search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trace"

    • பொதுப்பணித்துறை அலட்சியத்தால் தடம் தெரியாமல் அழிக்கப்பட்ட திருவேடகம் பாசன கால்வாய் பரிதவிப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • பணம் கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    நம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக விவசாய விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற விவசாய நிலங்களிலும் போதிய தண்ணீர் இல்லாதது, நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் முழுமையாக விவசாயம் நடைபெறுவதில்லை. விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகையாற்று நீரை நம்பி 700 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டு விவசாயம் நடந்து வந்தது.

    கச்சிராயிருப்பு பிரிவு, வைகையாற்றில் இருந்து பிரிந்து செல்லும் பெரிய கால்வாய் மூலம் தச்சம்பத்து, வட்ட வாய்க்கால், அம்மச்சியார்கோவில் வாய்க்கால், மேட்டுமடை உள்ளிட்ட 9 பிரிவு வாய்க்கால்களில் நீர்வரத்து இருந்தது.

    இதன் காரணமாக திருவேடகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் சிறப்பாக நடந்து வந்தது. காலப்போக்கில் வைகையாற்றில் மணல் திருட்டு காரணமாக ஆறு பள்ளமானது. இதன் காரணமாக பெரிய கால்வாய்க்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது. இதனால் திருவேடகம் கால்வாயின் கடைமடை பகுதியான காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை நீர் முற்றிலும் தடைபட்டதால் விவசாயம் செய்யும் பரப்பும் குறைந்தது. கிணற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர்களை நடவு செய்து வருகின்றனர். மேலும் பெரிய கால்வாய் பிரிவில் உள்ள மனக்காடு வாய்க்காலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

    இதன் காரணமாக தற்போது அந்த கால்வாயில் மணல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த கால்வாய் புதர்களாக மண்டி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது.

    இந்த கால்வாயை நம்பி விவசாயம் செய்தவர்கள் கிணற்று நீர், பணம் கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி இல்லாததால் சீமை கருவேல முள் முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மனக்காடு கால்வாய் மூலம் வைகையாற்று தண்ணீர் வரத்து இருந்ததால் திருவேடகம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முப்போகம் நடந்தது. ஆனால் தற்போது மணல் கொட்டப்பட்டு கால்வாய் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலர் வாய்க்காலில் பிளாட் அமைத்தும் உள்ளனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நீர்வள உதவி பொறியளார் சேகரன் கூறுகையில், வைகையாற்றில் இருந்து ஊற்று நீர் செல்லும் பெரியகால்வாயின் கடைமடை கிளை வாய்க்கால் குறித்து தற்போதைய ஆவண விபரங்களை தெரியபடுத்த வாடிப்பட்டி தாசில்தாருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.பதில் கிடைத்த பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்தார்.

    ×