என் மலர்tooltip icon

    மதுரை

    • ஓட்டலில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி திடீரென பரிதாபமாக இறந்தார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த தம்பிபட்டியை சேர்ந்தவர் சுந்தரம்மாள். இவரது மகன் ராஜ்குமார்(வயது48), மாற்றுத்திறனாளி. விபத்தில் ஒரு காலை இழந்தவர். இவர் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதே ஓட்டல் மாடியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் நேற்று இறந்து விட்டார். இதுபற்றி சுந்தரம்மாள் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • திருமங்கலத்தில் ராணுவ அதிகாரி வீட்டில் நகை-வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டது.
    • பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சுரேஷ்(வயது42). இவர் ராணுவ அதிகாரியாக அருணாச்சலபிரதேசத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் வசிக்கும் அவரது அண்ணன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டிக்கிடந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதையடுத்து ஈரோட்டில் இருந்து தனது வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தன்னுடைய வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு போனது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் வீட்டில் புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்கள் யார்?உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூர் கொள்ளை கும்பலா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
    • ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு ஆடியோ தான் காரணமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல பி.டி.ஆர். கெட்டுள்ளார். இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என்பதால் சாதாரண இலாகாவை கொடுத்துள்ளனர்.

    நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுக்கள்.

    ஓ.பி.எஸ்., இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்.

    எங்களுடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க. மட்டும் தான். பா.ஜ.க.வும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    நடிகர் கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என்று தெரியவில்லை.

    எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டு கட்டிடம் தரை மட்டமாகி விழுந்ததால் அங்கு வளர்க்கப்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன.
    • கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகில் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் சாய்ந்து விழுந்தது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    இதன் காரணமாக அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் மரங்கள் காற்றில் சாய்ந்தன. இதில் மின் கம்பங்கள், மின் வயர்கள் சேதமானது. அந்தப்பகுதியில் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

    அலங்காநல்லூர் அருகே செல்லக்கவுண்டன்பட்டி பகுதியில் வெடிக்கோனான் என்பவரது தோட்டத்தில் கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த கட்டிடம் சூறைக்காற்று காரணமாக இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்திற்குள் ஏராளமான கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தது.

    ஓட்டு கட்டிடம் தரை மட்டமாகி விழுந்ததால் அங்கு வளர்க்கப்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன. இதுபற்றி அலங்காநல்லூர் போலீஸ் நிலையம், மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோழிப்பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி அறிந்த சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத மதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகில் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    இந்த மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, சாலை ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் சீலிங் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது.
    • தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மதுரை:

    மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து இன்று காலை 6.20 மணியளவில் திடீரென புகை வந்தது. பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.

    இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் சலீம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் சீலிங் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது.

    தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.55 லட்சம் சேதமில்லாமல் தப்பியது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    எல்லீஸ்நகர் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மேலூர்-சிவகங்கை சாலையில் மலம்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்திற்கு கீழே நேற்று மாலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.

    பின்னால் அமர்ந்திருந்தவர் கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வைத்திருந்தார். மேலும் 2 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி திரி போட்டு அதனை மோட்டார் சைக்கிளில் பவுச்சில் வைத்திருந்தனர்.

    பாலத்தின் கீழே சென்ற போது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது, பவுச்சில் இருந்த ஒரு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக அந்த வாலிபர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது ஆத்திரமடைந்த ஒரு வாலிபர், பவுச்சில் இருந்த மற்றொரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரியில் தீயை பற்ற வைத்து தூக்கி வீசியுள்ளார். அது வெடித்துசிதறி சாலையோரத்தில் விழுந்து தீப்பற்றியது.

    இதனை பார்த்து அச்சமடைந்த அந்த வாலிபர்கள், தீயை அணைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதனை கொண்டுவந்த வாலிபர்கள் இருவருக்கும் காயமும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

    பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

    மேலும் அவர்கள் சென்ற வாகனத்தின் எண் தெளிவாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில், ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர்கள் இருவரும் திருப்பத்தூருக்கு சென்றது தெரியவந்தது.

    அவர்கள் மோட்டார் சைக்கிளில் எதற்காக பெட்ரோல் மற்றும் பெட்ரோல் குண்டுகளை கொண்டு சென்றனர்? ஏதேனும் சதித்திட்டத்துடன் சென்றார்களா? என்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டது.
    • செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத 23 கடைகளில் 11 கடைகள் மற்றும் உணவகம், கட்டண கழிப்பிடம் உள்ளிட்டவைகள் வைப்பு தொகையுடன் மாத வாடகைக்கு ஏலம் விடப்பட்டது.

    இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் கண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள், துப்புரவு ஆய்யாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்தளத்தில் உள்ள எண்.3 மற்றும் எண்.9 கடைகளுக்கு யாரும் வைப்பு தொகை கட்டவில்லை. இதனால் அந்த கடைகள் ஏலம் போகவில்லை. ஏலம்போகாத கடைகள் மறு ஏலத்தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏலம் விடப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • பேரையூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அயோத்திபட்டி விலக்கு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நபர்களை பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அயோத்திபட்டி விலக்கில் சென்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த ஆட்டோவில் 8 கிலோ கஞ்சா மறைத்து வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்ததாக பொம்மனம்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் வீரணன்(வயது31), சகாதேவன் மகன் கார்த்திக்(29), அல்லிகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் ஜனகராஜ்(27), மூக்கன் மகன் ஜெயராம்(29), மேக்கிழார்பட்டி ராஜாங்கம் மகன் ஈஸ்வரன்(28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரொக்கப்ப ணம் ரூ.95ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதான கார்த்திக் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் கும்பலை ேசர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேரையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதுகுறித்து கல்லூரியின் செயலர் எம்.விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு ஆகியோர் கூறியதாவது:-

    மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பிரிவுகளில் பி.எஸ்.சி.சி.எஸ், செயற்கை நுண்ணறிவு, பி.எஸ்.சி. ஆடை வடிவமைப்பு, பேஷன் டெக்னாலஜி ஆகிய புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டன. ஆடை வடிவமைப்புத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே ஆடை வடிவமைப்பாளர்கள் இந்தத் துறையில் தொழில் நுட்ப அறிவு, நடைமுறை திறன்களை பெறுவது அவசியமாகிறது. சமீப காலங்களில் பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அதிகளவில் வேலை வாய்ப்புகளை நிர்ணயிக்கும் படிப்பாக இது உள்ளது. சுய வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும் இந்த படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவிலுக்கு திரும்பிய பின்பும் கள்ளழகரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.
    • நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து 3-ந்தேதி பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் புதூரில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எழுந்தருளிய கள்ளழ கருக்கு திருமஞ்சனம் நடந்தது.

    கடந்த 5-ந்தேதி உலக பிரசித்தி பெற்ற வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 6 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் வைகை யாற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. 7-ந் தேதி இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார். மறுநாள் (8-ந்தேதி) அதிகாலை தமுக்கம் கருப்பண்ணசாமி கோவில் முன்பு வையாழியாக உருமாறி கள்ளழகர் தங்க பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார். நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.

    3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கள்ளழகரை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி னார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலின் மூலஸ்தானத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் சுந்தரராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, கள்ளழ கரையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் கோவிலை விட்டு புறப்பாடான நேரத்தில் மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் அவரை தரிசிக்க முடியவில்லை. அப்போது திருவிழாவில் பங்கேற்று இருப்பிடம் வந்த கள்ளழகர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படாமல் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி னார். மூலவரை வணங்க முடியாத காரணத்தால் பக்தர்கள் கள்ளழகரை சேவித்து சென்றனர். ஆனால் இந்த ஆண்டு மூலவருக்கு தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகரை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி வெளிமாவட்டங்கிளில் இருந்து அழகர்கோ விலுக்கு வரும் பக்தர்கள் பதினெட்டாம்படி கருப்பணசாமியை கும்பிட்டு விட்டு கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் கள்ளழகர் மற்றும் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியரை தரிசனம் செய்கின்றனர்.

    • பாறை உருண்டு விழுந்து பட்டதாரி வாலிபர் பலியானார்.
    • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் பழையூரை சேர்ந்தவர் முத்தையா. அவரது மனைவி பூங்கொடி(வயது42). இவர்களின் மூத்த மகன் நிறைகுளத்தான்(27). முத்தையா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பட்டதாரி வாலிபரான நிறைகுளத்தான் ஆடு மேய்த்து வந்தார்.

    அவர் ேநற்று தென்மலை பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு தாவி குதித்துள்ளார். அப்போது ஒரு பாறை உடைந்து உருண்டு நிறைகுளத்தான் நெஞ்சின் மேல் விழுந்தது.

    இதில் படுகாயமடைந்த அவரை அதே பகுதியை சேர்ந்த பாண்டி, அய்யப்பன் ஆகிய 2 பேர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி நிறைகுள த்தானின் தாய் பூங்கொடி, பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அன்னதானம்-தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
    • ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை யொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை பசுமலையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்க ளில் தங்கியுள்ள முதி யோர்கள் மற்றும் ஆதர வற்றோருக்கு ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பா. வெற்றிவேல் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    இதனை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து மதுரை அழகர் கோவிலில் ஜெய லலிதா பேரவை சார்பில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யில் எடப்பாடி பழனிசாமி நீடூடி வாழ வேண்டி தங்கத்தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் வழிபாடு செய்கின்றனர்.

    இதைத் தொடர்ந்து மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. இதையொட்டி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    ×