என் மலர்
மதுரை
- 18-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது.
- இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை.
திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பழமையான தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் கிடாவெட்டுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், பால்குடம், பறவை காவடி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ஆனால் தனி லிங்கபெருமாளுக்கு பக்தர்கள் நாடகங்கள் நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது விசேஷம். நாடகங்கள் நடத்துவதற்காகவே கோவில் வளாகத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நேர்த்திக்காக நடத்தக்கூடிய நாடகங்களை வலையங்குளம் கிராம மக்கள் மட்டுமல்லாது சோளங்குருணி, கொம்பாடி உலகாணி நல்லூர், எலியார்பத்தி, பாரப்பத்தி உள்பட பல கிராம மக்கள் கண்டுரசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 30 முதல் 70 நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நேர்த்திக்கான நாடகங்கள் நடத்த கோவிலில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வகையில் இந்த ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நாடகங்கள் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பினும் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதால் 32 நாடங்கள் நடத்துவது என்று ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வழக்கம்போல வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை. கோவில் வாசல் முன்பு நின்று பெண்பக்தர்கள் வழிபடுகின்றனர். பெண் பக்தர்கள் வாசலை தவிர்த்து கோவிலுக்குள் செல்லாதது இந்த கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.
- நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
- மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.
மதுரை:
மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.
மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.
மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.
நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
- சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் வழிபாடு நடைபெறும் என்பதால் பக்தர்கள் மலையில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- வனத்துறையும், கோவில் நிர்வாகமும் சிவராத்திரி நாளில் பக்தர்கள் சதுரகிரி மலையில் தங்க சிறப்பு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளன.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் பேரையூர் அருகே சதுரகிரி மலையில் வனப்பகுதியில் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த கோவிலுக்கு செல்ல பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசை ஆகியவற்றை முன்னிட்டு வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் வழிபாடு நடைபெறும் என்பதால் பக்தர்கள் மலையில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று வனத்துறையும், கோவில் நிர்வாகமும் சிவராத்திரி நாளில் பக்தர்கள் சதுரகிரி மலையில் தங்க சிறப்பு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளன. இதனால் சிவராத்திரிக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- மதுரை ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை
மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு விமான நிலையத்தில் உள்ள வசதிகளுக்கு இணையாக உலக தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கு வசதியாக தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் தற்காலிக பணியிட அலுவலகம், ஒப்பந்ததாரர் அலுவலகம், திட்ட மேலாண்மை அலுவலகம் ஆகியவை தொடங்கப்பட்டு உள்ளன.
ரெயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னொரு புறம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தை வேறு பகுதிக்கு மாற்றும் வேலைகள் தொடங்கி உள்ளன.
மதுரை ரெயில் நிலைய கிழக்கு- மேற்கு நுழைவு வாயிலில் இரு முனையங்கள், 3 அடுக்கு வாகன காப்பகங்கள், கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைத்து ரெயில் பாதை மேல் காத்திருப்பு அரங்கு ஆகியவற்றுக்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.
மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை ரெயில் பாதையில் 2-வது வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இது மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை ஆகும்.
இங்கு தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா சிறப்பு ரெயில் மூலம் குழுவுடன் சென்று மின்மய பாதைகளை ஆய்வு செய்தார். அப்போது வழியில் உள்ள பாலங்கள், ரெயில்வே கேட்டுகள் ஆகியவற்றில் மின்சார வழங்கல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மின்தடம் பற்றிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதா? அங்கு பணியாற்றும் ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் உரிய பயிற்சி எடுத்து உள்ளனரா? என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய மின் தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது. அப்போது முதன்மை மின் வழங்கல் துறை பொறியாளர் சுந்தரேசன், ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, மின்துறை மேலாளர் ராமநாதன், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோரும் ரெயிலில் பயணம் செய்தனர்.
மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு விட்டன. எனவே அங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்று ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
கரும்பாலை எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த ரங்கநாதன் மகன் மகேஸ்வரன் (30).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.
இந்த நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ மனைவிக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.மனமுடைந்த மகேசுவரன் வீட்டில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாயார் சிவகாமி கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தினர்.
மேல பொன்னகரம் 5-வது தெருவை சேர்ந்தவர் விக்டர் பால்ராஜ்(70). இவர் தத்தனேரி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு சைக்கிளில் சென்றபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மகன் பிராங்கிளின் டேவிட் ஜெபராஜ் கொடுத்த புகாரின்பேரில் செல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து மு விசாரணை நடத்தினர்.
தத்தனேரி களத்துப்பொட்டல் பர்மா காலனியை சேர்ந்தவர் செல்லதுரை(51). டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கொன்னவாயன் சாலையில் சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வைகை வடகரை ஆர்.ஆர்.மண்டபம் மேளக்கார தெருவை சேர்ந்த முத்துமணி மகன் யோகேசுவரன் (14). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிறுவன் யோகேசுவரன் பரிதாபமாக உயிரிழந்தான். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மதுரை:
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை வருகிறார். கோவையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி அன்று காலை 11.30 மணிக்கு மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் பலத்த பாதுகாப்புடன் ரிங்ரோடு, தெப்பக்குளம் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடையும் ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களாக மதுரையில் உள்ள தங்கும் விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் முன்பகுதியில் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று மதியம் மதுரை வந்தனர். அவர்கள் 3 நாட்கள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மதுரை ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன், மாநகர் காவல் துணை ஆணையாளர் சாய் பிரனீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சுவாமிநாதன், வருவாய்த்துறை சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்ட அலுவலர் கோட்டைச்சாமி, சுகாதார துறை சார்பில் மண்டல இணை இயக்குநர் அர்ஜூன்குமார், மருத்துவ அலுவர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நகைகள் திருட்டு போனதா? என்பதை கண்டுபிடிக்கும் வகையில் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற திருச்சி தர்கா காலனியை சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் அப்துல் பயாசை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மேலமாசி வீதியில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 13-ந்தேதி அந்த கடையில் இருப்பில் உள்ள நகைகளை மேலாளர் கார்த்திக் சரிபார்த்தபோது 10 பவுன் நகை குறைவாக இருந்தது.
இதனால் அந்த நகைகள் திருட்டு போனதா? என்பதை கண்டுபிடிக்கும் வகையில் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தார். அதில், கீழ்த்தளத்தில் உள்ள செயின் கவுண்டரில் இருந்த 80 கிராம் எடையுள்ள தங்க செயினை கடையில் வேலை பார்த்த அப்துல் பயாஸ் என்பவர் எடுத்துச்சென்றது பதிவாகி இருந்தது.
அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த திருட்டு குறித்து கடை மேலாளர் கார்த்திக் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற திருச்சி தர்கா காலனியை சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் அப்துல் பயாசை கைது செய்தனர்.
மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அப்துல் பயாசின் தோழியான கோவையை சேர்ந்த திவ்யா(வயது29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
- கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் அருண் பெரியசாமி பொறுப்பேற்றார்.
- இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரக்குண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் பெரியசாமி. இவரது மகன் தொழிலதிபர் அருண்ராஜா. இவர் இந்திய-ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சிலில் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஐ.இ.டி.ஒ., என்.ஆர்.ஐ. கவுன்சில் அவார்ட்ஸ், ஜி.ஐ.ஒ. மாநாட்டில் இந்திய- கானா வர்த்தக ஆணையராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று கானா துணை தூதர் குவக் ஆஸ்மாக் செர்மேக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கானாவில் உள்ள அக்ராவில் உலக தினை தினம் கொண்டாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரைவுப்படுத்த வர்த்தக ஆணையர் அருண் ராஜா பெரியசாமி மதுரையில் உள்ள மீனாட்சி கிரானைட் குழும இயக்குநர் மற்றும் வணிக மற்றும் கல்வி துறையின் பல்வேறு பங்குதாரர்கள், கானா வேளாண்மை துணை அமைச்சர் யாவ் பிரிம்பாங் அடோ மற்றும் கானாவுக்கான இந்திய உயர் ஆணையர் சுகந்த் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டனர்.
வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் பெரியசாமி கூறியதாவது:-
மதுரையில் இந்திய- கானா அலுவலக திறப்பு விழா மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகம் இரு நாட்டுக்கும் வர்த்தக பாலமாக இயங்கும். இதன் மூலம் தொழில் வளத்தை உயர்த்த பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலமேடு அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் நடத்தினர்.
- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி-ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த வழியாக குவாரி களுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் புழுதி பரவி காற்று மாசு ஏற்படுகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
ழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமான சாலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வாகனங்கள் செல்லும்போது வீடுகளுக்குள் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க தினமும் சாலையில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த புழுதி காரணமாக குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று 2-வது கட்டமாக போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி தெரியவந்ததும், பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- மேலூர் அல் அமீன் உருது தமிழ் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தாளாளர் தொடங்கி வைத்தார்.
- பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார்.
மேலூர்
மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். தாளாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது கட்டிடத்தை திறந்து வைத்தார். ஸ்மார்ட் வகுப்பு காணொலி காட்சியை முன்னாள் மாணவர் மனோஜ்குமார் தொடங்கி வைத்து பேசினார். தலைமை ஆசிரியர் சலீம் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஜபார், ராஜா முகமது, காஜாமைதீன், சித்திக் ராஜா, பிலால்முகமது, ராஜாமுகமது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நூர்ஜகான் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் அப்துல்ரஹ்மான் நன்றி கூறினார். மேலூர் தாலுகா அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேலூர் அல் அமீன் பள்ளியில் முதன்முதலாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கட்டிட தொழிலாளியான ஜெயராம் மோட்டார் சைக்கிளில் மதிப்பனூர்-மேட்டுப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- ரோட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
திருமங்கலம்:
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் ஜெயசூர்யா(வயது19). இவர் பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று மாலை ஜெயசூர்யா திருமங்கலத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். கப்பலூர் மேம்பாலத்தில் இருந்து வலதுபக்கம் திரும்பியபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசூர்யா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாணவனின் தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர் அருகே உள்ள சின்னாரெட்டிபட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(29). கட்டிட தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் மதிப்பனூர்-மேட்டுப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த குருசாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மார்த்தாண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.
- களியக்காவிளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
குழித்துறை:
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஓட்டல் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே கட்டமாக சோதனை நடத்தினர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திரன். இவருக்கு ஏராளமான கல் குவாரிகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
மேலும் மார்த்தாண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.
தொழில் அதிபர் ராஜேந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுபோல களியக்காவிளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதுபோல நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருந்து நிறுவனத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






