என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூர் அருகே கடையில் துளையிட்டு பேட்டரிகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 45). இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான பேட்டரிகள் விற்பனை கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருந்தது. மேலும் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான 20 பேட்டரிகள் திருட்டு போயிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது குறித்து சம்சுதீன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
    தளியில் ரவுடி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த கும்ளாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ந் தேதி இரவு கும்ளாபுரம் கிராமத்தில் காரில் சென்ற போது மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக கும்ளாபுரத்தை சேர்ந்த ரவி (28), அவருடைய அண்ணன் சம்பங்கி (35) ஆகிய 2 பேரை தளி போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த வஜ்ரமுனி (33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    தளி அருகே ரவுடியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே உள்ள கும்மளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் உதயகுமார் (வயது 30). ரவுடியான இவர் மீது தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் 2 கொலை வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி உதயகுமார் கும்மளாபுரத்தில் கவுரம்மா கோவில் அருகே காரில் சென்றார். அப்போது காரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கியது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அவரை, அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் விரட்டி சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில், துடி துடித்து பரிதாபமாகஇறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கும்மளாபுரம் பகுதியை சேர்ந்த தேவர்பெட்டப்பா மகன் சம்பங்கி (35), இவருடைய தம்பி ரவி என்கிற பகவந்தா (28) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், உதயகுமார் அவர்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததும், சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து உதயகுமாரை வெட்டிக்கொலை செய்ததும்தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அண்ணன், தம்பியான சம்பங்கி, ரவியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுதர்சன் (வயது 23), இவர் நேற்று தனது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை மட்டும் பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    பின்னர் திரும்பி வரும்போது வீட்டின் உள் கதவு திறக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் தங்க காசு மாலை மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உடனடியாக இதுகுறித்து கந்திகுப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பீரோவில் பதிவான கைரேகையை பதிவு செய்து கொண்டனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. தமிழகத்தில் தென்பெண்ணையாறு என்று அழைக்கப்படும் இந்த ஆற்றை நம்பி 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இந்த தென்பெண்ணையாற்றின் நீரை கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக தென்பெண்ணையாற்றின் துணை ஆறாக உள்ள மார்கண்டேய நதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு 2018-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    சுப்ரீம் கோர்ட்

    இந்தநிலையில் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஏற்பாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது கர்நாடக அரசு அதிகாரிகள் கர்நாடகா மாநிலம் கோலார், பங்காருபேட்டை, மாலூர் உள்பட 45-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு குடிநீர் வினியோகிக்க இந்த அணை கட்டுவதாக தெரிவித்தனர்.

    இதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு, தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக இந்த விவகாரம் பற்றி பேசப்படவில்லை.

    இந்த நேரத்தில் சத்தமின்றி தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டி முடித்து விட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு ஆண்டில் இந்த அணை விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுமான பணிகள் முடிந்து மதகுகள் மட்டும் இன்னும் அமைக்கப்படாத நிலையில் உள்ளது. மேலும் இந்த அணையில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

    430 மீட்டர் நீளத்திலும், 50 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த யார்கோள் அணையில் 165 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலம் தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக தற்போது யார்கோள் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி உள்ளது. ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் நீரை தேக்கும் கட்டமைப்புகளை மேற்கொள்ள கூடாது என்ற ஒப்பந்தம் உள்ளது.

    தமிழக அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தை உடனடியாக அணுகி தீர்வு காண வேண்டும்.



    சிங்காரப்பேட்டை அருகே டிரைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள விசுவாசம்பட்டியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). பொக்லைன் டிரைவர். சம்பவத்தன்று இவர் முசிலிகொட்டாய் பக்கமாக சென்ற போது அவரை சின்னராஜ் (64), ரமேஷ் (42), சந்தோஷ்குமார் (21) ஆகியோர் தாக்கினார்கள். அது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி சின்னராஜ், சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரமேசை தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 109 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் 3 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். தற்போது 1,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்துள்ளது.
    தேன்கனிக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் பக்கமுள்ள கொல்லகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் பைரன். இவரது மனைவி மதி (வயது45). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. இதனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் மன வருத்தத்தில் காணப்பட்ட மதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பள்ளி மாணவி பிரியதர்சினி ஆன்லைனில் பாடம் கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் தனது கணவரை 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். தற்போது கிருஷ்ணகிரியில் குடியிருந்து வருகிறார் இவருக்கு மோகன பிரசாத் (வயது 19) என்ற மகனும், பிரியதர்சினி (14) மகளும் உள்ளனர். இதில் பிரியதர்சினி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்காக வந்தனர்.

    அப்போது நேற்று மாலை 5 மணிக்கு பிரியதர்சினி ஆன்லைனில் பாடம் கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.

    இதை கவனித்த தாய் ரஞ்சனி ஒழுங்காக படிக்கவேண்டும். செல்போனில் கேமில் அதிக நேரத்தை செலவிட வேண்டாம் என கண்டித்துள்ளார்.

    இதனால் மனம் உடைந்த பிரியதர்சினி வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் மகள் வராததால் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பிரியதர்சினியை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர் பிரியதர்சினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.

    மத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் சந்தை மைதானம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற அரசம்பட்டி குமரவேல் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே போல பாரூர் போலீசார் அரசம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற அரசம்பட்டி சரவணன் (54) என்பவரை கைது செய்தனர். வேப்பனப்பள்ளி போலீசார் கொங்கனப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வேப்பனப்பள்ளி நவாஸ் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை: 

     கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளி ஊராட்சி எச்.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 32), கூலித்தொழிலாளி. இவருக்கு  மீனா என்ற மனைவியும், முனிராஜ் (8). நித்தீன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். 

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மீனா அவரது தாயார் கிராமமான கூட்டூருக்கு  சென்று விட்டார். 

     இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட நாகேஷ் குடிபோதையில் நேற்று முன்தினம் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து  கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் மற்றும் 70 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனின்றி இறந்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றிஇறந்துள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 39 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 38 ஆயிரத்து 414 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 1,045 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது. கடந்த 2 மாதங்களாக பாதிப்பு 100-க்கும் மேல் இருந்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் 895 பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு 2 மாதங்களுக்கு பிறகு குறைந்து நேற்று 100-க்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவானது. அதன்படி நேற்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×