என் மலர்
கிருஷ்ணகிரி
- காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
- கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சூடசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா (60) விவசாயி. இவருக்கு சிக்கம்மா என்ற மனைவியும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
வீட்டில் 2 மாடுகளை வளர்த்து வந்த இவர், இன்று அதிகாலை வழக்கம் போல் மாட்டு கொட்ட கையில் வேலை செய்த போது ஒற்றைக் காட்டு யானை கல்லப்பாவை துரத்தி சென்று தாக்கியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் அறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
கல்லப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூடசந்திரம், ஆச்சு பாலம், கீசனகுப்பம், சத்திரம் தொட்டி, நெல்லு மாறு, அவேறுபள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி அச்சுறுத்தியும் வருகிறது.
காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- இந்தோ- இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தோம்.
- மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்தோம்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது கட்டத்தைத் தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேப்பனஹள்ளி, தளி மற்றும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.
இன்று மாலை வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பெருமளவு கூடியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை பின் வருமாறு:-
ராயக்கோட்டை பகுதி ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். உங்கள் மகிழ்ச்சியே தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை. விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். இங்கு மலர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்கள், காய்கறிகளும் அதிகம் உற்பத்தியாகிறது.
இந்த தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக இந்தோ- இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தோம். மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்தோம். பெங்களூரு சென்று விற்கும் அவல நிலையை மாற்றி இங்கேயே நல்ல விலை கிடைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்தோம். ஆனால், அந்த மையம் அப்படியே பூட்டிக்கிடக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சர்வதேச ஏல மையம் திறக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும், ஒரு கிலோ மாம்பழம் 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மா விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தினோம். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- ராயக்கோட்டையில் 4.10 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
- எடப்பாடி பழனிசாமி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சட்டசபை தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்குகிறது. நாளை 11-ந்தேதி தொடங்கி மறுநாள் 12-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதற்காக நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் தளி, ஓசூர், வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
அதன்படி நாளை 11-ந்தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள காடு செட்டிப் பள்ளிக்கு மாலை 3.40 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை அடுத்து ராயக்கோட்டையில் 4.10 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
தேன்கனிக்கோட்டையில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. ஓசூர் ராம்நகர், சூளகிரி ரவுண்டானா ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் அவர் ஓசூரில் தனியார் தங்கும் விடுதியில் இரவு ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மறுநாள் 12-ந்தேதி காலை 8 மணிக்கு ஓசூரில் புதிய மாவட்ட கட்சி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு அவர் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
இதனையடுத்து ஓட்டலில் சிறுகுறு தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாயிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு மற்றும் தனியார் பள்ளி பிரதிநிதிகள், பில்டர் ஒனர்ஸ் அசோசியசன், நியமன தேர்தலில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு பிரதி நிதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆகியோர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் அவர் 12.30 மணிக்கு முக்கிய விருந்தினர்கள், கூட்டணி கட்சியினரை சந்தித்தும் பேசுகிறார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மாலை 4.30 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்பட்டு சூளகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், டி.பி.ரோடு, காந்தி சிலை வழியாக வந்து அரசு மருத்துவமனையில் இருந்து (ரோடு ஷோ) நடைபயணம் மேற்கொள்கிறார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா வாசவி கேப் அருகில் மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு பர்கூர் எம்.ஜி.ஆர். சிலை அருகிலும், 8.30 மணிக்கு ஊத்தங்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகிலும் மக்களை சந்திக்கிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளன. அ.தி.மு.க.வில் உள்ள பல்வேறு அணிகளின் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ணரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
- குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரலாறு மற்றும் புவியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார், கடந்த ஒரு ஆண்டாக இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழ்நதைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த நேரம் மாணவிகள் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் செல்வதை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
ஓசூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தி.மு.க., அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி, பா.ம.க. அன்புமணி ராமதாஸ் என ஆகிய கட்சியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.
அந்த வரிசையில், தே.மு.தி.க.வும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற சுற்றுபயணம் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தின்னூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
இதில், பொருளாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை முடித்து விட்டு அவர் மாலை 4 மணி அளவில் உத்தனப்பள்ளியில் மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் அவர் ராயக்கோட்டை, சூளகிரி, நெடுசாலை, வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் அவர் இரவு தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தங்குகிறார். இதையடுத்து நாளை மாலை 4 மணி அளவில் பென்னாகரத்தில் மக்களை சந்தித்து பிரேமலதா பேசுகிறார். மறுநாள் மாலை 4 மணி அளவில் அவர் தருமபுரியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
- கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்ச மங்கலத்தில், 100-க்கும் மேற்பட்ட கிரானைட் கம்பெனிகள் உள்ளன. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிரானைட் கற்களை அறுத்து, பாலிஷ் செய்து விற்பனை நடந்து வருகிறது.
கிரானைட் கம்பெனிகளில் பெரும்பாலும், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களை வேலைக்கு அழைத்து வரும் ஏஜென்டாக பீகார் மாநிலம், ஜாம்ஷெட்பூர், வாரிஸ் நகரை சேர்ந்த ராஜேசா (வயது31), என்பவர் இருந்துள்ளார்.
கடந்த வாரம் பர்கூர் அருகே 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மகேஷ் குமார் (25), மதன்குமார் (23), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜேசா, கஞ்சா கடத்துவதில் மூளையாக செயல்பட்டதும், கிரானைட் கம்பெனிகளுக்கு ஆட்களை அழைத்து வரும்போது, கஞ்சாவை கிலோ கணக்கில் கடத்தி வருவதும் தெரிந்தது.
அச்சமங்கலத்தில் ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனையிட்ட போது அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.
- குருபரப்பள்ளி பகுதியில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுடன் சிலர் மீட்கப்பட்டனர்.
- பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்த மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குருபரப்பள்ளி பகுதியில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுடன் சிலர் மீட்கப்பட்டனர்.
பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்த மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
- ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
எட்வின் பிரியன் நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
- கீழ்பள்ளம் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்தான்.
- 2 பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 40), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இளைய மகன் ரோகித் (13), மாவனட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், அவரை காரில் கடத்தி சென்றனர்.
இதையடுத்து, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்தான்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரது சடலத்தை எடுத்துக்கொண்டு அஞ்செட்டி பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கொலை செய்த வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி, சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, சம்பவ இடம் சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டனர்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி சிறுவனை கொலை செய்த அதே ஊரை சேர்ந்த புட்டண்ணன் என்பவரின் மகன் மாதேவன் (21), மாரப்பன் என்பவரின் மகன் மாதேவா (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புட்டண்ணன் மகன் மாதேவன், 20 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் பகலில் காதலியுடன் அங்குள்ள ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார்.
சிறுவன் ரோகித், அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளான். இதை ரோகித் மற்றவர்களிடம் சொல்லி விடுவானோ என நினைத்த மாதேவன், தனது நண்பனான மாதேவாவிடம் கூறினார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காரில் அவனை ஏற்றிக்கொண்டு சென்றனர். அந்த நேரம் அவர்கள் வாங்கி வைத்திருந்த பீரை சிறுவனின் வாயில் ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்துள்ளனர்.
இதன்பிறகு சிறுவனை தேன்கனிக்கோட்டை சாலையில் திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் 50 அடி ஆழ பள்ளத்தில் மேலே இருந்து கீழே தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து மாதேவனுடன் உல்லாசமாக இருந்த அந்த பெண் மற்றும் மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தோண்டப்பட்ட மண்ணை, பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நிரப்பும் பணி நடைபெற்றது.
- போலீசார் கூறுகையில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு அங்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையின் நடுவே மண் தோண்டப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக பணி நடைபெற்று வருகிறது.
இங்கு 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். பணி தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பணி மந்தமாக நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் தோண்டப்பட்ட மண்ணை, பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நிரப்பும் பணி நடைபெற்றது.
அப்போது, அங்கு எலும்பு இருந்ததை கண்டதொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஜூஜூவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், 3 மனித எலும்புகள், பேண்ட் ஒன்றும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அங்கு கிடந்த தொடை எலும்பு மற்றும் கை பகுதி எலும்புகளை சேகரித்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு அங்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஒப்பந்ததாரர் ஜல்லி கற்களை அங்கிருந்து இடமாற்றிய போது அதற்குள் 3 மனித எலும்புகள், மற்றும் பேண்ட் ஒன்றும் இருந்தது தெரியவந்தது.
மனித எலும்புகளை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த இடத்தில் பிணமாக கிடந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறோம். ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காணாமல் போனவர்கள் குறித்தும், பாலம் அமைக்கும் பணியாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
- ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர்.
- என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த வேப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்த பெண் பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தமூர்த்தி மகள் ஷாலினி (வயது25) என்பதும், 8 மாதம் கர்ப்பிணி என்பதும் தெரிந்தது. மேலும் அவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பட்டாவால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஷாலினியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட அவர் கடந்த 19-ந்தேதி முதல் காணவில்லை என்றும், அவரை தேடி வந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர். அதில், பந்திகுறி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (21) மற்றும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவர்களின் செல்போன் எண்கள் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேகநாதனுக்கும், ஷாலினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மேகநாதன் தனது நண்பர் புகழேந்தி உதவியுடன் ஷாலினியை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசாரிடம் கள்ளக்காதலன் மேகநாதன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
பல்லேரிப்பள்ளியை சேர்ந்த ஷாலினிக்கும், வேப்பனஹள்ளி அருகே உள்ள என் தாசிரிப்பள்ளியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அதன் பின்னர் ஷாலினி கணவரை பிரிந்து வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறியை சேர்ந்த தனது முன்னாள் காதலன் ஆஞ்சி (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அதே ஊரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில்தான் ஷாலினிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினி அவரது இரண்டாவது கணவருக்கு தெரியாமல் என்னுடன் தொடர்பில் இருந்து வந்தார். நாங்கள் பலமுறை உல்லாசமாக இருந்ததில் ஷாலினி கர்ப்பமானார். அவர் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் எனது கர்ப்பத்திற்கு நீ தான் காரணம். எனவே நீ என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார். அவரை திருமணம் செய்ய விரும்பாத நான், அவரை ஏமாற்றி வந்தேன்.
ஆனாலும் ஷாலினி என்னை விடவில்லை. என்னுடன் அடிக்கடி செல்போனில் பேசி வாக்குவாதம் செய்து வந்தார். கடந்த 19-ந்தேதி என்னை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் என்று கூறினார்.
ஷாலினி மீது வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக எனது நண்பரான கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவரை அழைத்துக்கொண்டு, கத்தியை மறைத்து எடுத்து சென்றேன்.
நான், ஷாலினி, புகழேந்தி 3 பேரும் ஒரே டூவிலரில் அன்றிரவு 11 மணிக்கு கோனேகவுண்டனூர் வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஷாலினி கூறினார். அப்போது, ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்தினேன். அவர் துடிதுடித்து கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத நான் கர்ப்பிணி என்றும் பாராமல் புகழேந்தி உதவியுடன் ஷாலினியின் கழுத்தில் இருந்த துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி மரத்தில் கட்டி தூக்கிட்டு துடிக்க துடிக்க கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.
ஷாலினியை காணவில்லை என்று அவரது கணவர் ஆஞ்சி மற்றும் குடும்பத்தினர் தேடுவதை அறிந்தேன். போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனாலும் செல்போன் டவர் லோகேஷன் மூலமாக எங்களின் எண்ணை போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கைதான மேகநாதன், புகழேந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவருடன் வாழ்ந்து, பின்னர் வாலிபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் நிறைமாத கர்ப்பிணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேப்பனப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தின் இணைப்பு பகுதி கடந்த 21-ந் தேதி விரிசல் ஏற்பட்டதால், பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வாகனங்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் மேம்பாலத்தில் இணைப்பு பகுதி மேலும் விலகாமல் தடுக்க பாலத்தின் தூணின் மேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி முட்டு கொடுத்தனர்.
பின்னர் பாலத்தில் சோதனைக்காக இலகு ரக வாகனங்களை இயக்க அனுமதித்து, தொடர்ந்து 2-வது நாளாக பொறியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் கூறியதாவது:-
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாலம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் பாலத்தில் வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்று வந்தன.

தற்போது வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பாலத்தின் மீது செல்வதால் பாலத்தில், பால்பேரிங்கி சேதமாகி உள்ளது.
இதுபோல வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் பேரிங் சேதம் இருக்கிறதா என்பது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும்.
ஓசூர் பாலத்தில் இணைப்பு விலகியபகுதி மேலும் விலகாமல் இருக்க மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






