என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அலங்காநல்லூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை- கோழிப்பண்ணை இடிந்து விழுந்து 3 ஆயிரம் கோழி குஞ்சுகள் பலி
    X

    அலங்காநல்லூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை- கோழிப்பண்ணை இடிந்து விழுந்து 3 ஆயிரம் கோழி குஞ்சுகள் பலி

    • ஓட்டு கட்டிடம் தரை மட்டமாகி விழுந்ததால் அங்கு வளர்க்கப்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன.
    • கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகில் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் சாய்ந்து விழுந்தது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    இதன் காரணமாக அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் மரங்கள் காற்றில் சாய்ந்தன. இதில் மின் கம்பங்கள், மின் வயர்கள் சேதமானது. அந்தப்பகுதியில் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

    அலங்காநல்லூர் அருகே செல்லக்கவுண்டன்பட்டி பகுதியில் வெடிக்கோனான் என்பவரது தோட்டத்தில் கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த கட்டிடம் சூறைக்காற்று காரணமாக இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்திற்குள் ஏராளமான கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தது.

    ஓட்டு கட்டிடம் தரை மட்டமாகி விழுந்ததால் அங்கு வளர்க்கப்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன. இதுபற்றி அலங்காநல்லூர் போலீஸ் நிலையம், மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோழிப்பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி அறிந்த சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத மதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகில் 60 ஆண்டு பழமையான வேப்பமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    இந்த மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, சாலை ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    Next Story
    ×