என் மலர்
கன்னியாகுமரி
- பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துடன் திறந்த வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைக்கேற்ப அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
களியக்காவிளை:
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பா்ட் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மேல்பாலை பகுதியில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துடன் திறந்த வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் தாரகை கத்பர்ட் பேசியதாவது, நான் உங்களில் ஒருவராக போட்டியிடுகின்றேன். இயற்கை வளங்களும், பிரசித்திபெற்ற திருக்கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ள பகுதியாக இருக்கின்றது.
நமது மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது நமது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி என்பது பெருமைக்குரிய விஷயம். ரப்பர் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நமது மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் ரப்பர் தொழிற்சாலை நமது விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது பகுதியில் விளையும் முந்திரி, பலா, வாழை, தேன் உள்ளிட்ட பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் வசதிகள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேபோல் ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைக்கேற்ப அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் விளவங்கோடு தொகுதி முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்.
எனவே பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்.பி.க்கும், எனக்கும் (தாரகை கத்பர்ட்) கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், காங்கிரஸ் நிர்வாகி டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
மணவாளக்குறிச்சி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா நடக்கிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம் ஆகியவை நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை போன்றவை நடக்கிறது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
- வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்றிரவு செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 2.3 கிலோ எடை கொண்ட யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானை தந்தத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த புதியவன் (வயது 32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யானை தந்தம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் அவர் விற்பனைக்கு கொடுத்ததாகவும், இதை தூத்துக்குடியை சேர்ந்த இன்னொரு நபர் வாங்க வந்ததாகவும் தாங்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்கள்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்தால் தான் யானை தந்தம் எங்கிருந்து கிடைத்தது? எப்படி வந்தது? என்ற விவரம் தெரிய வரும்.
- தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யபட்டு வருகிறது. பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அணை மூடப்பட்டது. ஆனால் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை ஆகவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்தும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தற்பொழுது பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் கரை புரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. திற்பரப்பு அருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.இதை யடுத்து அந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 619 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.31 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் அணை நீர்மட்டம் கணிசமான அளவு சரிந்துள்ளதால் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.20 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
- கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள்ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை தொடர்ந்து கன்னியாகுமரியில் இன்று காலை "திடீர்"என்று கடல் உள்வாங்கியது. இதனால் கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களுமே நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும் பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. கன்னியா குமரி யில் கடல் "திடீர்"என்று உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல்போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில்காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பால பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு ஏற்கனவே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
- அமைச்சர் , விஜய் வசந்த், மேயர் மகேஷ், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் நடந்த மாபெரும் பிரசார பொது கூட்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவர் பிரசாரத்தில் பேசியதாவது, மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தை விளக்கினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த், மேயர் மகேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் திருமதி தாரகை கத்பர்ட், இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- மேயர் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் MDB திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், குமரி மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், குமரியின் வளர்ச்சி நாயகன், விஜய்வசந்த் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில், கோட்டார் MDB திருமண மண்டபத்தில் மாலை 07.00 மணிக்கு நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய மேயர் மகேஷ் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் அவர்கள், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமின் அன்சாரி அவர்கள், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பார்வையாளர் ராமசுப்பு அவர்கள், காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் அவர்கள், திமுக மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், கம்யூனி்ஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட தலைவர், இராதாகிருஷ்ணன், மற்றும் மாநகர செயலாளர் மற்றும் நாகர்கோவில் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அல்.காலித், இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன், மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் திமுகழக நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மையம், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
- 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரி தற்போது செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. கல்குவாரியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
அந்த பகுதியில் இளைஞர்கள் அவ்வப்போது சென்று குளித்து வந்தனர். பனங்காலைமுக்கு பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ராஜேஷ் (38). இருவரும் நேற்று மாலை கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்கள்.
இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஜெகன், ராஜேஷ் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இரவு இருள் சூழ்ந்து விட்டதையடுத்து தேடும்பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜெகன், ராஜேஷ் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்குவாரியில் குளிக்க சென்ற இடத்தில் நண்பர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
நித்திரவிளை எஸ்.டி.மங்காடு செம்மாவிளை பகுதியை சேர்ந்தவர் பெனடிக் ராஜ் (வயது 42). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ந்தேதி பளுகல் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். பணி முடிந்து 4-ந்தேதி பெனடிக் ராஜ் வீட்டிற்கு திரும்பினார்.
அவர் இருசக்கர வாகனத்தில் நடைக்காவு-சூழல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஓடையில் விழுந்தார். இதில் பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பெனடிக் ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள்.
- தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது?
திருவட்டார்:
குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஓன்றுமே இல்லை. அதை காற்றில் பறக்க விடலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது.
100 நாள் வேலை வாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை புரட்டி போடும் அளவிற்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் உள்ள பல்வேறு வேறுபாடுகள் களையப்படும். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம்முடைய உழைப்பு நமக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கஜானாவில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிகமான சிறு தொழில்கள் அழிந்ததற்கும் ஜி.எஸ்.டி. காரணமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. மறுசீராய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
கல்வியை எடுத்துக்கொண்டால் இன்றைக்கு சைனிக் ஸ்கூல், இந்தியாவினுடைய முக்கியமான பள்ளி. ராணுவத்திற்கு குழந்தைகளை தயாராக்க கூடிய அந்த பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி உள்ளது. அதை சார்ந்த அமைப்புகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அநீதியை செய்தார்கள்.
இதை எல்லாம் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரை பார்த்து சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை.
அவர் தான் மதத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசியுள்ளோமா? 100 சதவீதம் நாங்கள் பேசவில்லை.
மதம் என்பது ஒரு மனிதனுடைய நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை மாறுபட்டதற்கு உட்பட்டது. இன்று ஒரு நம்பிக்கையில் இருப்பான், நாளை ஒரு நம்பிக்கையில் இருப்பான். ஆனால் அந்த மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். இதை யாரும் மறுக்க முடியாது.
முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இதனை செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பொன் ராதாகிருஷ்ணன் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறார்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அதிகமாக செய்ததாக கூறினார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் கொண்டு வரவில்லை. அறிவித்ததோடு நிற்கிறது. அவர்கள் தவறை அடையாளப்படுத்தும் வகையில் தான் செங்கலை தூக்கி பிரசாரம் செய்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அ.தி.மு.க. குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர்கள் வந்து போய் உள்ளனர். அ.தி.மு.க. இயக்கத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று யோசிக்க வேண்டும். 2 கூட்டணியிலும் இல்லாதவர்கள் எப்படி பேசுவார்கள்?.
பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது? ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி உயர்ந்துள்ளது?
தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது? பல மடங்கு பட்டினி சாவு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.
- நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு விஜய் வசந்த் வாக்குகள் சேகரித்தார்.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியும் ஒன்றாகும். தற்போது கன்னியாகுமரி உறுப்பினராக உள்ள விஜய் வசந்த் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி அவர் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில், குமரி மாவட்டத்தின் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு பகுதிக்கு சென்ற விஜய் வசந்த், அதங்கோட்டாசான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னர் அங்குள்ள மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்
இதேபோன்று, நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்குள்ள கடைகள், பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார் விஜய் வசந்த். இந்த பிரசாரத்தின் போது கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ்குமார், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- அமித்ஷா பங்கேற்கும் ரோடு-ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
- அமித்ஷாவின் வருகை குமரியில் திருப்பு முனையாக அமையும் என்றும் பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தக்கலை:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த், அ.திமு.க. சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இதனால் கன்னியாகுமரி தொகுதியில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.
பிரதான கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். இதனால் கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று மேற்கு மாவட்ட பகுதியில் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது கனமழை கொட்டி தீர்த்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியஜெனிபர், பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்து குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தபடி இருக்கின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜி.கே.வாசன் ஆகியோர் பிரசாரம் செய்தார்கள்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளைமறுநாள் (5-ந்தேதி) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தக்கலையில் நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அவர் அழகிய மண்டபத்தில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு-ஷோ செல்ல பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலைய வரையிலான அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரை கிலோ மீட்டர் தூரமே அமித்ஷா ரோடு-ஷோ சென்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அமித்ஷா பங்கேற்கும் ரோடு-ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அமித்ஷாவின் வருகை குமரியில் திருப்பு முனையாக அமையும் என்றும் பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் 11-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் வருகை தர உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் வருகை தர உள்ளதையடுத்து குமரி மாவட்ட தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.






