என் மலர்
உள்ளூர் செய்திகள்

இன்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று தர்ப்பணம் செய்த பக்தர்கள்.
தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தர்ப்பணம்
- தை அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றின் கரையில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
- வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.
மதுரை வைகை ஆறு அருகில் இன்று திரளானோர் தர்ப்பணம் செய்தனர்.
மதுரை
தமிழகத்தில் இந்துக்கள் முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து காகத்திற்கு படைத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் முன்னோர்கள், மகாளய அமாவாசை அன்று வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, படையல் உணவுகள், தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே தை அமாவாசை அன்று நீர்நிலைகளில், முன்னோருக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, ஆசிகளை வழங்குவர் என்பது ஐதீகமாகும். மறைந்த முன்னோருக்கு சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி கோவில்களுக்கு சென்று வழிபட்டால் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையும், குடும்பத்துக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. யானைக்கல் தரைப்பாலம், திருமலைராயர் படித்துறை, பேச்சியம்மன் படித்துறை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி அதிகாலை முதல் தொடங்கியது.
இதற்காக அந்தந்த பகுதிகளில் புரோகிதர்கள் தயாராக இருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர். மதுரை வைகை ஆற்றின் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பட்டது. அதன்பிறகு வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்தனர்.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.






