search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது- டி.டி.வி.தினகரன் பேட்டி
    X

    எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது- டி.டி.வி.தினகரன் பேட்டி

    • தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும்.
    • சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம்.

    மதுரை:

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரைக்கு இன்று வந்தார். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனை நிரப்புவதற்காக சசிகலாவால் கொண்டு வரப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதுவும் தவிர ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குப்பனோ, சுப்பனோ கூட 4, 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த முடியும்.

    இதில் பழனிசாமிக்கு எந்த பெருமையும் இல்லை. அவர் மத்திய அரசின் உதவியுடன் தான் அந்த ஆட்சியையும் நடத்தினார். ஆனால் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருந்தும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைய எடப்பாடி பழனிசாமியின் ஆணவம், பண திமிர்தான் காரணம். அவரால் ஜெயலலிதா ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. வன்னியர் சமுதாய மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதனால் தான் அவரால் தென் மாவட்டங்களில் ஜெயிக்க முடியவில்லை. பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு வர இயலவில்லை.

    தமிழகத்தில் தி.மு.க.வின் அராஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். சுவாசம் உள்ளவரை அம்மாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம். அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவருக்கு மரியாதை செலுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்த போதே, அ.ம.மு.க லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது. எடப்பாடியுடன் ஒரு சிலர் வியாபார லாப நோக்கத்துடன் உள்ளனர். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. வளர்ந்துவரும் இயக்கமாக மாறி உள்ளது.

    இரட்டை இலை சின்னம் துரோகிகளின் கையில் இருந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் காரணமாக கிடைத்துள்ளது. அ.தி.மு.க.வை பழனிசாமி பிராந்திய கட்சியாக மாற்றி விட்டார். அ.தி.மு.க.வில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல, டெண்டர்கள். எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம். எனவே தான் பழனிசாமி சேர்க்க மாட்டேன் என்கிறார். எனக்கு தகுதி இல்லை. நான் தேவை இல்லை என்கிறார். ஆனால் ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை.

    ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது. பழனிசாமி மெகா கூட்டணி என்றார். ஆனால் தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகள் வெளியேறி விட்டது.

    வன்னியர் உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் அறிவித்தும், அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. பழனிசாமியிடம் இருந்து பா.ம.க. நல்ல வேளையாக தப்பித்து விட்டது. ஒரு கண்ணில் வெண்ணைய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. துரோகம் தான் பழனிசாமியின் மூலதனம். உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் இந்த சுற்றில் பழனிசாமி தற்காலிக வெற்றி பெற்று உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறி உள்ளனர். தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை .

    அம்மா, எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் பழனிசாமியிடம் கிடைத்ததால், அது பின்னடவை சந்தித்து உள்ளது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால், தி.மு.க என்ற தீய சக்தியை வெல்ல முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வரவேண்டும். பழனிசாமி தன்னை அம்மாவின் தொண்டராக உணரவில்லை. அகங்காரத்தில் குதிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்காக, நாங்கள் 40 சீட் கேட்டோம். ஆனால் பழனிசாமியின் தவறான முடிவால், ஆட்சி பொறுப்பிற்கு வர முடியவில்லை. பழனிசாமி எப்போது திருந்துவார்? என்று தெரியவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு போகலாம், தேர்தல் ஆணையம் போகலாம்.

    கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா? இந்த தீர்ப்பு என்பது தற்காலிகமானதுதான். பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்று அறிவித்தாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. கூட்டணி பலத்தோடு இருக்கும் தி.மு.க.வை வீழ்த்த முடியாத நிலையில் பழனிசாமி உள்ளார். பணபலம், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. எனது உயரம் எனக்கு தெரியும். பாராளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் கூட்டணி அமைக்கவில்லை. அ.ம.மு.க தான் அம்மாவின் இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×