என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் டாக்டர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.
    • மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழக சிறைகளில் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாக உள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தனர். அப்போது கைதிகள் மட்டுமின்றி போலீசாருக்கும் மாரடைப்பு பற்றிய சரியான புரிதல்-விழிப்புணர்வு இல்லை என்பது தெரிய வந்தது.

    தமிழக சிறைச்சாலை களில் உள்ள கைதிகளுக்கும் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான மாரடைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது. மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாரடைப்பு சிறப்பு மருத்துவ நிபுணர் மதன்மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இருதய பிரிவு விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் கூறியதாவது:-

    மனித உடலில் இதயம் இயங்கவில்லை என்றால் மற்ற பாகங்கள் செயல்படாது. ஒரு குடும்பம் தலைவரை இழந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்ட முடியாது. போலீசாரும், டாக்டர்களும் ஒன்றுதான். ஏனென்றால் வருடத்தின் 365 நாட்களும் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் பேருக்கு உடல் பரிசோதனை நடத்தினோம். அதில் 300 பேருக்கு மாரடைப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் 50 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம். சினிமாவில் வருகிற மாதிரி மாரடைப்பு பாதிப்பு என்பது உடனடியாக வராது. இதற்கான அறிகுறிகள் ஏற்படும். அப்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம்.

    மாரடைப்பு பாதிப்பு ஏற்படுபவருக்கு உடலில் ரத்தம் செல்லாத பகுதியில் செல் அணுக்கள் படிப்படி யாக இறந்துவிடும். அதன் பிறகு அவரை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டு கொண்டு வருவது சிரமமான விஷயம். இதயத்தில் 3 தமனிகள் உண்டு. அதில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு ஆகும்.

    நடக்கும்போது நெஞ்செரிச்சல் இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறி. சிலர் அல்சர் என்று மாத்திரை சாப்பிடுகிறார்கள். அது தவறு. சிலருக்கு படி ஏறும் போது அதிகப்படியாக மூச்சு வாங்கும். இது பிரச்சினையின் அறிகுறி. அவர்கள் உடனடியாக இ.சி.ஜி. எடுத்து பார்த்தால் மாரடைப்பு பாதிப்பு வருமா? வராதா? என்பதை கண்டறிய இயலும்.

    நெஞ்சுவலி, மயக்கம், மூச்சு வாங்கல், களைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறி. சிகரெட் குடித்தால் இதய புற்றுநோய் வரும் என்று சொல்வார்கள். ஆனால் மாரடைப்பு தான் முக்கியமாக வரும். 10 ஆண்டுகள் சிகரெட் பிடித்தால் 100 சதவீதம் மாரடைப்பு வாய்ப்புண்டு. அப்பாவுக்கு குறிப்பிட்ட வயதில் மாரடைப்பு வந்தால் பையனுக்கும் வரும். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் பாதிப்பு வரும்.

    வயது முதிர்வு, உடல் குண்டு தன்மை, பதற்றம், நீரிழிவு, ரத்த கொதிப்பு ஆகியவை மாரடைப்பின் வேகத்தை அதிகரிக்கும். பெண்களுக்கு மெனோபாசுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு. 50 வயதை தாண்டிய பெண்கள் வருடாந்திர சோதனை செய்து பார்க்க வேண்டும்.

    புகை பிடிப்பதால் 4 மடங்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இ-சிகரெட் புகைத்தால் பாதிப்பு வராது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. மூளை பாதிப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் புகை பிடித்தல், மாரடைப்பு பாதிப்பு உறுதியாக வரும். அறியாத வயதில் பழகிவிட்டோம்: அறிந்த வயதில் விட்டுவிட வேண்டும். உடல்நல குறைவு என்று படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு சிகரெட் நினைப்பு வராது. உயிர் முக்கியம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    புகையிலை, மதுபானம் அருந்தும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். பீர் குடித்தால் பாதிப்பு குறைவு என்பார்கள். அப்படி அல்ல. பீர் குடித்தால் 3 ஆண்டுகளில் இதயம் வீங்கி விடும். நீரிழிவு மிகவும் கொடியது. ஆளைக் கொல்லும் வியாதி. 10 வருடத்திற்கு பிறகு தான் பாதிப்பு தெரியும். மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு உண்டு. ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பாதிப்பு தெரிகிறது. இதில் 60 சதவீதம் பேருக்கு மரண வாய்ப்பு அதிகமுண்டு. உடற்பயிற்சி செய்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மாரடைப்பு வந்தவுடன் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மார்ச் 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • மார்ச் 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவிற்காக தேதி குறித்த தேங்காய் தொடும் முகூர்த்தம் நடைபெற்றது. கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமை தாங்கினார். கோவில் உள்துறை சூப்பிரண்டு ரஞ்சனி, அலுவலக சூப்பிரண்டு சுமதி முன்னிலை வகித்தனர்.

    கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க அலுவலகத்திற்கு பூ, மாலை, தேங்காய், பழங்களுடன்கோவில் ஸ்தானிக சிவாச்சாரிகள் மு.சுவாமிநாதன், ராஜா என்ற சந்திரசேகர், சொக்கு சுப்பிரமணியம், சண்முகசுந்தரம், சிவானந்தம் ரமேஷ், செல்லப்பா ஆகியோர் சென்றனர். அங்கு பங்குனி பெருவிழாவிற்கான தேதி குறிக்ககூடிய தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது.

    அதில் வருகின்ற மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் திருவிழா நடத்துவது என்று பேசப்பட்டது. திருவிழாவையொட்டி மார்ச் மாதம் 26-ந்தேதி கொடியேற்றம், ஏப்ரல் மாதம் 7-ந் தேதி பட்டாபிஷேகம், 8-ந்தேதி திருக்கல்யாணம், 9-ந்தேதி தேரோட்டம் என்று நாட்கள் குறிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வாசல் முன்பு நிலைநிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் தயார்படுத்தும் பொருட்டாக மூடப்பட்டுள்ள தேரின் ஒரு பகுதியை திறக்கப்பட்டு தேரில் உள்ள ஆறுமுகப் பெருமானுக்கு (தராசுகாரர்) தேர்தொடும் முகூர்த்தம் நடந்தது.

    • ஜெயலலிதா பிறந்தநாள் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பின்னர் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    அவனியாபுரம்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் ஓ.பி.எஸ். அணி மாநில இளைஞரணி செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் ஏற்பாட்டில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்துகொண்டு முதியோர் இல்லத்திற்கு தேவையான கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    பின்னர் முதியோர் களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.எஸ்.டி. மனோகரன், மாணவரணி மாவட்ட செயலாளர் பிரபாகர், பகுதி செயலாளர்கள் ஆட்டோ கருப்பையா, கண்ணன் மகாலிங்கம், பொதுகுழு உறுப்பினர் பவுன்ராஜ், வட்ட செயலாளர்கள் நாச்சியப்பன், கொம்பையா, முத்து, ராஜகோபால், இன்பம்,சாத்தன உடையார், பத்ரி முருகன், திருப்பதி, கமலகண்ணன், கிரி, புல்லட் ராமமூர்த்தி, பெருமாள், பூங்கொடி, முத்து மற்றும் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முனியாண்டி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் வழிபாடு நடந்தது.
    • அன்னதானமாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் முனியாண்டிசுவாமி கோவிலில் தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் 2-வது வெள்ளி கிழமை ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த வர்களும் பிரியாணி திருவிழாவை நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வ லமாக வந்து பாலை சுவாமிக்கு அபிஷேகம்- பூஜை செய்து வழிபட்டனர். மாலையில் நடந்த விழாவில் கோவில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர், வெளியூர் மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட ப்பட்டது. பின்னர் 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    தொடர்ந்து அண்டா க்களில் தயாராக வைக்கப் பட்டிருந்த பிரியாணி பக்தர்க ளுக்கு அன்னதா னமாக வழங்கப்பட்டது.இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராம மக்கள் விடிய, விடிய காத்திருந்து பாத்தி ரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.

    • மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும்.
    • மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான முகவர்கள் ஆவின் பாலை திருப்பி அனுப்பியதால், சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அண்ணாநகரில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பால் பாக்கெட்டுகள் மற்றும் தயிர் தயாராகின்றன. இவை சுமார் 50 போக்குவரத்து தடங்கள் வழியாக, மண்டலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும். இன்று காலை 8 மணிக்குதான் வாகனம் வந்தது. இதன் காரணமாக முகவர்கள் பாலை வாங்காமல் திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து பால் முகவர்கள் கூறுகையில், பொதுமக்கள் காலை 5 மணிக்கு பால் வாங்க வருவார்கள். அதிகாலை 3 மணிக்குள் பால் வாகனம் வந்து விடும். நாங்கள் வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்துக்குள் விற்பனை செய்து வந்தோம். இப்போது ஆவின் பால் வாகனம், காலை 7 மணிக்கு மேல் வருகிறது.

    பால் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள், தனியார் பாலை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி விடுகின்றனர். ஆவின் பாலை வாங்க வாடிக்கையாளர்கள் முன் வராததால், நஷ்டம் ஏற்படுகிறது. நாங்கள் இன்று காலை 8 மணிக்கு வந்த ஆவின் பால் வாகனத்தை திருப்பி அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    ஆவின் நிறுவன ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசிய போது, மதுரை ஆவின் நிறுவனத்தில் போதிய அளவுக்கு நிரந்தர ஊழியர்கள் இல்லை. ஆளுங்கட்சி பிரமுகர் ஆதரவுடன் இயங்கும் 2 தனியார் நிறுவனங்கள், கான்ட்ராக்ட் எடுத்து ஊழியர்களை நியமித்துள்ளன. அவர்கள் சரிவர பணியில் ஈடுபடுவது இல்லை.

    இதனை தட்டி கேட்ட அதிகாரிக்கு சமீபத்தில் அடி உதை விழுந்தது. அந்த வழக்கில் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. அதிகாரிகள் ஆவின் தற்காலிக ஊழியர்களிடம் வேலை வாங்க பயப்படுவதாக தெரிவித்தனர்.

    மதுரை ஆவின் பால் நிறுவன அதிகாரி கூறுகையில், மதுரை மண்டலத்திற்கு ஒட்டு மொத்தமாக 1.38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.33 வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.40 கொடுக்கின்றன. மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், தனியார் நிறுவனங்களை நாடி செல்கின்றனர். மதுரை மாவட்டத்திற்கு 1.60 லட்சம் லிட்டர் பால் தேவை. எங்களுக்கு 1.35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது.

    ஆவின் நிறுவனத்தில் பால் அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஆவின் பாலை சில நாட்களில் முகவருக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. இருந்த போதிலும் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

    மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான முகவர்கள் ஆவின் பாலை திருப்பி அனுப்பியதால், சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரெயில்கள் நேற்று முதல் மதுரை ரெயில் நிலையம் வராமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரெயில்கள் நேற்று முதல் மதுரை ரெயில் நிலையம் வராமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

    திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16106) வருகிற 28-ந் தேதி வரையிலும், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்(12662) வருகிற 3-ந் தேதி வரையிலும், நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632) வருகிற 28-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி வரையிலும், கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16824) மற்றும் கொல்லம்-சென்னை (தென்காசி வழி) எக்ஸ்பிரஸ் ரெயில் (16102) ஆகியவை வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து அங்கிருந்து சென்னைக்கு வரும்.

    இந்த ரெயில்கள் மேற்கண்ட நாட்களில் மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது.

    • சி.புதூர் கிராமத்தில் வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
    • சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட சி.புதூர் கிராமத்தில் வடக்கில் இருந்து தெற்கு பக்கம் செல்லும் முக்கிய கழிவுநீர் வாய்காலில் குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலந்து சென்று தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பாய்ந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிலத்தில் பாய்ந்து வந்த கழிவுநீர் பாதையை நில உரிமையாளர் மண்கொட்டி அடைத்து விட்டதால் 2 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியின்றி வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதி வீடுகளில் உள்ளவர்கள் கால்கள் நனையாமல் நடந்து செல்ல தற்காலிகமாக கல்பாதை அமைத்து நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன் கூறுகையில், இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாற்று வழியில்லாத நிலையால் தனியார் பட்டா இடத்தை ஆர்ஜிதம் செய்து கழிவுநீர் வாய்க்கால் கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிள்ளோம். ஊரக வளர்ச்சி துறையின் அனுமதி கிடைத்த பின்னர் சாக்கடை நீர் வெளியேற வாய்கால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    • மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலக பணியிட கணினி பயிற்சி மையத்தில் நடக்கிறது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம்,ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்களின் குறைகள், ரெயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதா ரர்களின் குறைகள் இந்த முகாமில் பரிசீலிக்கப்படும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணி ப்பாளர் அளித்த பதிலில் திருப்திய டையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். நேரடியாக இந்த முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

    குறைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 16.3.2023 ஆகும். குறைகளைஅனுப்ப வேண்டிய முகவரி:- ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம், ச.பொற்கொடி, கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம்(தமிழ்நாடு), மதுரை- 625002'' ஆகும்.

    மின்னஞ்சல் accts.madurai@indiapost.gov.in-மூலமாகவும் அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம்-2023'' என்று தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

    குறைகளை சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப் படும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் வரமுடியாத ஓய்வூதியர்கள் 19.4.2023 அன்று மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடத்தப்படும் முகாயில் கலந்து கொள்ளலாம். காணொலி காட்சி 'கூகுள் மீட்' மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைபேசி எண் மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    • உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கினர். இதேபோல் பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கபாண்டி, ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முகபாண்டியன், ராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா, முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா, நகர இளைஞரணி கேபிள் மணி, துரைக்கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, இலக்கிய அணி மணி, ஆசிரியர் ஜெய்பிரகாஷ், தியாகு, வார்டு செயலாளர் மணிகண்டன், தண்ட பாணி, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, மேலக்கால் காசிலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அனைத்து கட்டண டிக்கெட்டு விவரங்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது.
    • கோவிலை பொறுத்தவரை 80 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே சமயம் திருவிழா மற்றும் திருமண முகூர்த்தம் உள்ள முக்கிய நாட்களில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் கைப்பட ரூ.50, ரூ.100 என்று எழுதி தனித்தனியாக டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கையிலான எந்திரத்தை பயன்படுத்தி டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது.

    அதன்பின்னர் நவீன முறையில் இந்துசமய அறநிலையத் துறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட தனி சாப்ட்வேரை பயன்படுத்தி கணினி மூலம் ஒரே டிக்கெட்டில் எத்தனை நபர் என்று குறிப்பிட்டு அதன்படி மொத்த ரூபாயை ஒப்பிட்டு ஒரே டிக்கெட்டாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கான வழியில் சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவிலில் முதல்முறையாக புது நடைமுறையாக நேற்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட்டினை எந்திரத்தில் "கியூ ஆர் கோடு" ஸ்கேனிங் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் புதிய ஸ்கேன் மிஷன் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது டிக்கெட்டினை ஸ்கேனிங் செய்த பிறகே கோவிலின் கருவறைக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் நடைமுறை மூலம் ஒரு நாளைக்கு எத்தனை பேர் சிறப்பு தரிசனம் செய்துள்ளனர், சிறப்பு தரிசனம் மூலம் கோவிலுக்கு வருமானம் எவ்வளவு? என்பது வெளிப்படையாக இந்துசமய அறநிலையதுறைக்கு உட்பட்ட இணையதளம் மூலம் உடனுக்குஉடன் தெரிந்துகொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர் கூறும்போது, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்வதுபோலவே அர்ச்சனை டிக்கெட் உள்பட அனைத்து கட்டண டிக்கெட்டு விவரங்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவிலை பொறுத்தவரை 80 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் 20 கேமராக்கள் இந்துசமய அலுவலகத்துடன் நேரடி பார்வைக்கு இணைக்கப்பட்டு கமிஷனரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தினமும் கோவிலுக்கு பக்தர்கள் வருகை, கூட்ட நெரிசல் உள்பட குறை, நிறைகளை கமிஷனர் நேரடியாக தெரிந்துகொள்கிறார். சிலசமயங்களில் கமிஷனர் உத்தரவு குறைகளை தவிர்ப்பதற்கு வாய்ப்பாக உள்ளது என்றார்.

    • தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.
    • மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மதுரை:

    நாமக்கல்லை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு அனுமதி பெற்று தனியார் பஸ்சை இயக்கி வருகிறேன். எனது பஸ், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 3.24 மணிக்கு புறப்பட தமிழக அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது.

    இதேபோல் எனக்கு அடுத்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கரூருக்கு செல்ல வேண்டிய தனியார் பஸ் மதியம் 3.55 மணிக்கு புறப்பட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே 3.14 மணிக்கு இயக்கப்படுவதால் எனக்கும், மற்ற அரசு பஸ்களுக்கும் 17 ஆண்டுகளாக வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு ஆவணங்களின்படி சரியாக உள்ளதால் தனியார் பஸ்களை உரிய நேரத்தில் இயக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த மற்றொரு பஸ் உரிமையாளர் சுவாமி அப்பன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தனியார் பஸ் இயக்கும் நேரத்தை முறைப்படுத்தாத திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி கார்த்திகேயராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிடும் தனியார் பஸ் நேரத்தை மாற்றி முன்னதாக இயக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பின்னர் திருச்சி மாவட்ட மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும்.
    • சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம்.

    மதுரை:

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரைக்கு இன்று வந்தார். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனை நிரப்புவதற்காக சசிகலாவால் கொண்டு வரப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதுவும் தவிர ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குப்பனோ, சுப்பனோ கூட 4, 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த முடியும்.

    இதில் பழனிசாமிக்கு எந்த பெருமையும் இல்லை. அவர் மத்திய அரசின் உதவியுடன் தான் அந்த ஆட்சியையும் நடத்தினார். ஆனால் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருந்தும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைய எடப்பாடி பழனிசாமியின் ஆணவம், பண திமிர்தான் காரணம். அவரால் ஜெயலலிதா ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. வன்னியர் சமுதாய மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதனால் தான் அவரால் தென் மாவட்டங்களில் ஜெயிக்க முடியவில்லை. பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு வர இயலவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம். அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவருக்கு மரியாதை செலுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்த போதே, அ.ம.மு.க லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது. எடப்பாடியுடன் ஒரு சிலர் வியாபார லாப நோக்கத்துடன் உள்ளனர். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. வளர்ந்துவரும் இயக்கமாக மாறி உள்ளது.

    இரட்டை இலை சின்னம் துரோகிகளின் கையில் இருந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் காரணமாக கிடைத்துள்ளது. அ.தி.மு.க.வை பழனிசாமி பிராந்திய கட்சியாக மாற்றி விட்டார். அ.தி.மு.க.வில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல, டெண்டர்கள். எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம். எனவே தான் பழனிசாமி சேர்க்க மாட்டேன் என்கிறார். எனக்கு தகுதி இல்லை. நான் தேவை இல்லை என்கிறார். ஆனால் ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை.

    ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது. பழனிசாமி மெகா கூட்டணி என்றார். ஆனால் தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகள் வெளியேறி விட்டது.

    வன்னியர் உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் அறிவித்தும், அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. பழனிசாமியிடம் இருந்து பா.ம.க. நல்ல வேளையாக தப்பித்து விட்டது. ஒரு கண்ணில் வெண்ணைய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. துரோகம் தான் பழனிசாமியின் மூலதனம். உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் இந்த சுற்றில் பழனிசாமி தற்காலிக வெற்றி பெற்று உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறி உள்ளனர். தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை .

    அம்மா, எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் பழனிசாமியிடம் கிடைத்ததால், அது பின்னடவை சந்தித்து உள்ளது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால், தி.மு.க என்ற தீய சக்தியை வெல்ல முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வரவேண்டும். பழனிசாமி தன்னை அம்மாவின் தொண்டராக உணரவில்லை. அகங்காரத்தில் குதிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்காக, நாங்கள் 40 சீட் கேட்டோம். ஆனால் பழனிசாமியின் தவறான முடிவால், ஆட்சி பொறுப்பிற்கு வர முடியவில்லை. பழனிசாமி எப்போது திருந்துவார்? என்று தெரியவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு போகலாம், தேர்தல் ஆணையம் போகலாம்.

    கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா? இந்த தீர்ப்பு என்பது தற்காலிகமானதுதான். பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்று அறிவித்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. கூட்டணி பலத்தோடு இருக்கும் தி.மு.க.வை வீழ்த்த முடியாத நிலையில் பழனிசாமி உள்ளார். பணபலம், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. எனது உயரம் எனக்கு தெரியும். பாராளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் கூட்டணி அமைக்கவில்லை. அ.ம.மு.க தான் அம்மாவின் இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×