என் மலர்
கன்னியாகுமரி
- நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நாள்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து நேற்று அவர் திறந்த ஜீப்பில் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தின் போது வேட்பாளர் விஜய் வசந்த் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-
கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வாயால் வடை சுட்டு வருகிறார். (அதனை வெளிப்படுத்தும் விதமாக வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வடையை பொதுமக்களிடம் காண்பித்து, இதுதான் மோடி சுட்ட வடை என்றனர்). நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான் வருகின்ற 19-ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்.
ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும், அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பா.ஜனதா அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும், விவசாயிகளின் விவசாய கடனையும் ரத்து செய்ய மறுத்த பா.ஜனதா அரசு, அதானிக்கும்- அம்பானிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை மேலும், மேலும் பணக்காரர்களாக மாற்றி வருகிறது.
ஆனால் நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும், நமது மண்ணில் ஒற்றுமையாக வாழ நினைக்கும் மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஏமாற்றுவாதிகளை விரட்டி அடிப்பதற்கும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது.
- அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நாகர்கோவில்:
மத்திய மந்திரி அமித்ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு-ஷோவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
நான் கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் பொன்.ராதா கிருஷ்ணன், விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினி ஆகியோருக்கு வாக்குகளை சேகரிக்க வந்த எனக்கு மிகச்சிறப்பான வரவேற்பை தந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தேர்தல் தேசம் முழுவதும் நடக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியினர் மோடிக்காக சிறப்பாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. 3,4 நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் இந்த தேர்தலில் உங்களிடம் கேட்டுக் கொளவது ஒன்றுதான். அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க. சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் கேவலமாக பேசி கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தி உள்ளனர். நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
நான் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறேன். 3-வது முறையாக மோடி பிரதமராக வரும்போது 3-வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தேசம் வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெல்லும் என்கிறார்கள். 400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும். அது பொன்னாரையும் சேர்த்து தான் இருக்க வேண்டும்.
நீங்கள் பொன்னாருக்கு வாக்களிப்பீர்களா... தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துவீர்களா...? விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
- அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாகர்கோவில்:
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அமித் ஷாவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அவர் நேற்று மதுரையில் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்பு அவர் அங்கிருந்து டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்று காலை வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவிலுகு வந்து சேர்ந்தார். நாகர்கோவில் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
அங்கு மத்திய மந்திரி அமித ஷாவை பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து மத்திய மந்திரி அமித் ஷா கார் மூலமாக தக்கலைக்கு புறப்பட்டார்.

தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.
மத்திய மந்திரி ரோடு-ஷோ சென்ற பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் அமித் ஷாவை மலர் தூவி வர வேற்றனர். மேலும் தாமரை பூ சின்னத்தை காண்பித்து உற்சாகப்படுத்தினர்.
தக்கலையில் ரோடு-ஷோவை முடித்துக் கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலமாக மீண்டும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து தக்கலை வரை சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் ரோடு-ஷோ நடந்த பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் நாகர்கோவில்-தக்கலை இடையே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் அனைத்தும் தக்கலைக்கு செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டன.
- குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
- கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.
கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.
அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது.
- பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் பழஞ்சிறை தேவி கோவில் அமைந்துள்ளது.
700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இந்த பிறவியிலேயே துன்பங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவார்.
உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி. ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது.
அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர்.
உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.
முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக.
இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.
நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர்.
இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும் மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலில் பொங்கல் வைபவம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி கோவிலில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்பார்கள்.
இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள். அதே போல் இங்கு நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார்.
கோவிலின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்னோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும்.
பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு 'பஞ்சபூத பொங்கல்' என்று பெயர் பெற்றது. நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கும். இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும்.
விழாவில் ஒவ்வொரு நாளும் சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் 'தோற்றப்பாட்டு' என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலை பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
இந்த பாடலைக் கேட்டாலே அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
2024-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 10.55 மணிக்கு தேவியை பாடி காப்பு கட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித் துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார். மேயர் ஆர்யா ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி வைப்பார்.
திருவிழாவின் முன்னோடியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும், காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்ய கலசாபிஷேகம் நடைபெறும். மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதே போல் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
விழாவையொட்டி, 17-ந்தேதி இரவு 9 மணிக்கு களமெழுத்தும் சர்ப்பபாட்டும், 18-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அஷ்டமங்கல்ய பூஜை நடைபெறும்.
7-ம் திருவிழாவான 19-ந்தேதி அன்று பிரசித்திப் பெற்ற பொங்கல் வழிபாடு நடக்கிறது. அன்று காலை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது.
மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இரவு 7.45 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து. இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி நடக்கிறது.
20-ந்தேதி இரவு 7.40 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
- சித்திரை பொங்கல் வழிபாடு இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.
- பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.
நாகர்கோவில்:
அருமனை அருகே உள்ள ஒற்றயால்விளை மாத்தூர்கோணம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் சித்திரை பொங்கல் வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 7 மணிக்கு தேவி பாராயணம், 10.30 மணிக்கு களபாபிஷேகம், 11 மணிக்கு சமய சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு லட்சதீபம், இரவு 7.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8.30 மணிக்கு சிற்றுண்டி ஆகியவை நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் நிர்மால்யம், உஷபூஜை, தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுமங்கலி பூஜை, 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 15-ந் தேதி மாலை 4 மணிக்கு பூநீர் கும்ப பவனி, இரவு 2.30 மணிக்கு குருதி பூஜை ஆகியவை நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு துலாபாரம், 8.30 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு சித்திரை பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வலியபடுக்கை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.
- ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது.
- பக்தர்கள் கொடிக் கயிறு, சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது. இதனையொட்டி ஆற்றூர் அருகே பள்ளிக்குழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலில் இருந்து பக்தர்கள் கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டனர்.
மேலும் முத்துக் குடை, தாலப்பொலியுடன், நாராயணா நாராயணா என்ற மந்திரம் முழங்க கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக சென்று ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு சென்றனர். கொடி கயிறை அர்ச்சகர் கருவறையில் பூஜையில் வைத்தார்.
திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் வலம் வருதல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 10-ம் நாள் திருவிழாவில் சுவாமி ஆராட்டு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.
- இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும்.
- ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் நாகர்கோவில் மாநகர வார்டுகளில் வாக்குகள் சேகரித்தார். பெருவிளை பள்ளிவாசல் அருகே இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசார பயணத்தை தொடங்கிய அவருக்கு கூட்டணி கட்சியின் சார்பில் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்தும், ஆளுயர மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் பார்வதிபுரம், ஆசாரிபள்ளம், எறும்புகாடு, மேலசூரங்குடி, குருசடி, கோணம், செட்டிகுளம், மறவன்குடியிருப்பு, இருளப்பபுரம் போன்ற மாநகராட்சி பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மேலும் பீச் ரோட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசார பயணத்தை நிறைவு செய்தார். அவருடன் மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக அய்யா வழி அன்பு கொடி மக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் விஜய் வசந்த் பேசுகையில் கூறியதாவது:-
எனது தந்தை வசந்தகுமார் மறைவிற்கு பிறகு அவரின் கனவுகளை தொடர்ந்து செய்வதற்கும், குமரி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் 2½ ஆண்டுகள் ஒலிப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தீர்கள். குமரியில் முடக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்களை பல்வேறு இடையூறுகளுக்கு இடையே கொண்டு வந்துள்ளேன். என் தந்தை இறுதி வரை குமரி மக்களுக்காகவே வாழ்ந்தார். இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உழைத்தார்.
ஆனால் தற்போது அவர் நம்மிடம் இல்லை. அவரின் கனவை நனவாக்க வேண்டும் என்பது ஒரு மகனாகிய எனது கடமை. எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.
20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலை, ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் டவுன் ரெயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்துள்ளேன்.
நான் மக்களுக்கு விரோதமான திட்டங்கள் எதையும் குமரி மண்ணில் அனுமதிக்க மாட்டேன், அதற்காக தொடர்ந்து போராடுவேன். அரசு போட்டித் தேர்வு எழுதுவதற்கு உதவியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தோவாளையில் மலர்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு மற்றும் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.
- 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.
கொல்லங்கோடு:
தமிழக-கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் இருவரும் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தூக்கக்காரர்கள் குளித்து முடித்ததும் கோவிலை சுற்றி முட்டு குத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலாவதாக அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்க தேரில் அம்மன் தூக்கம் நடத்தப்பட்டது. பிறகு வரிசையாக ஒவ்வொரு தூக்கமும் நடத்தப்பட்டது. இதற்காக ஒன்று முதல் 50 வரை உள்ள தூக்கக் காரர்கள் கோவிலில் வரிசையாக காத்திருக்க, மீதமுள்ள தூக்கக்காரர்கள் கச்சேரிநடை பகுதியில் உள்ள தறவாடு வீட்டிற்கு சென்று உடல் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் குத்தி வாளும் பரிவட்டமும் வாங்கி ஊர்வலமாக திருவிழா கோவிலை வந்தடைந்தனர்.
திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு குழந்தைபேறு கிடைக்கப் பெற்றால் அவ்வாறு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டி இந்த கோவிலில் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர் இதற்காக வடிவமைக்கப்பட்ட 48 அடி உயர தேரில் தூக்கக்காரர்கள் தொங்கியபடி நான்கு குழந்தைகளை தூக்கியபடி ஒரு முறை கோவிலை சுற்றி வலம் வர தூக்க நேர்ச்சையானது முடித்து வைக்கப்படுகிறது.

இந்த தூக்க நேர்ச்சை நள்ளிரவு நேரத்தையும் கடந்து சென்றது. அந்த வகையில் மொத்தம் 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.
இந்த திருவிழாவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்க நேர்ச்சையானது நடத்தப்பட்டது.
தூக்க திருவிழாவை காண குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது. திருவிழாவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சசிகுமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார், உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீ குமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உள்பட கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.
- பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார்.
- பங்குனி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
நாகர்கோவில்:
பைங்குளம் அருகே கீழமுற்றம் பகுதியில் உள்ள நெடுவிளை பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை நண்பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம், பஜனை, மாலை லட்சுமி பூஜை ஆகியவை நடக்கிறது.
பங்குனி திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்கள் தினமும் காலை நவ கலச பூஜை, அம்மனுக்கு பால் மற்றும் கலசாபிஷேகம், உஷபூஜை, சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, தீபாராதனை, இரவில் சிறப்பு பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 13-ந் தேதி சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், இரவு சமய மாநாடு, 14-ந்தேதி பால்குட ஊர்வலம் தொடர்ந்து அம்மனுக்கு நெய், தேன், தயிர், பால், இளநீர் அபிஷேகம், 15-ந் தேதி அம்மனுக்கு களபாபிஷேகம், இரவு மகளிர் சமய வகுப்பு மாநாடு, பரிசு வழங்குதல், 16, 17-ந் தேதிகளில் அம்மனுக்கு குங்குமம், சந்தனத்தால் அபிஷேகம், 18-ந் தேதி இரவு அம்மனுக்கு பூப்படைப்பு, நள்ளிரவில் சிறப்பு பூஜை, 19-ந் தேதி காலை அம்மனுக்கு பூப்படைப்பு, பகலில் இசக்கியம்மன் கோவில் நேர்ச்சைகள், இசக்கியம்மனுக்கு பூப்படைப்பு, சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
- பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது.
- கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டுகட்டி தரிசனம் செய்வதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு கடந்த மாதம் 3-ந் தேதி மாசிக்கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.
தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த பூஜை மாசி திருவிழாவின் ஆறாம் நாள், மீனபரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும்தான் இந்த பூஜை நடத்தப்படும்.
வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல் பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலியபடுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன.
- பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
- கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து மாலை தீபாராதனைக்கு முன்னதாக கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.
பின்னர் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் பவனி வருதலும், விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
16-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 20-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் இறுதி நாளான 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்காக கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச் சென்று ஆராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சுவாமி மீண்டும் கோவிலுக்கு புறப்படுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.






