்துகிறார்கள் என்ப தால் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வீட்டு வரிகளே செலுத்திய நபர்களுக்கு தான் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்படி வீட்டு வரி உள்ளிட்ட பிற வரிகளை செலுத்தாத நபர்களுக்கு மின் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
மின் கட்டணம் செலுத்த வில்லை என்றால் மின்சாரம் தடைபடும் என்பதால் மக்கள் வீட்டு வரி உள்ளிட்ட பல வரி களை சரியாக செலுத்தி விடுவார்கள். இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடியரசு தின விடுமுறையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடங்கியது.
மதுரை
குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் -நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053) தாம்பரத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி -ந்தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (06054) வருகிற 29 -ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி இணைக்கப்படும்.
தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து வருகிற 26 -ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) திருநெல்வேலியில் இருந்து வருகிற 27-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி இணைக்கப்படும்.
இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடங்கியது.
- மதுரை தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதி பொது மக்கள் குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும் அந்தந்த மண்டல அலுவ லகங்களில் உதவி ஆணையா ளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற 24-ந் தேதி(செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளான செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்று கொத்தடிமையாக இருக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என மதுரை திரும்பிய பெண் பேட்டியில் தெரிவித்தார்.
- அவர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
திருப்பரங்குன்றம்
மதுரையைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக மஸ்கட் சென்றார். அங்கு அவரை கொத்தடிமையாக்கி துன்புறுத்தி வேலை வாங்கி உள்ளனர். மேலும் உண்பதற்கும், உறங்கு வதற்கும் அனுமதிக்காமல் கொடுமைப் படுத்தியுள்ள னர்.
இதனால் வேதனை அடைந்த அவர், தன்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி சம்பந்தப்பட்ட ஏஜென்டிடம் கூறியுள்ளார்.அதற்கு அவர், ரூ.3 லட்சம் தந்தால் தான் திருப்பி அனுப்ப முடியும் எனக்கூறி அந்த பெண்ணை ஓமன் நாட்டிற்கு மற்றொரு வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை யில் உள்ள ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர் சசிகலா என்பவர் மூலம் நாகலட்சுமி தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நாகலட்சுமியை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
அதனால் மீட்கப்பட்ட அவர் சொந்த ஊர் திரும்பினார். அவர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
நாகலட்சுமி கூறும்போது, தன்னைபோல் பலர் வெளிநாட்டு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டு ஓமன் நாட்டின் கொத்த டிமைகளாக இருந்து வருகின்றனர். இதில் பலர் உதவி கிடைக்காததால் தற்கொலை செய்துள்ளனர். மேலும் பலர் உணவு, உடையின்றி தெருவில் ஆதரவின்றி திரிகின்றனர். அவர்களையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்றார்.






