என் மலர்tooltip icon

    மதுரை

    • மெட்ரோ ரெயில் சேவையை விரைந்து கொண்டுவரும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஏதுவாக, தமிழக அரசு இ-டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விடுத்துள்ள ஒப்பந்த புள்ளியின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நகரம் மதுரை ஆகும். இது தூங்கா நகரம் என்ற பெருமையை உடையது. 148 கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நகரத்தில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பெரும்பாலானோர் வீடுகளில் இருசக்கர- நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர்.

    எனவே மதுரை மாநகர சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. எனவே மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட் நிதி நிலை அறிக்கையில், மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயில் சேவையை விரைந்து கொண்டுவரும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஏதுவாக, தமிழக அரசு இ-டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விடுத்துள்ள அந்த ஒப்பந்த புள்ளியின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, மதுரையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்கால தேவை, மாற்றுத்திட்டங்கள், திட்டப்பாதை, திருப்பங்கள், பயணிகள் எண்ணிக்கை, பயணத்திட்டம், நேரம், பயணக்கட்டணம், ரெயில் நிலையங்கள், தேவையான நிலப்பரப்பு, எந்த வகை நிதியின் கீழ் மேற்கண்ட திட்டத்தை நிறைவேற்றுவது? ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் மேற்கண்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    இதுதவிர மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் போது திருப்புவனம், மேலூர் ஆகிய பகுதிகளை இணைத்து விரிவாக்கம் செய்யும் வகையிலும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தென்னக ரெயில்வேக்கு பங்கு எதுவும் இல்லை. இருந்த போதிலும் மதுரை கோட்ட ரெயில்வே கட்டுமான பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருமங்கலம்-ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ. தூரத்தில் மெட்ரோ ரெயில் சேவை அமைய உள்ளது. இதில் மொத்தம் 20 நிறுத்தங்கள் அமைகிறது. இரு வழித்தடங்களில் ரெயில் பாதை அமைக்கப்படும்.

    அதன்படி மாட்டுத்தாவணியில் தொடங்கும் ஒரு வழித்தடம் கே.கே.நகர், அண்ணா நகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்குவாசல், பெரியார் நிலையம், அரசரடி, காளவாசல், பாத்திமா கல்லூரி, தபால் தந்தி நகர், பார்க் டவுன் வரை செல்லும்.

    மற்றொரு வழித்தடம் கோரிப்பாளையத்தில் தொடங்கி செல்லூர், மதுரா கல்லூரி, பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர் (எய்ம்ஸ்), திருமங்கலம் வரை செல்லும்.

    மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட இருப்புப் பாதை அமைத்து இதன் வழியாக 3 பெட்டிகளுடன் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரெயிலின் குறைந்தபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. அதிகபட்ச வேகம் 60 கி.மீ. என்ற அளவில் இருக்கும்.

    மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி வருகிறது. அதன் பிறகு தான் மதுரையில் மெட்ரோ ரெயிலுக்கு எத்தனை நிறுத்தங்கள் அமையும்? என்பது உறுதி செய்யப்படும். மெட்ரோ ரெயில் திட்டம் பாதுகாப்பானது. நம்பகத்தன்மை மிகுந்தது. சென்னையில் 54 கி.மீ. தூரம் வரை மெட்ரோ ரெயில் இயங்கி வருகிறது.

    அங்குள்ள ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் பெயரளவுக்கு மட்டுமே டிரைவர்கள் இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் ஜி.பி.எஸ். மூலமாகவே, ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் வந்தால் கூலி வேலை பார்க்கும் சாமானிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை பலருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.

    மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறம் மட்டுமின்றி திருமங்கலம், மேலூர், பெருங்குடி, உசிலம்பட்டி ஆகிய புறநகர் பகுதிகளிலும் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு சிறு-குறு தொழில் செய்யும் வணிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் தொழில் நிமித்தமாக தினமும் அண்டை மாவட்டங்களுக்கு சென்று வர வேண்டி உள்ளது.

    எனவே விருதுநகர், சிவகங்கை ஆகிய அண்டை மாவட்டங்களை இணைக்கும் வகையில், தொலைநோக்கு அம்சங்களுடன் சுமார் 50 கி.மீ. சுற்றளவிற்கு மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் தொழில் வளம் பெருகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதோடு விட்டு விடாமல் ஆக்கப்பூர்வமாக உடனடியாக செயல்படுத்தப் பட வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • குடிபோதையில் ராசாத்தி வீட்டுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து பவுல்ராஜை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அணைக்கரைபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராசாத்தி (வயது 42). ராஜேந்திரன் கூலித்தொழிலாளி ஆவார். அவர் தனது குடும்பத்துடன் தகரக்கொட்டகை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ராசாத்தி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது மதிய நேரத்தில் அவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராசாத்தி தனது வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து கிடந்தன. மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 500, 200, 100 ரூபாய் என ரூ.2 லட்சம் பண நோட்டுகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள ஆவணங்கள் தீயில் எரிந்துவிட்டது.தன்னுடைய வீட்டுக்கு யாரோ தீவைத்து விட்டதாக சாப்டூர் போலீசில் ராசாத்தி புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அணைக்கரைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பவுல்ராஜ் (வயது 45) என்பவர் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் பவுல்ராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது குடிபோதையில் ராசாத்தி வீட்டுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து பவுல்ராஜை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மானூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிமாயன். விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பில் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.

    உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். ஆனால் வைக்கோல் படப்பு முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஏழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைக்கோல் படப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது விபத்தா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சக்கிமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்மேடு பகுதியில் எம்.ஜி.ஆர் நகர், பி.டி.ஆர். நகர், நரிக்குறவர் காலனி, அன்னை இந்திரா நகர், சத்யா நகர், அம்பேத்கர் நகர், அஞ்சுகம் நகர் ஆகியவை உள்ளன. இங்கு 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அம்பேத்கர் நகர் முதல் அஞ்சுகம் நகர் வரை தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. போக்குவரத்து சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.

    எனவே அம்பேத்கர் நகருக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஆகியவை வருவதில்லை. அம்பேத்கர் நகரில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி. நிதியில் தார்ச்சாலை போடப்பட்டது. அதன்பிறகு அங்கு எந்தவித பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. கல்மேட்டில் உள்ள சிலைமான் புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளது. 4 ரோடு சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

    அம்பேத்கர் நகரில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும், வணிக வளாகம் கட்டிடம் மற்றும் புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் காய்கறி-சிறு தானியங்கள் பயிரிட வேண்டும்.
    • கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கலந்துகொண்டு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 744 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் மூலம் நெற்பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறி களுக்கும் முக்கியத்துவம் வழங்கி பயிரிட வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

    பெண்களும், இளை ஞர்களும் வேலை வேண்டி விண்ணப்பித்து வருகின்ற னர். இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திகழ வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு தொழில் புரிவதற்கு முதலாவதாக மனநிலை தேவை, இரண்டாவது தொழில்சார்ந்த தெளிவான சிந்தனை வேண்டும்.

    மேலும் அத்தொழில் புரிவதற்கு உண்டான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொழில் புரிவதற்கு உண்டான மனநிலை மட்டும் இருந்தால் போதும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக உதவித்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, கீழையூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஷீலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ரவுடி கொலையில் மது போதையில் நண்பர்கள் பீர் பாட்டிலால் குத்திக்கொன்றது அம்பலமானது.
    • இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உலகனேரி செங்குன்றம் நகர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற டோரா பாலா (வயது 29). இவர் மீது புதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் டோரா பாலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலாவின் வயிற்றில் பாட்டிலால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டது உறுதி யானது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டோரா பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் வினோத் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது டோரா பாலா, வினோத்தின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து வினோத் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சமரசமாக சென்று விடலாம் என கூறி சம்பவத்தன்று இரவு டோரா பாலாவை மது குடிக்க அழைத்து உள்ளனர். வளர்நகர் பகுதியில் டோரா பாலா, வினோத் மற்றும் நண்பர்கள் ஜெகதீஸ்வரன், மேலூர் மாரி, புலி என்ற விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகிய 6 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் டோரா பாலா, வினோத்திடம் தகராறு செய்து அவரது தாயை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வினோத், ஜெகதீஸ்வரன் உள்பட 5 பேர் பீர் பாட்டிலால் டோரா பாலாவை குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட வினோத் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே வல்லடிகாரர் கோவில் திருவிழா தேரோட்டம் நடந்தது.
    • வருகிற மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இதை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனை இந்த பகுதி மக்கள் வெள்ளலூர் நாடு என்று அழைப்பார்கள். வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டியில் வல்லடிகாரர் சுவாமி கோவில் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி பழமை மாறாமல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்காக வெள்ளலூர் கோவில் முன்பு கிராம அம்பலக்காரர்கள், இளங்கச்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி கடந்த 17-ந் தேதி நாள் குறித்தனர்.

    அதன்படி வருகிற மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. 3-ந்தேதி(வெள்ளிக்கிழமை) கோவில் திருவிழாவும், 4-ந்தேதி (சனிக்கிழமை) தேரோட்டமும், 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருவிழாவிற்காக நாள் குறித்த தினத்தில் இருந்து 15 நாட்கள் விரதம் தொடங்கினர்.

    குறிப்பாக சமையலுக்கு தாளிப்பது, மாமிசம் சமைப்பது, மரம் வெட்டுவது, கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது உட்பட எதனையும் செய்யாமல் கடும் விரதம் இருக்கின்றனர். இந்த திருவிழா பழமை மாறாமல் நடைபெறுவது இதன் சிறப்பம்சமாகும்.

    • ஓ.பி.எஸ்.- டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அ.தி.மு.க.விற்கு வந்து விட்டார்கள்.
    • ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.

    மதுரை:

    மதுரையில் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. வலிமையான இயக்கம். இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களின் விருப்பத்தை தீர்ப்பு உணர்த்தி உள்ளது. இனிமேல் தமிழகத்தில் அ.தி.மு.க. எழுச்சியோடு பணியாற்றும்.

    ஓ.பி.எஸ்.- டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அ.தி.மு.க.விற்கு வந்து விட்டார்கள். சிலர் தீர்ப்புக்காக காத்திருந்தார்கள். இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இனி மீதம் உள்ளவர்களும் எங்களிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்.

    தற்போது எங்களது நோக்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதே ஆகும்.

    இதற்காக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்போம். ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதன் காரணமாகத்தான் வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண், சிறுமி என்பது தெரிய வந்தது.
    • சிவகுமார் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை ஆலங்கொட்டாரம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 27). இவர் சோழவந்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இது பெற்றோருக்கு தெரிய வந்தது. எனவே இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இதனை தொடர்ந்து சிவகுமார் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதனை தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் பிரசவத்துக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அப்போது பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண், சிறுமி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வாடிப்பட்டி சமூக நல அலுவலர் வீரலட்சுமி, சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் கணவர் சிவகுமார், அவரது தந்தை பூமிநாதன், தாய் பூஞ்சோலை, சிறுமியின் தாய் பாண்டிமீனா ஆகிய 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் சிவகுமார் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

    • கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.



    மதுரை கீழவாசல் தூய மரியன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு பாதிரியார் சிலுவை அடையாளமிட்ட காட்சி

     மதுரை

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால நோன்பை கடைப் பிடித்து சிறப்பு பிரார்த்த னையில் ஈடுபடுவது வழக்கம்.

    இதற்கான தொடக்க நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புதன் அன்று தவக்காலத்தில் தொடக்கம் என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது.

    மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங் களிலும் சாம்பல் புதன் தினமான இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்றன. மதுரை நரிமேடு, கீழவாசல் அண்ணா நகர் புதூர் பசுமலை காளவாசல், கோச்சடை, கூடல் நகர், தெப்பக்குளம், வில்லாபுரம், தெற்கு வாசல், மேலவாசல் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    கத்தோலிக்க ஆலய ங்களில் சிறப்பு திருப்பலி கள் இன்று காலை நடத்தப் பட்டன. சி.எஸ்.ஐ தேவா லயங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு தவக்காலத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 40 நாட்கள் உபவாசம் இருந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் ஈடுபடு கிறார்கள்.

    இதையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி அனுஷ்டிக்கப் படுகிறது. அன்றைய தினமும் நாள் முழுக்க நோன்பை கடைபிடித்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள்.இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்தவர்கள் குருத் தோலை களை கையில் பிடித்தப்படி பேரணியாக சென்று ஓசன்னா பாடல் களை பாடுவார்கள்.இதனைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.

    பின்னர் 3-ம் நாள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதம் 9- தேதி உயிர்ப்பின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராள மான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார் த்தனை செய்கிறார்கள். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.


    • லட்சுமி தீர்த்த குளத்தை ரூ.6.50 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • விரைவில் கும்பாபிஷேக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் மற்றும் கிரிவலம் பாதையை சுற்றிலும் லட்சுமி தீர்த்த குளம், சன்னியாசி கிணறு, சரவணப்பொய்கை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புனித தீர்த்த குளங்கள் மற்றும் கிணறுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மறைந்துவிட்ட நிலையில் தற்போது கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்தம், சன்னியாசி கிணறு, சரவணப் பொய்கை உள்ளிட்டவை இன்றளவும் மக்களால் புனித தீர்த்தமாக போற்றப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இங்கு வந்து இந்த புனித தீர்த்தங்களை பக்தர்கள் எடுத்துச் சென்று கும்பாபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதே போல கோவில் வளாகத்தில் அமைந்துள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இங்கு உள்ள மீன்கள் மச்ச முனிவரின் அவதாரமாக கருதப்படுகிறது. அதனால் பக்தர்கள் தங்கள் நோய் நொடிகள் தீர்வதற்காக கோவில் வளாகத்தில் அமைந்துள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு லட்சுமி தீர்த்த குளத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து 2019-2020-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழ தொடங்கின. இதனால் தீர்த்த குளத்தில் நிரம்பி இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    தொடர்ந்து குளத்தை சீரமைப்பதற்காக தற்போது வரை குளத்தில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை. அதனால் பக்தர்கள் இந்த குளம் பக்கம் செல்லவும் அனுமதி இல்லை.

    இந்த நிலையில் பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக லட்சுமி தீர்த்த குளத்தை சரி செய்து மீண்டும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் திருப்பரங்குன்றம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான லட்சுமி தீர்த்தக்குளம் சீர் செய்தல், சஷ்டி மண்டபம் அமைத்தல், வாகன காப்பகம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் லட்சுமி தீர்த்த குளம் ரூ.6.50 கோடியில் சீரமைக்க கோவில் நிர்வாகம் திட்ட மதிப்பீடு செய்தது.

    பின்னர் அதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்திற்கு ஒப்பு தலுக்காக அனுப்பி வைத்தது. அதற்கு இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால் தொழில்நுட்ப பிரிவு இன்னும் அனுமதி வழங்கவில்லை. விரைவில் அதற்கான அனுமதி பெறப்பட்டு லட்சுமி தீர்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடங்கும் என கோவில் நிர்வாகம் தெரி வித்துள்ளது. திருப்பரங் குன்றம் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷே கம் நடைபெற்ற நிலையில் விரைவில் கும்பாபிஷேக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    • 50 ஜோடி ஏழை-எளிய மணமக்களுடன் தனது மகள் திருமணத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்துகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி நாளை நடத்தி வைக்கிறார்

    மதுரை

    50 ஏழை எளிய திருமண ஜோடியுடன் தனது மகள் திருமணத்தையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நாளை நடத்துகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    தமிழக அமைச்சரவையில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றியவர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இவர், அ.தி.மு.க.வின் மாணவர் அணி, எம் .ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர்-இளம்பெண் பாசறை, அம்மா பேரவை உள்ளிட்ட அணிகளின் தலைமை பொறுப்பை வகித்து ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்.

    தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், திரு மங்கலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கட்சி பொறுப்பில் அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்து வருகிறார்.

    அமைச்சராக இருந்தபோது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் கடந்த 2016-ம் ஆண்டு 80 ஜோடிகளுக்கும், 2018-ம் ஆண்டு 120 ஜோடிகளுக்கும் ஏராளமான சீர்வரிசைகளுடன் ஜெயலலிதா தலைமையில் திருமணத்தை நடத்தி காட்டியவர் உதயகுமார் எம்.எல்.ஏ.

    தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு பொன்விழா கொண்டா ட்டத்தையொட்டி 51 ஜோடி களுக்கு எளிமையான முறையில் திருமணங்களை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் நாளை(23ந்தேதி) காலை நடைபெறு கிறது. இந்த திருமணத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி- முரளி ஆகியோரின் திருமணமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 50 ஏழை எளிய ஜோடிகளுடன் தனது இல்ல திருமணத்தையும் ஆர்.பி. உதயகுமார் நடத்துகிறார்.இதற்காக திருமண புடவைகள், வேட்டிகள், தங்கத்தாலி மற்றும் சீர்வரிசைகளும் தயாராக உள்ளன.

    இந்த திருமணங்களை நடத்தி வைக்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகிறார். காலை 10 மணி அளவில் திருமணம் நடைபெறும் ஜெயலலிதா கோயில் திடலுக்கு வரும் அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்று விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி அவரை வரவேற்க திருமங்கலம் முதல் டி.குன்னத்தூர் வரை அ.தி.மு.க.வினர் சாலையின் இரு புறங்களிலும் கொடி, தோரணங்களை கட்டி வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவியிலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்நின்று கவனித்து வருகிறார்.

    முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு பிரியதர்ஷினி- முரளி ஆகியோரது திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை காலை நடைபெறும் திருமண விழாவிலும் தங்கள் வீட்டு திருமண நிகழ்வாக கருதி அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • பொதுப்பணித்துறை அலட்சியத்தால் தடம் தெரியாமல் அழிக்கப்பட்ட திருவேடகம் பாசன கால்வாய் பரிதவிப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • பணம் கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    நம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக விவசாய விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற விவசாய நிலங்களிலும் போதிய தண்ணீர் இல்லாதது, நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் முழுமையாக விவசாயம் நடைபெறுவதில்லை. விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகையாற்று நீரை நம்பி 700 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டு விவசாயம் நடந்து வந்தது.

    கச்சிராயிருப்பு பிரிவு, வைகையாற்றில் இருந்து பிரிந்து செல்லும் பெரிய கால்வாய் மூலம் தச்சம்பத்து, வட்ட வாய்க்கால், அம்மச்சியார்கோவில் வாய்க்கால், மேட்டுமடை உள்ளிட்ட 9 பிரிவு வாய்க்கால்களில் நீர்வரத்து இருந்தது.

    இதன் காரணமாக திருவேடகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் சிறப்பாக நடந்து வந்தது. காலப்போக்கில் வைகையாற்றில் மணல் திருட்டு காரணமாக ஆறு பள்ளமானது. இதன் காரணமாக பெரிய கால்வாய்க்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது. இதனால் திருவேடகம் கால்வாயின் கடைமடை பகுதியான காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை நீர் முற்றிலும் தடைபட்டதால் விவசாயம் செய்யும் பரப்பும் குறைந்தது. கிணற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர்களை நடவு செய்து வருகின்றனர். மேலும் பெரிய கால்வாய் பிரிவில் உள்ள மனக்காடு வாய்க்காலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

    இதன் காரணமாக தற்போது அந்த கால்வாயில் மணல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த கால்வாய் புதர்களாக மண்டி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது.

    இந்த கால்வாயை நம்பி விவசாயம் செய்தவர்கள் கிணற்று நீர், பணம் கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி இல்லாததால் சீமை கருவேல முள் முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மனக்காடு கால்வாய் மூலம் வைகையாற்று தண்ணீர் வரத்து இருந்ததால் திருவேடகம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முப்போகம் நடந்தது. ஆனால் தற்போது மணல் கொட்டப்பட்டு கால்வாய் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலர் வாய்க்காலில் பிளாட் அமைத்தும் உள்ளனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நீர்வள உதவி பொறியளார் சேகரன் கூறுகையில், வைகையாற்றில் இருந்து ஊற்று நீர் செல்லும் பெரியகால்வாயின் கடைமடை கிளை வாய்க்கால் குறித்து தற்போதைய ஆவண விபரங்களை தெரியபடுத்த வாடிப்பட்டி தாசில்தாருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.பதில் கிடைத்த பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்தார்.

    ×